எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

‘பராசக்தி’ சிவாஜி பாணியில் மழை இங்கே வசனம் பொழிகிறது......

‘பராசக்தி’ சிவாஜி பாணியில் மழை இங்கே வசனம் பொழிகிறது... 

“சிங்காரச் சென்னை. விசித்திரம் நிறைந்த பல மழைகளைச் சந்தித்திருக்கிறது. புதுமையான பல வெள்ளங்களைக் கண்டிருக்கிறது. ஆகவே, நான் புதுமையான மழையும் அல்ல. அடித்து வெளுக்கும் நான் சர்வசாதாரண மழையும் அல்ல. இயற்கையோட இயற்கையாக சராசரியாக வந்து போகி்ன்ற வரப்பிரசாதம் நான்.

சென்னையிலே கனமழை பொழிந்தேன். வெள்ளத்தை விளைவித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்... இல்லை நிச்சயமாக இல்லை. கனமழை பொழிந்தேன்... உங்களை வெள்ளத்தில் மிதக்க விட வேண்டும் என்பதற்காக அல்ல. ஏரிகள், குளங்கள் ப்ளாட்டுகளாகவும், அபார்ட்மென்ட்டுகளாகவும் மாறி விட்டதே என்பதற்காக. வெள்ளத்தில் மிதக்க விட்டேன். நீங்களெல்லாம் படகில் ஒய்யாரமாக பயணம் செய்து செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் செல்ல வேண்டிய பாதைகளையெல்லாம் நயவஞ்சகர்கள் ஆக்ரமித்து விட்டார்களே என்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை. இயற்கையில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். ஓடி வர பாதைகள் இல்லை என் வழியில். பிளாட்டுகள் நிறைந்திருக்கின்றன. ஏரிகளை விட்டு வெளியேறியதில்லை நான். ஆனால், பிளாட்டுளை இப்போது தாண்டியிருக்கிறேன். சென்னை மக்களே.... என்னை திட்டுவதற்கு முன்பாக நான் கூறுவதை தயவு செய்து கேளுங்கள்.

மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை இத்திருவிடத்திலே இருந்தவன் நான். இருக்க ஒரு ஏரியா. இப்போது இருப்பது ஒரு ஏரியா. இயற்கையின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?

இதுவும் என் வழக்குதான். என் சுயநலத்தில் கலந்துள்ள பொதுநலவழக்கு. ஏரிகளையும், குளங்களையும் அழித்து விட்டு வீடுகள், அபார்ட்மென்ட் கட்டிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு புத்தி புகட்ட நான் கனமழையாக வந்ததில் என்ன தவறு.

இப்போது நிற்க இடமில்லாமல் ஓடுகிறேன்... தேங்க இடம் இல்லாமல் ஓடுகிறேன்....  ஓடுகிறேன்.... ஓடுகிறேன்.... வங்கக் கடல் நோக்கி ஓடுகிறேன்..

நன்றி :முகநூல்

பதிவு : agan
நாள் : 2-Dec-15, 6:54 pm

மேலே