எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் சாரல் - 4 -------------------------------- பூக்களைப் பறிக்க...

பொங்கல் சாரல் - 4

--------------------------------

பூக்களைப் பறிக்க காட்டுப்பகுதி நோக்கி நடக்க துவங்கினேன். இந்த ஆண்டு நல்ல மழைப் பெய்திருப்பதால் காட்டுப்பகுதி முழுவதும் நிறைந்த பசுமைத் தோன்றம் கண்களையும் , மனதினையும் களவாடுகிறது. விரைவில் அவ்விடம் சேரவேண்டும் என்ற ஆசை உள்ளத்தை கவ்வுகிறது. சற்று வேகமாக நடக்க தொடங்கினேன். வனப்பகுதியை நுழைந்த உடன் ஊற்று நீரை அள்ளிப் பருகினேன். ஆஹா எவ்வளவு சுவை , பருக பருக தாகம் நீள்கிறது. பூக்களைத் தேடி சற்று வனத்தின் உள்ளே நுழைந்தேன். முயல் ஒன்று வேகமாக எனைக் கடந்து அருகில் உள்ள புதரில் மறைந்துக் கொண்டது. காடைகளும், கௌதாரிகளும், காட்டுக் கோழிகளும், குரங்குகளும் சத்தமிடுகின்றன. அவர்களை புகைப் படம் எடுக்குலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் யாருமே எனக்கு " போஸ்" கொடுக்க மறுத்துவிட்டனர். பண்ணப்பூ மற்றும் பூலாப்பூ மட்டும் தரைக்காட்டுப் பகுதியில் கிடைத்துவிட்டது. ஆவாரம்பூ அவ்விடங்களில் கிடைக்காததால் கொஞ்சம் தூரம் மலைகளில் ஏறி பறித்துக்கொண்டும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டும் வீடு திரும்பினேன். 

வீட்டிற்கு வந்ததும் பூக்களை பட்டியில் ( பட்டி என்பது மாட்டு சாணத்தால் செய்யப்படுவதாகும். மேலே படத்தில் விளக்கிற்கு அருகில் கவனிக்கவும்). தாத்தா ஒரே ஒரு பால் கறக்கும் பசுமாடும் , அம்மாடு ஈன்ற ஒரு கன்றும் வைத்துள்ளார். நானும் அண்ணனும், மாட்டிற்கு கொம்பு சீவி குளிப்பாட்ட அழைத்துச் சென்றோம். முதலில் தண்ணீர் கொஞ்சம் குளுமையாக இருந்ததால் மாடு சரியாக ஒரே இடத்தில் நிற்கவில்லை. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தது. பிறகு சற்று நேரம் கழித்து அமைதியாக ஒரே இடத்தில் நின்றுக் கொண்டது. பசுமாட்டைக் குளிப்பாட்டியதும், அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டினோம். கொம்பில் தீட்டிய வண்ணம் கொம்போடு சேர்ந்து விரைவாக இறுக, பசுமாட்டை கொஞ்சம் நேரம் வெயிலில் கட்டிவிட்டு, கன்றுவை குளிப்பாட்ட அழைத்துச் சென்றோம். 

அவ்வளவு இலகுவாக கன்றுவை குளிப்பாட்ட முடியவில்லை. தண்ணீரை அதன் மேல் ஊற்றினால் சுற்றி சுற்றி வட்டமிட்டு ஓடுகிறது. எப்படியோ ஒருவழியாக கன்றுவையும் குளிப்பாட்டிவிட்டோம். கன்றுவிற்கு கொம்பு இன்னும் முளைக்கவில்லை. அதனால் கன்றுவிற்கு வண்ணம் தீட்டும் வேலை மிச்சம். பிறகு மஞ்சளை குழப்பி மாட்டிற்கும்  கன்றுவிற்கு வைத்து, குங்குமம் இட்டு பூக்களை ஒரு மாலையாகவும், பிரண்டை , கரும்பு , வேப்பில்லை, பூலாப்பூ, பண்ணப்பூ, ஆவாரம்பூ, வடை ( பருப்பு வடை ) இவை அனைத்தும் சேர்ந்து தைத்த ஒரு மாலையும் மாட்டிற்கும் கன்றுவிற்கும் அணிவித்தோம். அதற்குள் பாட்டில் பொங்கல் வைத்து முடித்துவிட்டாள். 

வாழை இலையில் பொங்கல் வைத்து, அதனுடம் பூசணிக்காய் பொரியல் சேர்த்து , பசுவிற்கும்  கன்றுவிற்கும் தீபாதரனை காட்டி , கோவிந்தா  கோ.......... விந்தா ..... என்று மூன்று முறை கோவிந்தனை அழைத்து, பொங்கல் வைக்கும் போது , பொங்கல் பானையில் இருந்து பாட்டி தனியாக எடுத்து வைத்த பொங்கல் நீரில் வேப்பிலை கொத்து வைத்து , அண்ணன் மாட்டினையும் கன்றுவையும் பிடித்துக்கொள்ள,  தாத்தா பொங்கல் நீரை மாட்டின் மேல் இரைத்தவாறே , மாட்டினை மூன்று முறை சுத்தி வந்தவாறே  " பொங்கலோ பொங்கல் , பொங்கலோ பொங்கல் " என்று சொல்லக் கொண்டே வர, நானும் தாத்தாவை பின் தொடர்ந்தேன். மாடுவும் கன்றுவும் பட்டியை மிதித்தவுடன் , நானும் அண்ணனும் விசில் அடித்து மாட்டுவையும் கன்றுவையும் விரட்டினோம். 

மாடு கொஞ்சம் மெதுவா ஓடியதால் நான் இலகுவாக பிடித்துவிட்டேன். ஆனால் கன்று வேகமாக ஓடியதால் அண்ணனால் அதைப் பிடிக்கவே முடியவில்லை. எவ்வளவு துரத்தியும் அண்ணனால் கன்றுவை பிடிக்க முடியவில்லை . அதன் பிறகு அண்ணன் வந்து விட்டார். தாத்தா கன்றுவை அழைத்ததும்,கன்று அவரிடம் வந்துவிட்டது. மதியம் நேரம் நெருங்க பசியும் எடுத்தது.அனைவரும் உண்ணு முடித்ததும், தங்கை சென்னையில் இருந்து அலைப் பேசியில் அழைத்தாள். நெல்லிக்கனி வேண்டும் அதுவும் நிறையவேண்டும் , நெல்லிக்கனி இல்லாமல் சென்னை பக்கம் வந்தால் வீட்டிற்குள் சேர்க்க மாட்டேன் என்று மிரட்டினாள். 

நானும் அண்ணனும் நெல்லிக்கனி பறிக்க வனப்பகுதிச் செல்ல தயாரானோம். ,மழைப் பெய்து வனம் கொஞ்சம் அடர்ந்திருப்ப்பதால் , ஆபத்தும் நினைந்திருக்கும். அதனால் மிகவும் கூர்மையான கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டேன். ( பெரும்பாலும் நான் வனப்பகுதிக்கு செல்லும் போது கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு தான் செல்வேன் , கூர்மையான கத்தி ஆபத்தானதுக் கூட , அதை சரியாக பயன் படுத்தவில்லை என்றால் , நம்மையே பதம் பார்த்துவிடும் ( அந்த கத்தியும் என்னுடம் படத்தில் மேலே உள்ளது கவனிக்கவும் ) ). சமீபத்தில் வியாபாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து நெல்லிக்கனியை வாங்கியதால், பெரும்பாலானோர் மலைப்பகுதியின் கீழ் புறத்தில் இருந்த நெல்லிக்கனியை பறித்துவிட்டார்கள் என்று தாத்த சொன்னார். அதனால் நெல்லிக்கனி பறிப்பது மிகவும் சவாலாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .

தொடரும் ...

- உதயா   

பதிவு : உதயகுமார்
நாள் : 19-Jan-16, 8:50 pm

மேலே