சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில்...
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 99.76 சதவீதம் பேர் தேர்ச்சி
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் 99.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbseresults.nic.in) வெளியிடப்பட்டன. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட சென்னை மண்டலத்தில் தேர்ச்சி நிலை குறித்து மண்டல உதவிச் செயலாளர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 33,485 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு தேர் வெழுதியிருந்தனர். அவர்களில் 33,405 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 99.76 சதவீதம் ஆகும். இதேபோல், புதுச்சேரியில் 1,196 பேர் தேர்வெழுதியதில் 1185 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி 99.08 சதவீதம்.
சென்னை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 76 பேர் தேர்வெழுதியதில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வி அடைந்தவர்கள் 1,382 பேர். தேர்ச்சி விகிதம் 99.03 சதவீதம் ஆகும்.
மாணவர்களுக்கான தகுதிச் சான்றிதழ் 15 நாட்களில் வழங்கப்படும். தோல்வி அடைந்த மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூலை மாதம் நடத்தப்படும். இதற்கு 29-ம் தேதி (இன்று) முதல் ஜூன் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அபராத கட்டணத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி ஆகும்.
இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
கிரேடு முறை
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பை பொறுத்தவரையில், மாநில பாடத்திட்டம் போன்று சான்றிதழ்களில் மதிப்பெண் விவரம் குறிப்பிடப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்ப குறிப்பிட்ட கிரேடு வழங்கப்படும்.
எந்தெந்த மதிப்பெண்ணுக்கு என்னென்ன கிரேடு என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
91 முதல் 100 வரை - ஏ 1 கிரேடு
81 முதல் 90 வரை - ஏ 2 கிரேடு
71 முதல் 80 வரை - பி 1 கிரேடு
61 முதல் 70 வரை - பி 2 கிரேடு
51 முதல் 60 வரை - சி 1 கிரேடு
41 முதல் 50 வரை - சி 2 கிரேடு
33 முதல் 40 வரை - டி கிரேடு
மேற்கண்ட மதிப்பெண்ணுக்கு கீழே என்றால் இ 1, இ 2 கிரேடு வழங்குகிறார்கள்.
இந்த கிரேடு பெற்ற மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.