எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மார்கழிப் பூக்கள் மலர் 22 ஸ்ரீமத் பாகவதம் சப்தாஹம்...

மார்கழிப் பூக்கள்   Image result for tulip flower single



மலர்  22   

ஸ்ரீமத் பாகவதம் சப்தாஹம் (  Srimadh Bhagavatha Sapthaham )   எவன் ஒருவன் ஸ்ரீமத் பாகவதத்தை கேட்க விழையும் போதே இறைவன் அவனுடைய உள்ளத்தைத் தூய்மையாக்குகிறான் என்பதே ஸ்ரீமத்   பாகவதத்தின் ஒப்பற்ற தனிப்பெருமை. இதனை கேட்க முயற்சிக்கும் மனிதர் தெரிந்தோ தெரியாமலோ இழைத்த பாவங்கள் மறைய தொடங்குகிறது. பாவங்கள் குறையக் குறைய ஸ்ரீ கிருஷ்ண பக்தி பெருகும். 

ஸ்ரீமத் பாகவதம் வியாசர் வடமொழியில் இயற்றிய பதினெட்டு புராணங்களில் மிகச் சிறப்பானது. பதினெட்டாயிரம்  சுலோகங்களைக் கொண்டது என்று மரபு வழக்காகச் சொல்லப்படுகிறது.  புராணக் கதைகளுடன் ஆன்மிகத் தத்துவங்கள்  வெகு நேர்த்தியாகவும் ஆழமாகவும் பின்னப்பட்டிருக்கும் அருள்நிறை நூல் இது.  இதிலுள்ள வேதாந்தக் கருத்துக்கள் உபநிடதக் கருத்துக்களின் அகலத்தையும் ஆழத்தையும் மிஞ்சும் அளவிற்கு முக்கியமானவை. 

இந்து சமயத்தினரின் அனைத்து பிரிவுகளினாலும்  மிக உயர்வாகப் போற்றப்படும் நூல் பாகவதம். இப்புராணத்தின் வெறும் பாராயணமே சிறந்த ஆன்மிகப் பயனையும், உலகவாழ்க்கையில் நன்மைகளையும் கொடுக்கவல்லது என்ற நம்பிக்கையில் இந்து ஆலயங்களிலும்   இல்லங்களிலும் உற்சவங்களிலும் பாரத நாடு முழுவதும் பூசிக்கப்பட்டு வாசிக்கப்படும் நூல்.   பதினேழு  புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றிய வியாசர், பதினெட்டாவது  புராணமாக பாகவதத்தை இயற்றியதே நாரதரின் உந்துதலினால்தான். மேற்படி பதினேழு புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றியும் வியாசருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. அதற்குக் காரணம் அவையெல்லாவற்றிலும் கதைப் போக்கை மையமாய் வைத்துக்கொண்டு இயற்றியதுதான் என்கிறார் நாரதர்.   இறைவனுடைய   பெருமைகளையும் தத்துவங்களையும் மையமாக வைத்து ஒரு பாகவதபுராணம் எழுதினால்தான் மன அமைதி கிடைக்கும் என்ற நாரதரின் கருத்தை ஏற்கிறார் வியாச ரிஷி.  அதனைத் தொடர்ந்து, பகவானுடைய மஹிமையை தொடர்ந்து வர்ணித்து பாகவதத்தை இயற்றி தன் புத்திரன் சுகருக்கு உபதேசம் செய்கிறார். 

"சுகபிரம்மம்" ( சுகர்), பாண்டவர்களுக்குப் பின் முடி சூடிய  பேரரசன் பரீக்ஷித் மஹா ராஜா அவர்களுக்கு  எல்லா மகரிஷிகளின் முன்னிலையில் கங்கைக் கரையில் ஏழு நாட்களில் ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துச் சொன்னார். அவ்வாறு  உபதேசிக்கையில் சூதர் என்பவர் எல்லா மகரிஷிகளுடன் பாகவதத்தை  கேட்கும் புண்ணியத்தை  பெற்றார். பின்பு கலியுகம் தொடங்கிய பின் நைமிசாரண்யத்தில் சௌனகர் முதலிய மகரிஷிகளுடைய வேண்டுகோளுக் கிணங்கி சூதர் பாகவதத்தைத் தாம் சுகரிடம் கேட்டதை எடுத்துரைத்தார்.   

சரி.  சப்தாஹம் என்றால் என்ன ? What is Sapthaham?  

ஸப்தாஹம் என்றால் 'ஏழு நாட்கள் கொண்ட காலவரை'. இக்காலவரையில் ஸ்ரீமத்பாகவதத்தைப் படிப்பதும் கேட்பதும் ஒரு உயரிய திட்டமுறையாகக் கருதப்படுகிறது.   சுகர் ஏழுநாட்களில் பரீக்ஷித்துக்கு இந்த ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்தார். அதுவே முதல் ஸப்தாஹம் எனப்பட்டது.  பின் கோகர்ணர் என்பவரால் அடுத்த ஸப்தாஹம் நடந்தது. இதற்குப் பின்னர்தான் சூதர் நைமிசாரண்யத்தில் மற்ற ரிஷிகளுக்கெல்லாம் பாகவதத்தை எடுத்துரைத்தார். 

ஸ்ரீமத் பாகவதத்தில் பன்னிரண்டு  ஸ்கந்தங்கள் உள்ளன. முதலிரண்டு ஸ்கந்தங்கள் முகவுரையாக அமைகின்றன. பாரதப்போர் முடிவிலிருந்து கதை தொடங்குகிறது. பரீக்ஷித்தின் பிறப்பு, அவர் அரசனானது, ஒரு ரிஷிபுத்திரனின் சாபத்தை சம்பாதித்துக்கொண்டது, அதன் காரணமாக கங்கைக் கரையில் விரதமிருந்து சுகரிடம் பாகவதம் கேட்கத் தொடங்கியது, பிரம்மன் பரம்பொருளிடமிருந்து நான்கே சுலோகத்தில் பாகவதத்தை உபதேசம் பெற்றது, முதலிய விபரங்கள் இம்முதலிரண்டு ஸ்கந்தங்களில் அடங்கும்.   கங்கை, காசி, கயா, புஷ்காரம், பிரயாகை போன்ற யாத்திரைகளை விட  ஸ்ரீ சுக பாகவதம் மேலான புண்ய பலனை அளிக்கும் என்பது சான்றோர்களின் தீர்ப்பு.  அஸ்வமேத யாகம் போன்ற மிக பெரிய யாகங்களின் பலனையும் மிஞ்சும் புண்ய பலன் எளிய  பாராயணம் மற்றும் ஸ்ரவணத்தின் மூலம் கிடைக்கும். 

இதனை புஷ்கரம் ,  வடமதுரை, துவாரகை(Pushkar, Northern Madurai, Dwaraka)  முதலிய புண்யஸ்தலங்களில் சிரவணம் செய்வ்தால் ஒருவன் சம்சார பயத்திலிருந்து விடுபடுகிறான் என ஸ்ரீமத் பாகவத புராணம் உபதேசிக்கிறது.        

மற்ற சில மாநிலங்களை போல, கார்த்திகை, மார்கழி போன்ற  மாதங்களில் பாலக்காடு, குருவாயூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல கோயில்களிலும் மண்டபங்களிலும் பாகவத சப்தாஹம் வருட வருடம் சிறப்பாக அங்குள்ள மக்கள் நடத்தி, இறை அருளை அனைவரும்  தொடர்ந்து பெரும் வண்ணம் நடத்தி  கடவுளின் தேசம் என்ற அடையாள மொழிக்கு ( tagline ) இலக்கணமாக விளங்கி வருகிறார்கள் என்பதை கண்குளிர காண முடிந்தது. 

Image result for tulip flower single


பதிவு : KADAYANALLURAN
நாள் : 6-Jan-18, 7:39 pm

மேலே