நலம் நலமறிய ஆவல்: குழந்தைக்கு சிறுநீர் பிரச்சினை
என் மகனுக்கு ஐந்து வயது. அவனுக்குச் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுகிறது. பரிசோதித்துப் பார்த்ததில் எந்தக் குறையும் இல்லை என்கிறார்கள். இப்பிரச்சினை தீர என்ன வழி?- அனிதா அசோக்குமார், மின்னஞ்சல்இந்தக் கேள்விக்குத் திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ். காமராஜ் பதிலளிக்கிறார்:ஆணுறுப்பின் முன்தோல் மூடியிருந்தாலும், சிறுநீர்ப் பாதையில் புண் இருந்தாலும், சிறுநீர் நோய்த்தொற்று இருந்தாலும், சிறுநீர்ப் பாதையில் சதை அடைப்பு இருந்தாலும், மூத்திரப்பை, சிறுநீர் குழாய் - பாதையில் கற்கள் இருந்தாலும், தொற்றுநோய் கிருமிகளாலும் சிறுநீரானது சொட்டு சொட்டாக இறங்கலாம். இந்த அறிகுறிகளை உறுதிசெய்த பின் சிறுநீர் பெருக்கிகளான நண்டுக்கல், சிலாசத்து, குங்கிலியம் சேர்ந்த மருந்துகளை மருத்துவர் பரிந்துரையோடு வழங்கலாம்.சிறுநீர் பெருக்கும் காய்களான வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரி, சுரை, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் சாப்பிடக் கொடுக்க வேண்டும். சிறுபீளை, நெருஞ்சில் கலந்த குடிநீர் 30 மி.லி. தினமும் இரண்டு வேளை எடுத்துக்கொண்டு வந்தால் சிறுநீர் சொட்டுசொட்டாக வெளியேறும் பிரச்சினை தீரும். ஒரு வேளை ஆணுறுப்பின் முன்தோல் மூடியிருந்தால் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.