மார்கழிப் பூக்கள் 11 வண்ண வண்ணக் கோலங்கள் "மாதங்களில்...
மார்கழிப் பூக்கள்
11
வண்ண வண்ணக் கோலங்கள்
"மாதங்களில் நான் மார்கழி " என்ற கூற்றுக்கு விளக்கம் தேடும்போது , வண்ண வண்ண கோலங்கள் நம் முன்னே ஓடி வந்து , “எங்களால் மார்கழி அழகா அல்லது, மார்கழி மாதத்தால் எங்களுக்கு அழகா?" என்று நம்மை கேட்க விழையும் . அந்த அளவுக்கு, மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கோலமிட்டிருப்பார்கள். எளிமை வகைக்கோலம்மு தல் மயில், மெஹெந்தி, பறவை, ரங்கவல்லி, ஜியோமிதி என்று பல வித டிசைன்களில் கண்ணுக்கு விருந்தாக இல்லங்களிலும், தெருக்களிலும், திருக்கோவில்களிலும், , இழைத்து, பெருமை பெறுகிறார்கள் கோல விற்பன்னர்கள்.
இறைவனை தொழுவதற்காக சிறந்த மாதமாக மார்கழியை கூறுகிறார்கள். எல்லா மாதங்களும் தான் கோலம் போடுகிறார்கள். ஆனால், மார்கழி என்றால் தனிச் சிறப்பு தான். சூரிய விடியலுக்குக் காத்திராமல் அதற்கு முன்பே நீராடி விடியற்காலம் நான்கு மணிக்கே தொடங்கும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சோம்பலை நீக்கி, , எழுந்து, கை கால்களை அசைத்து இடுப்பை வளைத்து தண்ணீர் கொணர்ந்து, அதில் சாணத்தை கரைத்து, வாசல் தெளித்து பின் கோல இழைகளை இடும்போது,தக தக குளிர் ஊட்டம் குறைந்து, வெப்ப ஊக்கம் கிடைக்கிறது. அந்நேரம், நிலவும், எஞ்சிய ஒளியை பாய்ச்சுவதால், அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது டிசைன் மிகு வண்ணக் கோலங்களை எவ்வாறு வடிவமைக்கலாம் என்று விளக்கும் வண்ணம், புத்தக வடிவங்கள், ஆன்லைன் வடிவங்கள் என்று சந்தையில் பல விற்பனை மையங்களில் கிடைக்கின்றன. பல சஞ்சிகைகளும் கோலக் கலைக்கென்றே சில பக்கங்களை ஒதுக்கி வருகின்றன.
மார்கழி மாதங்களில், கோலம் போட்டு முடித் ததும், அந்த கோலத்தின் நடுவில் சிறிதளவு மாட்டுச்சாணம் வைத்து, அதில் பரங்கிப் பூ வைப்பது மரபு. சாணத்தில்ஏற்றிய பரங்கிப்பூ, பார்ப்பதற்கு, கோலங்கள் என்னும் மகுடத்தில் சிறப்பாக ஏறி நிற்கும் நவரத்தின கற்கள் போல் அழகுக்கு அழகு செய்வது போல் காட்சி அளிக்கும். கோலம் போட்ட கையோடு, வீட்டு வாசலில் தீபம் ஏற்றி வைப்பது வழக்கம். அது வீட்டுக்கு நல்லது. கோலங்கள் தீயசக்திகளை வீடுகளில் வருவதை தடுக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது.
கிராமங்களில் வெள்ளிக் கம்பளம் விரித்தது போன்று அரிசி மாவில் ஐந்து புள்ளி ஐந்து வரிசை, ஏழு புள்ளி ஏழு வரிசை, ஒன்பது புள்ளி ஒன்பது வரிசை என விதமான, வண்ண வண்ண கோலங்களை இம்மாதத்தில் காண்கிறோம். இட பற்றாக்குறை என்று தெரிந்தாலும், இருக்கும் இடத்தில, நகர குடியிருப்பு வாசலிலும், வீட்டு வாசலிலும் வண்ண வண்ண கோலங்களை போடுவதில் கிராம மகளிருக்கு எந்த வகையிலும் சளைத்தவர் அல்லர் நாங்கள் என்று பல நகர பகுதிகளிலும் மகளிரின் கோல ஆர்வத்தை பார்த்து வருகிறோம்.
நாகரிகம் என்னும் பெயர் தங்கி ஓடும் வாகனங்கள் கக்கும் நச்சுப் புகை இல்லாத, நல்ல காற்று மற்றும் OZONE வாயு உஷத் காலத்தில் நமக்கு கிடைக்கிறது. பேரொளி வடிவமாம் ஈசனை தொழும்பொழுது, நமக்கு ஒளி ஆற்றல் கிடைக்கிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் வான வெளியில் நடமாடும், தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும், ஆசிகளும் கிடை க்கின்றன. கோலம் போட்டதனால் நமது உடலுக்கு உடற் பயிற்சி ஒருபுறம் இருக்க, கோலம் போட்ட கையோடு, , கோவிலில்/வீட்டில் விளக்கு ஏற்றி, பகவானை தொழும்போது, புண்ணியத்தை நம்மை அறியாமல் நமது கணக்கில் சேர்த்து கொள்கிறோம். தவிர,கும்பிட்டபின், கோவிலை வலம் வரும்போது, கோவில் மண் தரும் ஆற்றலும் நமக்கு கிடைத்து விடுகிறது.
முற்காலத்தில், அரிசி மாவால் தான் வீட்டின் முன்புறமும், முற்ற பகுதிகளிலும், பலவகைக் கோலம் போட்டார்கள். "கோலம் போடும்போது, எங்கள் உடலுக்கு பயிற்சி மட்டுமின்றி, மனதுக்கும் இதத்தை கொடுக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி இக்கடமையில் ஈடுபடுத்தினால்தான், கோலத்தின் புள்ளிகளை சரியாக இணைத்து போட முடியும். நம் உள்ளத்தை கண்ணாடியாக முழுவதும் பிரதிபலிக்கவல்லவை நாம் போடும் கோலங்கள். இந்த சந்தோஷ உணர்வுகள், அழியாத கோலங்களாய் உள்ளத்தில் அச்சாணியாக ஊன்றி நிற்பவை" என்கிறார்கள் கோல விழி மங்கையர். வாஸ்தவம் தானே !!
.