பெய்து வரும் கன மழையில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு...
பெய்து வரும் கன மழையில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்கு எங்களால் முடிந்தவரை உதவ முயற்சித்தோம். பசியிலும், குடிக்க நீரின்றியும் துன்பப்படும் அந்த மக்களுக்கு உதவ ஆரம்பித்த முயற்சிக்கு உதவி செய்த உள்ளங்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாங்கள் அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில்கள்,மற்றும் சாப்பிடும் பொருட்களில்தான் கவனம் செலுத்தி நேற்று காலை 11 மணிக்கு நாங்கள் மூன்று பேரேடு தொடங்கிய சிறு முயற்சிதான்.ஒரு சிறு உதவியும் கூட அவர்களுக்கு இப்போது உதவும் என்பது எங்களுக்குத்தெரியும். ஆனால் அதுபோதாது என நினைக்கும் போது எங்களோடு சேர்ந்த உள்ளங்கள் பல.! மதம் இனம் மொழி பாராமல் எத்தனை எத்தனை உள்ளங்களில் உதவும் மனிதநேயம் இருக்கிறதென்று பார்க்கும்போது மனம் நெகிழ்ச்சியாகிறது. பிஸ்கட், தண்ணீர் பாட்டில்களில் கவனம் செலுத்தியபோதும் பெண்கள் பால் பவுடர், மற்றும் தங்களுக்கு எடுத்து வைத்திருந்த நல்ல புடவைகளையும், இன்னும் சிலர் புதுப்புடவைகளையும் எடுத்துத்தந்தனர். இதில் மனதைப் பிசைந்த நிகழ்ச்சி.மனவளர்ச்சி இல்லாத பெண் என்று அவரை மற்றவர்கள்சொன்னார்கள்.அப்படிச் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். அவர் பிஸ்கெட் பாக்கட் பெட்டிகளை சுமந்துவந்து எங்களுக்கு உதவினார்.வயதான தாத்தா உணவுப் பொட்டலங்கள் நிரப்பிய சாக்குகளை தைத்துத்தந்தார். இவர்களின் உதவியோடும், உதவும் நண்பர்களோடும் கடைசியாக, சிறியது மற்றும் பெரிய தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட் பெட்டிகள், ரொட்டிகள், துணிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டி பாக்கட்டுகள், பால் பவுடர், சர்க்கரை மற்றும் காபித்தூள்,அரிசி இரண்டு மூட்டைகள் என நேற்று மதியம் இரண்டு கார்களைப் பிடித்து மூலம் கோவை வடக்கு மையத்துக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.பொருட்களை கொண்டு வந்து அங்கு சேர்த்த மகிழ்ச்சி, அவர்களுக்கு இன்னும் உதவ வேண்டும் என்ற நெகிழ்ச்சி இரண்டுமே மனதுக்குள் இரவு முழுதும் இருந்தது. இதைப் பதிவிடக் காரணம், நாங்களே உதவும்போது, வசதி படைத்தவர்கள் எத்தனையோ பேரால் உதவமுடியும் என்ற என் ஆதங்கம். அவர்களின் நிலையைக் கண்டு மனமுவந்து உதவ முன்வரும் உள்ளங்கள் முடிந்தவரை உதவுங்கள்.
இனம், மதம், மொழி கடந்து நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் நிலை பார்த்து மழையின் தாக்கம் குறையும் என்று நம்புவோம்.
எங்களின் உதவிகள் இன்றும் (04.12.2015) தொடர்கிறது