எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானை முட்டுவதுபோல, ஓங்கி வளர்ந்த பாக்கு மரத்தின் உச்சியில்...

வானை முட்டுவதுபோல, ஓங்கி வளர்ந்த பாக்கு மரத்தின் உச்சியில் இருந்த கொட்டைகளைத் தின்ற குரங்குகள், அப்படியே தாவிக் குதித்து தென்னை மரத்தில் இறங்கின. தென்னையின் இளநீரைப் பருகிவிட்டு அங்கிருந்து தாவிய குரங்குகள் கீழே இருந்த பலா மரத்தைப் பற்றிக் கொண்டன. அதிலிருந்த பலாப் பழங்களைத் தின்றுவிட்டு, அங்கிருந்து தாவி அருகே இருந்த வாழை மரத்தில் குதித்தன. வாழைக் குலைகளைத் தின்றுவிட்டு, அருகே ஓடிய சுனையில் நீர் பருகின.”– இது பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள காடு குறித்த விவரணை. இவ்விதமான விவரணைகளைப் பல இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

இதே குரங்குகள்தான் காடுகளுக்குச் செல்லும் சாலைகளின் ஓரங்களில் அமர்ந்து கை நீட்டிக் கொண்டுள்ளன. அச் சாலையில் பறக்கும் வாகனங்களில் உள்ள மனிதர்கள் வீசி எறியும் பாப் கார்ன் பொட்டலங்களையும் ரொட்டித் துண்டுகளையும் வாரி இழுத்துச் சென்று பசியாறுபவை இந்தக் குரங்குகளேதான். காட்டு உயிர்களையும் பிச்சை எடுக்க வைக்க முடியும் என்பதுதான் மனித அறிவின் அரும் பெரும் சாதனை என நான் நினைக்கிறேன். கோயில் யானைகளை சில்லறைக் காசுகளுக்காகவும் சில வாழைப் பழங்களுக்காகவும் தெருதெருவாக அலைய வைப்பதும் மனித அறிவின் சாதனைகள்தான்.

இறையாற்றலால் படைக்கப்பட்ட காடு அழிக்கப்பட்டால் வளம் அழியும், பணம் பெருகும். வளமை என்பது எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்வதற்கான வழி. பணப் பொருளாதாரமோ மிகச் சில மனிதர்களை மட்டுமே மகிழ்ச்சியுறச் செய்து, பிற உயிரிகளை ஒழிக்கும் வழி.

உலகின் இயல்பை உணர்ந்தோர், ‘பொருளாதார வசதிக்கு ஆசைப்படு’ என்று கூற மாட்டார்கள். ஏனெனில், அந்த வசதி எவரை வந்தடைகிறதோ அவரை அழிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும், அந்த வசதி உருவாகும்போதே பல உயிர்களின் வாழ்வைப் பறித்துவிட்டு, தான் செல்லும் வழியெங்கும் எண்ணற்ற உயிர்களைப் பலியிட்டுக் கொண்டிருக்கும்.

தென் அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளைக் குவியல் குவியலாகக் கொன்று குவித்தவன்தான் கொலம்பஸ். அப் பழங்குடிகளின் காடுகளில் ஓடிய ஆற்று நீரில் தங்கத் துகள்கள் இருந்தன. அவர்களுக்கு அறிவு இல்லை என்பதால், அவர்கள் தங்கத்தை நகையாக்கவில்லை. ஆனால், அறிவு வளர்ந்த ஐரோப்பியர்களின் பிரதிநிதியான கொலம்பஸ், அந்த ஆறுகளில் பழங்குடிகளை இறங்கச் செய்து தங்கத் துகள்களைக் கொள்ளையிட்டான். மறுத்தவர்களை எல்லாம் படுகொலை செய்தான். இந்தக் கொடுமைகளுக்கு அஞ்சிய பெண்கள் தங்கள் குழந்தைகளோடு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆப்பிரிக்கக் காடுகளில் வைரம் தோண்டப்பட்டபோது இதுதான் நடந்தது. இப்போதும் பொருளாதாரத்தைப் பெருக்கும் எல்லாப் பொருட்களுக்காகவும் படுகொலைகள் நடக்கத்தான் செய்கின்றன. தங்கம், வைரம் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஆசைகளை வளர்த்துக் கொண்டே செல்லும் இச்சமூகம் கணந்தோறும் நிகழும் கொலைகளில் தன்னை அறியாமலேயே பங்கெடுக்கிறது.

இது படைப்பின் விருப்பத்திற்கு எதிரானது. ஆனால், பேராசைகளுக்கு நெருக்கமானது. இந்த உண்மையை உரைக்காமல், உங்கள் ஆசைகள் அனைத்தையும் ஆதரிக்கும் எந்தக் கருத்தும் உங்களைப் பாவக் குழியை நோக்கித்தான் நகர்த்தும். இப்படிக் கூறுவதற்காக, என் மீது கோபம் கொண்டு இந்தப் புத்தகத்தை வீசி எறிந்தாலும் நான் கவலையோ அவமானமோ அடையமாட்டேன். ஏனெனில், நான் பேராசை கொண்ட மனிதர்களுக்காக எழுதவில்லை. நல்ல விருப்பங்கள் கொண்ட மனிதர்களுக்காக எழுதுகிறேன்.

நகைகள் மட்டுமல்ல, நவீன சமூகம் உருவாக்கி வைத்துள்ள எல்லாப் பொருட்களின் மீதான ஆசைகளைக் குறைத்துக் கொண்டே போவது விருப்பத்தில் வாழும் வழி. இது ஒரே நாளில் நிகழாது. ஆனால், ’வாழ்வின் ஏதேனும் ஒரு கணத்திலிருந்து இப்படியான வாழ்க்கை எனக்குக் கிடைக்க வேண்டும்’ என நீங்கள் விரும்ப வேண்டும். ’வளமாக வாழ வேண்டும்’ என்பது விருப்பம். ‘பணக்காரராக வாழ வேண்டும்’ என்பது ஆசை. வளமை பேராற்றலின் படைப்பு. ஆசைகள் மனித அறிவின் உருவாக்கம்.

இந்த உண்மைகளை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால் நீங்கள் மாயையைப் புரிந்துகொண்டீர்கள் எனப் பொருள். 

நாள் : 17-Sep-15, 6:26 am

மேலே