எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முடியாது - ஈரோடு தமிழன்பன் நதி நடக்க மறுத்தாலும்...


முடியாது
- ஈரோடு தமிழன்பன்

நதி
நடக்க மறுத்தாலும்
வெள்ளம் நிற்காது!

தேதி
கிழிபட உடன்படாவிட்டாலும்
அடுத்த தினத்தைத்
தடுக்க யாரால் முடியும்?

கிளை
ஒன்றை வெட்டிய
உனக்கு எதிராக
வேர்களின் தீர்மானத்தில்
நூறு கிளைகள்
நிறைவேறும்!

குழல்களை
உடைத்தெறிவது
சுலபமாகலாம் உனக்கு!

காற்றில் கலக்கும்
இசையைக்
காயப்படுத்த முடியுமா?

கண்களை
இறுகக் கரங்களால் நீ
மூடிக்கொண்டாலும்
உண்மைகள்
இருண்டு போவதில்லை!

நாட்குறிப்பேட்டில்
ஞாபகங்களை அழித்துவிடலாம் நீ!
மனத்தில் அவை ஊன்றிய
விதைகளை எந்த
விரல்களால் வெளியே
எடுத்து எறிவாய்?

வினா எழுப்பும்
மனச்சான்றை நாடு கடத்தி விடலாம்!
ஆனால் அது,
உன் ஆன்மாவின்
கதவைத் தட்டுமே ஒருநாள்!
அப்போது என்ன செய்வாய்?

("நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்" கவிதைத் தொகுப்பிலிருந்து)

*******

பதிவு : myimamdeen
நாள் : 27-Feb-14, 8:49 am

மேலே