எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 85 ---------------------------------------​ நமது நாட்டில்...

  ​அனுபவத்தின் குரல் - 85 
---------------------------------------​


நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக , பலரும் அயல் நாடுகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனர் . அது தமிழ்நாட்டிலும் நுழைந்து பரவிவருகிறது . அந்நிய நாகரீகமும் நடைமுறைகளும் அனைத்து வழியிலும் மாறிவருவது நமக்கு தெரிகிறது . உணவு , உடை , பண்பாடு மற்றும் கலாச்சாரம் அனைத்திலும் மேலை நாடுகளின் முறைகள் பலவும் மெதுவாக ஊடுருவி , தற்போது வேரூன்றத் தொடங்கியுள்ளது . அதில் சில நமக்கு ஒத்துவராத பண்பாடாக இருந்தாலும் அவைகளை ஒதுக்கித்தள்ளவும் முடியாமல் விலகி இருக்கவும் முடியாமல் தத்தளிக்க வைக்கிறது . இன்றைய இளைய சமுதாயம் அதை எல்லாம் ஏற்றுக் கொண்டாலும் , அவைகளை பின்பற்றினாலும் நம்மால் முழுமையாக ஏற்க இயலவில்லை என்பது உண்மை . என்னைப் போன்றவர்கள் முழுமனதுடன் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியவில்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்றாகும் . வேறுவழியின்றி அனுசரித்து நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தமும் உருவாகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை .உதாரணமாக உடை விஷயத்தில் பலவித மாறுதல்கள் , நாகரீகத்தின் பெயரால் , அந்நிய மோகத்தின் தாக்கத்தால் , உலக வளர்ச்சி என்ற போர்வையில் உழல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது . நாம் மேம்போக்காக பரவாயில்லை , பழகிவிட்டது , அதனால் தவறில்லை என்று மனதிற்குள் நமக்கு நாமே சமாதானம் கூறி கொண்டுதான் வாழ்கிறோம் . இதற்கு மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன் . 

அதேபோல சில நிகழ்விற்கும், உறவுமுறைக்கும் , குறிப்பிட்ட நாட்களிற்கும் , ஒருசில அந்தந்த அடைமொழியுடன் கூடிய நாள் என கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது . அவைகளில் ஒன்று " காதலர் தினம் " ஒன்று . காதலிப்பது சரியா , தவறா அல்லது காதலர் தினம் கொண்டாடுவது முறைதானா என்று விவாதிக்க விரும்பவில்லை . அது என் நோக்கமும் அல்ல . அதற்கான காலத்தை நாம் கடந்து விட்டோம் என்பதும் நான் நன்கு அறிவேன் . இன்று அந்த நாள் என்பதால் ( பிரவரி 14) அதைப்பற்றி எழுத நினைத்தேன் . அந்த காலத்தில் இவையெல்லாம் நம் நாட்டில் கொண்டாடுவதும் இல்லை. இந்த அளவிற்கு விளம்பரப்படுத்தியதும் இல்லை, பேசுவதும் இல்லை .ஆனால் அவை நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்பதும் , அநாகரீக முறையில் வெளிப்படையான கொண்டாட்டங்கள் நிகழ்வதும் கூடாது என்பது எனது வேண்டுகோள். எதற்கும் ஓர் எல்லை அல்லது வரம்பு உண்டு . சில நேரங்களில் ,சில இடங்களில் அவை மீறப்படுவது நாம் காண நேரிடுவதால் இந்த கருத்தை வலியுறுத்தி கூற வேண்டியது கடமையாகிறது . 

காதல் திருமணம் என்பது தற்போது மிகமிக சாதாரணமாகிவிட்ட சூழ்நிலையில் நான் முன்வைக்கும் இந்த வேண்டுகோளும் எடுபடாது என்றும் எனக்கு தெரியும் . நான் காதல் திருமணத்தை எதிர்ப்பவனும் அல்ல . அதனால் கலப்பு திருமணங்கள் கூடுகிறது என்றும் , சாதிமதம் மறைகிறது என்பதையும் நான் உணர்ந்தவன் என்பதால் ஒருவிதத்தில் மகிழ்ச்சியே . ஆனால் அதேநேரத்தில் அனைத்து காதல்களும் திருமணத்தில் முடிகிறதா என்பதும், மணக்கோலம் கண்டு திருமணம் நடைபெற்றாலும் அவர்கள் இறுதிவரை ஒன்றாக கருத்து வேறுபாடின்றி இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறிதான் . நான் இதை பொதுவாக கூறுகிறேன் ...ஒரு சில நிகழ்வுகளை கண்டதால் , குடும்பநல நீதிமன்ற தீர்ப்புகளை பற்றி கேள்விப்படுவதால் இந்த ஐயப்பாடு . பலர் இறுதிவரை இணைந்து மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன் . அதேநேரத்தில் காதலிப்பவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கூறி , அவர்கள் சம்மதத்தைப் பெற்று , இரு இல்லங்களின் ஒப்புதலுடன் மணவிழா நடைபெற்றால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சி .


பழனி குமார்  

நாள் : 14-Feb-18, 4:11 pm

மேலே