இதழியல் அறத்தைப் பின்பற்றியவர் ஏ.என்.சிவராமன்! நீதிபதி இராமசுப்பிரமணியன் புகழாரம்...
இதழியல் அறத்தைப் பின்பற்றியவர் ஏ.என்.சிவராமன்! நீதிபதி இராமசுப்பிரமணியன் புகழாரம்
By சென்னை,First Published : 02 March 2016 02:38 AM IST- புகைப்படங்கள்
மக்களுக்கு பயன்படும் வகையில் அல்லாமல் மலிவான பரபரப்புக்காக வெளியிடப்படும் செய்திகள் இதழியல் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தினமணி அறக்கட்டளை சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) நடைபெற்ற ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் "இதழியல் அறம்' என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் மேலும் பேசியது:-
""112 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (மார்ச் 1) எர்ணாகுளத்தில் பிறந்து, காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து, உப்பு சத்தியாகிரகத்தில் சிறைவாசம் அனுபவித்த ஒரு சராசரி பள்ளி ஆசிரியரான ஏ.என்.சிவராமன், இதழியல் வரலாற்றிலேயே அதுவும் ஒரே பத்திரிகையோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரே மனிதர் என்ற பெருமையைப் பெற்றவர்.
17 மொழிகளை அறிந்தவர்: கடந்த 1934-இல் தினமணி தொடங்கப்பட்டபோது அதன் துணை ஆசிரியராக பணியில் சேர்ந்த ஏ.என்.சிவராமன், 1943-இல் தினமணியின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியது ஒரு கின்னஸ் சாதனையாகும்.
17 மொழிகளை அறிந்து வைத்திருந்த ஏ.என்.எஸ்., தமிழ் நாளிதழ்களுக்கு இரண்டு கடமைகள் உள்ளன எனக் கூறுவார். ஒன்று, செய்திப் பரிமாற்றத்தில் ஆங்கில இதழ்களுக்கும் தமிழ் இதழ்களுக்கும் இருந்து வந்த மிகப் பெரிய இடைவெளியை நிரப்புவது, இரண்டாவது தமிழ் வாசகர்களின் தரத்தை, படிப்பில் மேம்பட்ட ஆங்கில வாசகர்களின் தரத்துக்கு உயர்த்துவது என இரண்டையும் குறிப்பிட்டார்.
இதனால்தான் அவர் தினமணியில் விண்வெளி ஆராய்ச்சி முதல் தத்துவங்கள் வரை, விவசாயிகள் நலன் முதல் தேர்தல் சீர்திருத்தங்கள் வரை பல்வேறுபட்ட கட்டுரைகளை எழுதினார். 1975-இல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது அதைத் துணிவுடன் எதிர்த்து நின்றவர்களில் ஏ.என்.சிவராமனும் ஒருவர். அப்போது தினமணியில் தலையங்கத்துக்கான இடத்தை வெற்றிடமாக்கி தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
பத்திரிகைச் சுதந்திரம்: இந்தியக் குடியரசைப் பொருத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் என்பது எந்தவிதக் கட்டுப்பாடும் அற்ற முழுச் சுதந்திரம் அல்ல. எனவேதான் வளர்ந்து விட்ட நாடுகளின் கண்ணோட்டத்தில் இந்தியாவின் நிலை பத்திரிகைச் சுதந்திரத்தைப் பொருத்தவரை பின்தங்கி உள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் "எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள்' (தங்ல்ர்ழ்ற்ங்ழ்ள் ஜ்ண்ற்ட்ர்ன்ற் ஆர்ழ்க்ங்ழ்ள்) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தயாரித்த பத்திரிகைச் சுதந்திர அட்டவணையில் பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகள் முதலிடத்தையும், 179 நாடுகளின் வரிசையில் இந்தியா 140-ஆவது இடத்தையும் பிடித்தது.
அறம் சற்று விலகி...இதழியல் அறத்துக்கான கோட்பாடுகள் உலகெங்கும் வரையறுத்துக் கொள்ளப்பட்டாலும் எந்த அளவுக்கு அவை பின்பற்றப்படுகின்றன என்பது கேள்விக்குறிதான். நாளிதழ்கள், வார இதழ்கள் என்றெல்லாம் பத்திரிகைகளின் எண்ணிக்கை பரவிவிட்ட நிலையில், போட்டி மனப்பான்மை முன்னிறுத்தப்பட்டு விற்பனை ஒன்றே குறிக்கோளாகிப் போகும்போது அறம் சற்று விலகி, பொருளுக்கு வழி விட்டுவிடுகிறது.
பொறி வைப்பு...பத்திரிகைகளின் பதிவாளர் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி கடந்த 31.3.2013-ஆம் தேதிப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நாளிதழ்களின் எண்ணிக்கை 12,511, மற்ற இதழ்களின் எண்ணிக்கை 81,556 ஆகும். இவற்றின் கூட்டுத் தொகை 94,067 ஆகும். எனவே பத்திரிகைகளுக்குள் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
அதிலும் தற்போது மின்ணணு ஊடகங்கள் இந்தப் போட்டியை மேலும் வளர்த்து தீவிரமாக்கிவிட்ட காரணத்தால் பல சமரசங்களுக்கு இதழியலாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு விட்டனர்.
பொதுநலம் மட்டுமே முன்னிறுத்தப்படும்போது அறம் பிறழ்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் விற்பனை முன்னிறுத்தப்படும்போது தாமாகவே அறப்பிறழ்ச்சி ஏற்படுகிறது. குறிப்பாக மின்னணு ஊடகங்கள் தோற்றுவிக்கும் போட்டி கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தங்களின் விற்பனையையும், சுழற்சியையும் தக்கவைத்தக் கொள்ளும் முயற்சியில் ஊடகங்கள் "ஸ்டிங் ஆபரேஷன்' என்று சொல்லப்படும் பொறி வைப்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஈடுபடத் தொடங்கின. இப்படிப்பட்ட பொறி வைப்புக்கு நீதிமன்றமே பலியான கதையும் உண்டு. குஜராத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஊழல் மலிந்துவிட்டது எனும் புகாரைக் கூறி அதை மெய்ப்பிக்கும் முகமாக குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் மீதும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதும் ஒரு புகாரைப் பதிவு செய்து அதில் அவர்களுக்கு பிடியாணை வழங்கும்படி விஜயசேகர் என்பவர் ஒரு பொறி வைப்பில் ஈடுபட்டார். ஆனால் இறுதியில் அவர் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார்.
சான்று எது? ஒரு இதழ் அறத்தின்பால் நிற்கிறதா அல்லது அப்பால் நிற்கிறதா என்பதற்குச் சான்று ஒன்றே ஒன்றுதான். அந்த இதழ் வெளியிடும் செய்திகளும், அதில் இடம்பெறும் கட்டுரைகளின் மெய்ப்பாடும், பொதுநலன் என்னும் நோக்கில் மட்டுமே மலர்கின்றனவா அல்லது தங்களுடைய சுழற்சி, மலிவான, தரமற்ற பரபரப்பு விற்பனையை நோக்கி மலர்கின்றனவா என்னும் கேள்விக்கான விடையில்தான இதழியல் அறத்தின் உயிர்நாடி இருக்கிறது. அந்த உயிர்நாடியை அறிந்தவர்தான் ஏ.என்.சிவராமன் என்றார் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் தினமணி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ஏ.என்.சிவராமன் நினைவு சொற்பொழிவில் சிறப்பு சொற்பொழிவாற்றிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன். உடன், (இடமிருந்து) தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் ஜெ.விக்னேஷ் குமார், தமிழ் வளர்ச்சித்துறை செயலர் த. உதயசந்திரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன்.