சிறுவனின் கண்ணில் புழு: துளசி வாசம் மூலம் அகற்றி...
சிறுவனின் கண்ணில் புழு: துளசி வாசம் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை
பெரு நாட்டில் 17 வயது சிறுவனின் கண்ணில் வளர்ந்து வந்த ஒரு அங்குல நீளம் கொண்ட புழு, துளசியின் உதவியோடு மருத்துவர்களால் வெற்றிகரமாக வெளியே எடுக்கப்பட்டது.
பெரு நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனது கண்ணின் இமைக்கு கீழே வீக்கம் இருந்து வந்தது. நாள்பட்ட அளவில் வீக்கம் அதிகமாவதும் அதனால் சிறுவனுக்கு வலியும் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவரது பெற்றோர் கண் மருத்துவரிடம் சிறுவனை அழைத்துச் சென்றனர்.
மருத்துவர்கள் மேற்கொண்ட பல சிகிச்சைகள் தோல்வியடைந்ததை அடுத்து, சிறுவனுக்கு எம்.ஏர்.ஐ. சோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுவனது கண்ணின் கீழ்ப்பகுதியில் உயிரிடன் புழு இருப்பது தெரியவந்தது. அளவில் பெரியதாக இருந்த அந்த புழு சிறுவனின் கண்ணில் சுமார் ஒரு மாதமாக வளர்ந்து வந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கண்ணில் மெல்லிய திசுக்கள் இருக்கும் இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது சிறுவனின் மூளை வரை அல்லது கண் பார்வையைப் பாதிக்கும் என்பதால் பல்வேறு மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளின் இடைப்பட்ட காலத்தில் புழுவின் அளவு மேலும் பெரிதாகி, சிறுவனின் கண் ஓரத்தில் புழுவின் தலை பாகம் வெளிப்பட்டது.
இதனை அடுத்து சிறுவனின் ஆபத்தான நிலையை உணர்ந்த பெரு கண் மருத்துவர் கரோலினா மார்ஷெனெ, துளசி இலையின் மூலமே இதற்கு பாதுகாப்பான சிகிச்சை அளிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.
பெருவின் தேசிய குழந்தைகள் மருத்துவமனையில் சிறுவனுக்கு மிகவும் சிக்கலான இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக, மருத்துவர்கள் கணித்தவாறு துளசியின் வாசம் சிறுவனின் கண்ணில் இருந்த புழுவை ஈர்த்தது. பின்னர் வழக்கமான முறைப்படி கண்ணில் இருந்த புழுவை வெளியில் முழுவதுமாக மருத்துவர்கள் வெளியேற்றினர்.
சிறுவனின் கண்ணில் இருந்து உயிருடன் அகற்றப்பட்ட புழு 1 அங்குல நீளத்திலும் 1.5 செ.மீ அகலத்திலும் இருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை பெரு தேசிய குழந்தைகள் மருத்துவமனை வெளியிட்டது.
சிறுவனின் கண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட புழு, கொசுவை உருவாக்கும் புழு என்றும், கொசு சிறுவனை கடிக்க வந்தபோது அதன் முட்டை கண்ணில் விழுந்து பின்னர் புழு வளர்ந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.