இரவு தூங்கத் துவங்கும் பொழுது |~|~| வடிவில் தாத்தா-பேத்தி-பாட்டி...
இரவு தூங்கத் துவங்கும் பொழுது |~|~| வடிவில் தாத்தா-பேத்தி-பாட்டி வரிசை இருக்கும் . சிறிது நேரத்தில் நிலமை 1-/-1 இப்படி மாறும். நடு இரவில் தோன்றிய கனவில் பேத்தி ஒரு உரத்த குரல் கொடுத்த பின் தாத்தாவின் வயிற்றில் தலையால் ஒரு முட்டும் பாட்டிக்கு காலாலும் கிட்டும். கட்டிலில் நிலமை |--| போல் மாறும்.... அதன் பிறகு தாத்தா பாட்டி தொடர்ந்து விளிம்புக்குத் தள்ளப் படுவர்.... நான்கு நபர் தாராளமாக படுக்கக் கூடிய பெரிய கட்டிலில் இருவர் நிலை கவலைக்கிடம். இன்னும் ஒரு முட்டு முட்டினால் தாத்தா கீழே விழுவார் என்ற நிலையில் தாத்தா உறக்கம் கலைந்தார்.
உங்களுக்குத்தான் தெரியுமே தாத்தா சீக்கிரம் எழுந்தால் என்ன செய்வார் என்று.., அதான் எழுத ஆரம்பித்து விட்டார். இவர் எழுதுவதைப்
பார்த்தால் பார்க்கட்டும்
படித்தால் படிக்கட்டும்
பகிர்ந்தால் பகிரட்டும்
கருத்து உரைத்தால்
உரைக்கட்டும் சிலர்
புரிந்தால் ரசிக்கட்டும்
புரியாமலும் ஒதுக்கட்டும்
எவர் மனதையும் நோகாமல்
எழுதும் வரை இனிதே
சிலர் சிறிது மகிழ்ந்தாலே
சிந்தனைக்கு நிறைவே!
ஆனால் எழுதுவது என்பது நம்முள் உள்ள எண்ண அலைகளின் வெளிப்பாடோ...
அலைகள் வெளியேற வெளியேற இறுதியில் ஓய்ந்து மனம் அமைதிப் பட்டுவிடுமோ....
எதையும் எதிர்பாரா நிலைக்கு இட்டுச் செல்லுமோ....
காலம்தான் விடை தரும்....!
-------- முரளி