இன்று முகநூலில் உள்ள ஒரு பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்வி...
இன்று முகநூலில் உள்ள ஒரு பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லியே கடுப்பாகி இந்த பதிவை இடுகிறேன்.
கேள்வி ஒன்றும் புதிது இல்லை. இன்று நம் சமுதாயத்தில் நடக்கும் வன்புணர்ச்சிக்கு காரணம் பெண்களின் ஆபாச ஆடையா? இல்லை ஆண்களின் வக்கிர புத்தியா?? என்பதே....
பெரும்பாலான ஆண்களின் பின்னூட்டம் பெண்களின் ஆபாச ஆடையே காரணம் என்று இருந்தது....!!
சரி, இங்கே எனக்கு சிறுவயதில் ஏற்ப்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு அதற்க்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
நான் ஹிந்து யாதவ குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயது முதலே எங்கள் வீட்டில் ஆடுகள், மாடுகள் வளர்வதை கண்டிருக்கிறேன். நானும் சிறு வயதில் எங்கள் வீட்டு மாடுகளை மேயத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட எருமை கிடேரி ( இரண்டரை வயது இருக்கும்) ஒன்று பருவம் அடைந்ததாக கூறி கால்நடை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்று சினை ஊசி போட்டு ஓட்டிவந்தார் எனது தந்தை.
மூன்று மாதம் கழிந்தபிறகு ஒருநாள் அந்த கிடேரி அடங்காமல் இருப்பதாகவும், சிறிது வலு அடித்திருப்பதாகவும் கூறி ( சரியாக மேயாமல், மற்ற மாடுகளை முட்டிக்கொண்டும், தொழுவத்தில் அதம் செய்துகொண்டும் இருக்கும் இருந்ததாக ) ஊசிக்கு சினை பிடிக்கவில்லையோ என்று கருதி இந்தமுறை காளைக்கு கட்டவேண்டும் என்று முடிவெடுத்து பக்கத்து ஊருக்கு ஓட்டிச்சென்றார். நானும் கூட சென்றிருந்தேன்.
பெரிய இரண்டு புளிய மரங்களுக்கு இடையில் அதனை கட்டி, மூன்று பேர் வலுவாக பிடித்துகொண்டனர். நான் தலை கையிற்றை பிடித்துக்கொண்டேன். காளைக்காரர் காளையை கூட்டிவந்து அணைவதற்கு தயார் செய்தார், மாட்டுக்கு அருகில் வந்த அந்த காளை அதன் பெண்ணுறுப்பை முகர்ந்து பார்த்துவிட்டு சட்டென்று விலகி நின்றது. இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அதையே திருப்பி செய்தது......!!!
அப்பொழுது காளைகாரர் கூறினார் மாடு சினைப்பா.....!!!! ஓட்டிட்டு போங்க....!!!!
இதை அப்பொழுது என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லை. அனால் சிலவருடங்களுக்கு பிறகு நான் புரிந்துகொண்டது காளைகள் மாட்டின் சிறுநீரை முகர்ந்து அது இனப்பெருக்கத்திற்கு தயார என்று கண்டுபிடிக்கிறது என்பதே. இப்பொழுது கூறுங்கள் அந்த காளைமாடு நினைத்திருந்தால் அந்த மாட்டை அணிந்திருக்க முடியுமா?? முடியாத?? மூவரின் வலுவான பிடியிலிருந்தும், இரண்டு புளிய மரங்களுக்கு இடையில் போடப்பட்ட கிடுக்கியில் இருந்தும் அந்த மாட்டினால் முண்டகூட முடியாது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த செய்தி நெஞ்சை உறைய செய்தது : தனது ஆட்டோவில் பயணம் செய்த ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை தனது நண்பர்களுடன் கற்பழித்த ஒரு நபர், இதோடு என்னை விட்டுவிடுங்கள் நான் யாரிடமும் கூறமாட்டேன், எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் என்று கூறி காலில் விழுந்து அழுதபிறகும் அவருடைய கழுத்தை அறுத்துக் கொன்றதாக தனது வாக்குமூலத்தில் கூறினார். இவர்கள்தான் நாம் கூறும் ஆறறிவு உடைய மனிதர்கள்....
இங்கே என்னுடைய வாதம் அந்த ஐந்தறிவு காளை மாட்டை விடவும் கேவலமாக இன்று நம் சமுதாயத்தில் சில ஆண்கள் உள்ளனர் என்பதே. பள்ளி மாணவியை, பெண் குழந்தைகளை என்று மட்டும் இல்லை கருவுற்ற பெண், மாற்றுத்திரநாலி பெண், மனநிலை பாதிக்கப்பட்ட பெண், மூதாட்டி வரை வன்புணர்வுக்கு ஆளாகத பெண்களே இல்லை.
காரணம் பெண்கள் அணியும் ஆபாச உடைகளாம்.... தூ....