எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 77 -------------------------------​----------​ அந்த காலத்தில்...

  அனுபவத்தின் குரல் - 77 
-------------------------------​----------​



அந்த காலத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரெல்லாம் இந்த ( BUDGET ) நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்தால் அதை பற்றி அந்தளவு விவரமாக தெரியாவிட்டாலும் , செய்தியை வழங்குபவரும் இப்போதுள்ளபடி அதிக புள்ளி விவரங்களுடன் விரிவாக கூற இயலாவிடினும் நாங்கள் அப்போதுள்ள ரேடியோ பெட்டியை சூழ்ந்து கொண்டு மிக அமைதியாக கேட்போம் . அப்போது மற்ற விவரங்களை கேட்டு அறிந்து கொள்வதைக் காட்டிலும் எது எது விலை ஏறிவிட்டது என்பதைத்தான் மிகவும் ஆர்வமாக கேட்போம். மேலும் அந்த காலத்தில் இந்த அளவு சம்பளம் உயர்ந்து நிலையிலும் இருக்காது ...விலைவாசி பட்டியலும் பெரிதாக தெரியாது. அறிக்கை வாசிப்பவர்களும் மேலோட்டமாகத்தான் வழங்குவார்கள் . அப்போதெல்லாம் மொத்த பட்ஜெட் அளவே ஆயிரம் கோடியை தாண்டாது . ஆயினும் பற்றாக்குறை நிதிநிலை தான் சமர்ப்பிப்பார்கள் . ஆகவே நிதி பற்றாக்குறை என்பது அப்போது லட்சத்தில் இருந்தால் , தற்போது ஆயிரமாயிரம் கோடிகளாய் இருக்கிறது . அதற்கு மக்கள் தொகையின் இமாலய ஏற்றம் , விலைவாசி உயர்வு , பொருட்களில் பலவித புதிய வருகைகள் , எலக்ட்ரானிக் சாதனங்களின் வரவு , என இப்படி பல காரணங்கள் .

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது , ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் ஆகா ஓகோ என்று படஜெட்டை புகழ்ந்து தள்ளுவதும் , எதிர்கட்சிகளை சார்ந்தவர்கள் தங்க முலாம் பூசிய பித்தளையே என்றும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் மோசமான படஜெட் என்று கூறுவதும் கேட்டு கேட்டு சலித்துவிட்டது . இந்த வார்த்தை அல்லது அறிக்கைப்போர் ஒரு வாரத்திற்கு மட்டுமே எங்கும் ஒலிக்கும் . எந்த ஊடகத்திலும் பேசப்படும் . பிறகு அனைவரும் மறந்துவிடுவர். ஆனால் நடைமுறையில் மிகவும் பாதிக்கும் , பாதிக்கப்போகும் நடுத்தர மக்களும் அவர்களுக்கு கீழே உள்ளவர்களும்தான் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள் . அதை அரசியல்வாதிகளோ , பொருளாதார நிபுணர்களோ , பதவியில் உள்ளவர்களோ , அதிகார வர்க்கமோ , தொழில் அதிபர்களோ அல்லது நடிகர்கர்களோ பாதகங்களை பற்றி ஏழை எளியோரைப் பற்றி நிச்சயம் பேச மாட்டார்கள் . இதுதான் வாழையடி வாழையாக கடந்த 30 ஆண்டுகளாக நான் அறிந்தவரை நடந்து வருகிறது .

ஜொலிக்கும் அறிவிப்புகள் , விலைவாசி குறைப்பு என ஒரு கண்துடைப்பு , ஒருசிலவற்றில் வரிகளை குறைத்துவிட்டு , பலவற்றில் வரிகளை மறைமுகமாக அல்லது நேர்முகமாக ஏற்றி விடுவதும் வாடிக்கை . இறுதியில் கூட்டி கழித்து பார்த்தால் நம்மைப் போன்ற நடுத்தர குடும்பங்களும் ஏழை எளியவர்களுக்கும் எந்தவித லாபமோ , சலுகையோ கிடைக்காது . ஏற்கனவே ஏற்றம் கண்டிருந்த அத்திவாசிய பொருட்களின் விலையில் மாற்றமும் இல்லாமல் சிலவற்றில் ஏறுமுகம் காணப்படும் . நாம் தேர்தல் நேரத்தில் செய்கின்ற தவறுகளால் நமக்கு நாமே சூடு வைத்துக் கொள்வதை போன்றதுதான் இது .


முடிவு யார் கையில் ...மாற்றுவழி என்ன என்பதும் ...நமது வாழ்க்கையில் முன்னேற்றம் அல்லது நிதி பற்றாக்குறை இல்லாத நாள் மலருமா .என்பது பற்றியும் சிந்திக்கும் வேளை வந்துவிட்டது . வளரும் அடுத்த தலைமுறையினர் ஆனந்தமாய் வாழ்ந்திட அவர்களுக்காக அவர்களும் சிந்தித்து செயல்பட வேண்டும் .


பழனி குமார்  

நாள் : 1-Feb-18, 10:41 pm

மேலே