கவிக்கோ பவள விழா - சிறு தொகுப்பு -...
கவிக்கோ பவள விழா - சிறு தொகுப்பு - பாகம் - 2
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணிம் அவர்கள்தான் முதலில் தமது வாழ்த்துரையை வழங்கிட வந்தார். கவிக்கோ அவர்களை வணங்கி
"அனுபவங்களின்
சித்திரப் பேழை
முதுமை"
என்று முதுமையின் சிறப்பைப் பற்றி கூறி கவிக்கோ அய்யாவினை ஒரு சித்திரப் பேழையாக்கினார்.
"புவிக் கோளத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த கவிக்கோவிற்கு உண்டு" என்று அவர் கூறிய போது கரகோஷங்கள் அரங்கெங்கிலும்...
திரு அசோகன், தி இந்து, தமிழ் நாளிதழ் ஆசிரியர் அவர்கள் கவிக்கோ அய்யாவை வாழ்த்திப் பேசுகையில் "இவர் தமிழ் அறிஞர் மட்டுமில்லை... தமிழ் அறிஞர்களை அறிந்த அறிஞர். மிகவும் மரியாதைக்குரிய பேரறிஞர் தமது எழுத்து வன்மையால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்" என்று அய்யா அவர்களைப் பாராட்டிப் பேசி அவரை வணங்கி விடை பெற்றார்.
நேரம் காலத்தை கருத்தில் கொண்டும் அனைத்து அறிஞர்களும் அய்யாவை பாராட்டவும் வாழ்த்தவும் ஒவ்வொருவருக்கும் முதலில் 5 நிமிடங்கள் வழங்கப் பட்டது. பிறகு அந்த நேரமும் குறைக்கப்பட்டு 3 நிமிடங்களாக சுருங்கி விட்டது. முனைவர் அவ்வை நடராஜன் அய்யா அவர்களுக்கு மட்டும் அய்யாவை பாராட்ட வரையறை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அய்யாவின் பெருமைகளைக் கூற அரங்கமே அமைதியில் ஆழ்ந்து அவருடைய அந்த கம்பீரமான சொற்பொழிவினில் இலையித்திருந்தது என்பதனை நான் எப்படி என்று விவரிக்க இயலும்...?? மிக அழகாக பிசிறின்றி இப்படி கம்பீரமான குரலில் தொடர்ந்து இப்படி இந்த வயதில் பேச இயலுமா..?? ஆச்சர்யப்பட்டுப் போனேன்.
கவிக்கோ அவர்களின் திருமணதிற்கு அவ்வை நடராசன் அய்யா சென்றபோது அங்கே எங்கே சைவ சாப்பாடு கிடைக்கப் போகிறது என்று நினைத்தவருக்கு ஆச்சரியப் படும் வகையில் சைவ உணவு பரிமாறப்பட்டதாம். இஸ்லாமியர் இல்லத் திருமணங்களில் எல்லாம் முன்பெல்லாம் அசைவ உணவு மட்டுமே விருந்தளிக்கப்பட்ட காலம் அது. அப்படி இருந்தும் சைவ உணவு உண்பவர்களுக்காக சிறப்பான முறையில் உணவு தயாரிக்கப் பட்டிருந்ததை நினைவு கூர்ந்து கவிக்கோ அவர்களின் விருந்தோம்பலை போற்றி மகிழ்ந்தார். அய்யா அவர்களின் விருந்தோம்பலை பெருமைப் படுத்திக் கூறிய தோடு பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய வாசகத்தை எடுத்துரைத்தார்
"விழுகின்ற போது
விதையை போல் விழு
தொழுகின்ற போது
அறிவையே தொழு "
என்று கூறி, கவிக்கோ அவர்கள் அப்படி தொழத்தக்க பேரறிவாளர் என்றும் வணங்குதற்கு உரியவர் என்றும் பெருமை படுத்தினார்.
கவிக்கோ அவர்கள் ஆசிரியராக இருந்த போது ஆயிரம் மாணவர்களையாவது கவிஞர்களாக மாற்றியிருப்பார் என்று கூறியதோடு அய்யா அவர்கள் வாழ்ந்த ஊரான வாணியம்பாடியைப் பாடுகையில்,
"வாணியம்பாடி அல்ல
கவிஞர்கள் வாழும்
கானம்பாடி அது "
என்று கூறுகையில் கவிக்கோ அவர்கள் எவ்வளவு கவிஞர்களை உருவாக்கி இருந்தால் நடராசன் அய்யா அவர்கள் வாணியம்பாடியை இவ்வாறு கூறியிருப்பார்... நடராசன் அய்யா அவர்களின் இப்படிப் பட்ட பேச்சும் எனக்கு ஒரு குயில் வந்து பாடிவிட்டுச் சென்றதாகவே தோன்றியது.
- தொடரும் -