எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான்கு நாட்களுக்கு முன்பு எப்போதும் போல நான் மாலையில்...

 நான்கு நாட்களுக்கு முன்பு எப்போதும் போல நான் மாலையில் வாக்கிங் சென்றேன். ஏதோ பேருக்கு வாக்கிங். சும்மா அரை கிலோமீட்டர் இருக்கும். அதிலும் யாராவது தெரிந்தவர் கண்ணில் பட்டால் ஒன்று அவர்களாகவே முன்வந்து என்னிடம் பேசுவதும் அல்லது நான் அவர்களைக் கண்டதும் பேச ஆரம்பித்து விடுவேன். அன்றைய வாக்கிங் அவ்வளவு தூரம் தான். இதுபோல் தினமும் நிச்சயம் இரண்டு பேராவது சிக்குவார்கள். வழக்கம் ஆகிவிட்டது. ஆகவே நான் வாக்கிங் சென்று வந்தேன் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். சிரித்துக் கொண்டே இன்று என்ன செய்தி யாரிடம் பேசிவிட்டு வந்தாய் என்று தான் கேட்பார்கள். 
இதுதான்  தினமும் நடைபெறும் எனது வாக்கிங் படலம். சரி இனி விஷயத்திற்கு வருகிறேன்.

அன்றும் நான் வாக்கிங் சென்று அப்படியே மாதாந்திர மருந்துகளை வாங்கி வந்து விடலாம் என்று முடிவு செய்து நடக்க ஆரம்பித்தேன். அந்த மருந்தகத்தை அதாவது வழக்கமாக வாங்கும் Medplus கடையை நெருங்கிடும் நேரத்தில் லேசாக மழை தூர ஆரம்பித்தது. வேகமாக நடந்து கடைக்குள் நுழைந்து விட்டேன். உள்ளே கூட்டமாக இருந்தது. காரணம் மாதத்தில் முதல் வார நாட்களில் மளிகை பொருட்கள் வீட்டிற்கு வாங்குவது போல மருந்து கடைகளிலும் மக்கள் வாங்குவது கட்டாய ஒன்றாகிவிட்டது. அதற்கு நோய்களை சொல்வதா நிறைய மருந்துகளை எழுதி தள்ளும் டாக்டர்களை சொல்வதா அல்லது தற்போது நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை சொல்வதா அல்லது சுயகட்டுப்பாடற்ற பழக்கங்கள் உள்ள மக்களையும் சொல்வதா என்று தெரியவில்லை. அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மீண்டும் கடைக்கு வருவோம். எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் அங்கே பணியாற்றும் அத்தனை பேரும் வாங்க சார் என்று வணக்கம் சொல்லும் வழக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு அங்கே செல்வதும் பழகி விட்டதும் முக்கிய காரணம். இதில் வேற இரண்டு நாட்கள் கழித்து சென்றால் என்ன சார் ஆளைக் காணோம். உடம்பு சரியில்லாமல் போனதா என்று அக்கறையுடன் விசாரிப்பார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது.அதற்குள் ஒரு நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் ஏம்ப்பா நான் வந்து கால் மணி நேரம் ஆகுது. சீக்கிரம் எனக்கு மருந்து கொடுப்பா என்று சற்று உரத்த குரலில் கூறினார்.

உடனே அந்த ஊழியரும் சார் உங்கள் மருந்துகளை தான் எடுத்துக் கொண்டு இருக்கிறேன் சார். அவசரப்படாதீர்கள் என்றார். உள்ளே ஏசியும் வேலை செய்யவில்லை. மின்விசிறியும் இல்லை. அதுவும் எனக்கு அங்கே பழகிவிட்டது. சற்றும் காற்றும் இல்லாததால் சிறிது வெப்பம் கூட இருந்தது.அப்போது உள்ளே வந்தார் ஒரு வயதான பெண்மணி. தனது மருந்து சீட்டை காண்பித்து இதெல்லாம் இருக்கான்னு பார்த்து அப்படியே சுமாராக எவ்வளவு ஆகும் என்று சொல்லுப்பா என்றார். 

அங்கிருந்த ஊழியர்களில் ஒருவர் அதை வாங்கி படிக்க ஆரம்பித்தார். சில நிமிடங்கள் கழித்து பாட்டி மொத்தம் கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு ரூபாய் ஆகும் என்றும் அதில் ஒரு மருந்து இல்லை பாட்டி நாளைக்கு வரவழைத்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனாலும் இவர் அரசியல்வாதிகள் வாக்குறுதி போல அல்லாமல் நிச்சயம் செய்வார். எனக்கு அனுபவம் உண்டு.அந்தப் பாட்டி. அதற்கு அவ்வளவு பணம் இல்லை என்னூறு ரூபாய் தான் என்னிடம் இருக்குப்பா. அதுக்குள்ள வரா மாதிரி கொடுப்பா என்றதும் அருகில் இருந்த எனக்கு மனசுல ஏதோ ஒரு நெருடல். அந்தப் பாட்டியின் உருக்கமான வார்த்தைகள் எனது நெஞ்சை பிழிந்தது. அங்கே உள்ள அத்தனை பேரும் அவரை பரிதாபமாக பார்த்தார்கள். ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. ஒருவேளை நிறைய பேர் நிலையும் அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்தேன்.உடனே நான் அவருக்கு உதவலாம் என்று நினைத்து பாட்டி நீங்கள் எல்லாத்தையும் வாங்கி கொள்ளுங்கள். நான் மிச்ச பணத்தை தருகிறேன் என்றேன். உடனே அனைவரும் என்னை திரும்பி பார்த்தார்கள். நான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்ததை போல் கீழும் மேலும் பார்த்ததும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.
அதற்குள் அந்தப் பாட்டி இல்லை கண்ணு பரவாயில்லை. மிச்சம் மருந்துகளை நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன் என்றார். இல்லை மா தப்பாக நினைக்க வேண்டாம். வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியும் மறுத்து விட்டார்.கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கரைந்து நான் மட்டும் இருந்தேன். 

அப்போது அந்த ஊழியர்களில் ஒருவர் என்ன சார் நீங்கள் பணம் தருகிறேன் என்று சொல்கிறீர்கள். அவரை யாரென்று உங்களுக்கு தெரியாது. பிறகு ஏன் சார் . அவ்வளவு  பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க நீங்கள் மட்டும் முந்திக் கொண்டு வரீங்க என்றார் சிரித்துக் கொண்டே.இல்லைப்பா அந்தம்மாவை பார்த்தா பாவமா இருக்குப்பா. மேலும் நாளைக்கு இதற்காக இந்த தள்ளாத வயதில் மீண்டும் வரவேண்டுமா என்று நினைத்தேன். அதற்கு அவர் என்ன சார் இந்த காலத்தில் இப்படி இருக்கிறீங்க என்றார் கேலியாக. என்னப்பா உதவி செய்வது தப்பா என்று கேட்டேன். அதற்கும் அவர் விடாமல் இல்லை சார் சிலர் அந்த மாதிரி கேட்பதையே தப்பா நினைப்பாங்க சார் .அதனால்தான் அப்படி கூறுகிறேன் என்றார்.அதற்குள் மற்றொருவர் சார் இந்தாங்க உங்கள் மருந்துகள் ரெடி என்றழைக்கவே தள்ளி சென்று பில்லைப் பார்த்து பணம் கொடுக்கும் போது என்னப்பா போன மாதத்தை விட இந்த மாதம் சற்று அதிகமாக இருக்கிறதே என்றேன். 
அவரோ சிரித்துக்கொண்டே. அது GST க்கு முன்னால் இது GST க்கு பின்னால் என்றார்.

அப்போது பக்கத்தில் நின்றிருந்த எனது வயதுக்கு ஒத்தானவர் இன்னும் சுடுகாட்டில் கூட எரிப்பதற்காக GST வரிகள் விதிப்பார்கள் சார் என்று மிகவும் கோபம் கலந்த விரக்தியின் விளிம்பில் நின்று பேசினார். உடனே அந்த கடையே மயான அமைதியானது.நான் வழக்கம் போல அனைவருக்கும் கையசைத்து விட்டு வெளியே வந்தேன். 
மழையும் நின்று சாலையில் சூடு லேசாக எழ ஆரம்பித்து இருந்தது.என் மனமோ அந்தப் பாட்டியின் நிலை பற்றியும் இறுதியாக வந்தவர் GST பற்றியும் கூறியதும் மாறி மாறி நினைவில் வந்து சென்றது . நாமே உதவி செய்ய முன்வந்தாலும் ஏற்றுக்கொள்வது அவரவரின் மனநிலையை சூழ்நிலையை பொறுத்தது என்பதும் தெளிவாகிறது .
அதேபோன்று அரசாங்கத்தின் திடீர் விதிகள் மாற்றல் அல்லது புதிய அறிவிப்புகள் சாதாரண மக்களை எந்த அளவு பாதிக்கும் என்பதை ஆராயாமல் திணிக்கும் அரசாங்கங்களின் அறிவின்மையை நினைத்தும் வேதனைப்பட்டேன் .

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் சில அனுபவங்கள். அவைதானே நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கிறது. ஆனாலும் நாம்தான் சரிவர படித்து உணர்வதில்லை.பாமரனாயினும் , படித்து அறிந்து பட்டங்கள் பெற்றவராயினும் பகுத்தறிவு பாதையில் பயணிக்க தொடங்கிடுக. மறுமலர்ச்சி கண்ட சமுதாயம் காண.வாழ்த்துக்கள்பழனி குமார் 
08.10.2017

நாள் : 8-Oct-17, 7:01 am

மேலே