ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அருள்மொழி வர்மன் (ராஜா...
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அருள்மொழி வர்மன் (ராஜா ராஜா சோழன்) என்கிற நமது பாட்டன் இந்த தஞ்சை கோயிலை கட்டிமுடித்த பொழுது அதற்காக நன்கொடை அளித்தவர்கள் அனைவரின் பெயரையும் கோவிலின் சுவர்களில் பொரிக்க சொன்னாராம் என்று படித்திருக்கிறேன். அவ்வாறே செய்தும் உள்ளார்கள்.
ஆனால் நம்மில் சிலர் அப்படி என்ன நன்கொடை அளித்தார்கள் என்று தெரியவில்லை கோவில் சுவர்களில் தங்களுடைய பெயரையும் இலவச இணைப்பாக தங்களுடைய காதலியின் பெயரையும் எழுதுவதில் அத்துனை ஆனந்தம் அடைகிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் தங்களுக்கு பிடிக்காத பெண்களின் தொலைபேசி இலக்கங்களை எழுதிவைக்கிறது இன்னொரு கூட்டம்.இது தஞ்சை பெரியகோவில் என்று மட்டுமில்லை தமிழகத்தின் முக்கிய வழிபாட்டு தளங்கள், சுற்றுலா தளங்கள், வரலாற்று பொக்கிசங்கள்,பேருந்து இருக்கையின் பின்புறம், பொது கழிப்பிட சுவர்கள் என்று ஒரு இடத்தையும் இவர்கள் விட்டுவைப்பதில்லை.
இதில் நகைப்பிற்குரிய இன்னொரு விடயம் என்னவென்றால் எழுதவும் படிக்கவும் தெரியாத பாமரன் இதை செய்வதில்லை. நன்கு படித்த மேதைகள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும் அறிவிலிகளே இதனை செய்கிறார்கள். நம்முன்னோர்களின் கலைபடைப்புகளின் மீது மேற்கத்திய நாட்டவர்களுக்கு இருக்கும் ஈர்ப்பும்,மரியாதையும் கூட இந்த அறிவிலிகளுக்கு இருப்பதில்லை என்பதுதான் வேதனை. இதை பல இடங்களில் நான் கண்ணாலே கண்டிருக்கிறேன்.
இன்று நாம் என்னதான் முயன்றாலும், நம்மிடம் இருக்கும் உயர்ந்த அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் நம் முன்னோர்கள் படைத்த கலைவடிவங்களில் ஒன்றை கூட செய்ய இயலாது என்பதுதான் நிதர்சனம். எனவே அன்பு நண்பர்களே இனி உருவாக்க இயலாவிடினும் இருப்பதை அழியாது காக்க முயல்வோம்.
இங்கே மற்றுமொரு சம்பவத்தை உங்களுடன் வேதனையோடு பகிர விழைகிறேன்.
ஒருமுறை நான் மகாபலிபுரம் சென்றிருந்த பொழுது அங்கே மஹிஷாசுர மர்த்தினி மண்டபவத்தின் உள்ளே ஒரு இளைஞன் தன்னுடைய காதலியை(??) தனது மடியில் படுக்க வைத்துக்கொண்டு எதோ ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு தனது மனைவியுடன் வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் (ஜெர்மனிகாரர் என்று நினைக்கிறேன்) மண்டபத்திற்கு வெளியே தனது காலனியை கழட்டி வைத்துவிட்டு அவர்களை அணுகி முதலில் தான் அவர்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பிறகு தான் சில புகைப்படங்கள் எடுக்கவேண்டும் என்றும் அதுவரை அவர்கள் சற்றுவிலகி நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதை கேட்டு சற்றும் வெட்கமின்றி அவர்கள் இருவரும் விலகி நின்றனர். பத்துக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை மிகவும் ஆர்வமுடன் எடுத்துக்கொண்ட அந்த வெளிநாட்டுக்காரர் மறுபடியும் அந்த இளைஞனை அணுகி இப்பொழுது நீங்கள் உங்கள் வேலையை தொடருங்கள் என்றும் நன்றி என்றும் கூறிவிட்டு சென்றார். மீண்டும் அந்த இளைஞன் கொஞ்சமும் வெட்கமின்றி தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான் வாயடைத்துப்போய் நின்றேன். இப்பொழுது கூறுங்கள் யார் நமது முன்னோர்களின் கலைப்படைப்புகளை உண்மையாக மதிப்பது????