அனுபவத்தின் குரல் - 75 ------------------------------------ நான் அதிகமாக...
அனுபவத்தின் குரல் - 75
------------------------------------
நான் அதிகமாக வெளியில் செல்வதில்லை ...பயணங்கள் மேற்கொள்வதில்லை ...சுற்றுலா சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன . ஆகவே எனக்கு நேற்று சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று வந்ததே ஒரு நெடிய பயணமாக அமைந்தது . என்னதான் காரில் சென்று வந்தாலும் ஒரு அலுப்பும் சலிப்பும் வந்துவிட்டது . காரணம் சாலையின் நிலையும் போக்குவரத்து நெரிசலும் தான் . அதனால் காலமும் விரயமாகிறது மனநிலை மாறுகிறது சோர்வால் . அதற்கே இப்படி என்றால் நாளும் பலரும் இருசக்கர வாகனங்களிலும் , மின்சார ரயில்களிலும் , சைக்கிளிலும் பயணிக்கும் மக்களை நினைத்தால் வருத்தமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது . அவசர அலுவல் , அலுவலகங்கள் செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருவோர் , வியாபாரம் செய்வோர் , இப்படி அனைவரும் நாளும் நகரத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் இதே நிலைதான் , எண்ணமும்தான் நெஞ்சில் எழும் என்பதை நினைத்துப் பார்த்தேன் .
இவைகளுக்கு முக்கிய காரணம் சாலைகள் சரியில்லை . பயணிக்கும் சிலர் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதும் இல்லை. தாம் மட்டும் முந்திச் சென்று முதலில் செல்ல நினைப்பதும் , அடுத்தவர் பற்றி கவலை கொள்ளாமல் விதிகளை மீறி வீரத்தை காட்டுவதும் தான் . அதிலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நேர்வழியில் செல்வதை தவிர்த்து குறுக்கும் நெடுக்கும் கோலம் போடுவதை போல வாகனங்களை செலுத்துவதால் பக்கத்தில் செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது . அவசரம் இருக்கலாம் ..ஆனால் அதே நேரத்தில் அடுத்தவர் செல்வதற்கு தடையாக , குறுக்கீடாக இருக்கக்கூடாது என்பதை அவர்கள் நினைப்பதே இல்லை. போக்குவரத்தை சீர்படுத்த காவல் துறை நண்பர்கள் இருந்தாலும் அவர்கள் தங்களைப் பற்றியே சிந்திப்பதால் ( ? ) , அதிலும் ஒருசிலர் தள்ளி நிற்பதாலும் பல காரணங்களுக்காக ( ? ) அவர்களால் போக்குவரத்தை ஓரளவுதான் கட்டுப்படுத்த முடிகிறது . பாதி நேரம் அவர்களுக்கு அரசியல் முக்கியஸ்தர்கள் , உயர் அதிகாரிகள் போன்றவர்கள் கடந்து செல்வதற்கு மட்டும் உதவுகிறார்கள் . இதுதான் நமது சனநாயக முறையின் ஒரு கிளை .
பொதுமக்களும் நிச்சயம் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனக்கு . ஒரு இடத்தை அல்லது சிக்னலை கடப்பதற்கு அதிக நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது . இதில் பாவம் ஏதாவது ஓர் இடத்தில் நோயாளியை வைத்தும் , இல்லாமலும் ஆம்புலன்ஸ் வாகனம் தவிப்பதை பார்த்தல் மிகவும் சங்கடமாக இருக்கிறது . பரிதாபமாக உள்ளது அவர்களின் நிலை . அரசுகள் ,கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை நம் நாட்டில் . மிகவும் வருந்தக்கூடிய ஒன்று . இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் . மாற்றம் நிகழ்ந்தால் மாற்றுவழியும் பிறக்கும் என்று நினைக்கிறேன் . காலம்தான் பதில் கூற வேண்டும் . பொது மக்களும் சிந்திக்க வேண்டும் . காத்திருப்போம் காலம் கனிய ...அடுத்த தலைமுறை மகிழ்வுடன் பயணிக்கட்டும் .
பழனி குமார்