எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​அனுபவத்தின் குரல் - 95 ----------------------------------------- ​நூற்றாண்டுகள் பல...


​அனுபவத்தின் குரல் - 95   

-----------------------------------------


​நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்றுவரை நமது சமுதாயத்தில் ஒரு கேள்வி ​வலம் வந்து  கொண்டிருக்கிறது . பழங்காலத்தில் தொடங்கி , சங்க காலம் கடந்து , யதார்த்த நிலையை உணர்ந்து , விஞ்ஞானம் வளர்ந்து, பல சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தும் அந்த விடை தெரியா வினா மட்டும் தொடர்ந்து நீடிக்கிறது . அது என்னவெனில், சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம்தானா  ........இருவருக்கும் சம உரிமை உள்ளதா ...யாருக்கு அதிகாரம் , பொறுப்பு அதிகம் இருக்கிறது என்பது தான் . இன்னும் இதற்கு சரியான தீர்வோ அல்லது பதிலோ கிடைக்கவில்லை. இதையே தலைப்பாக கொண்டு இந்த காலத்திலும் பட்டிமன்றங்கள் ,விவாதங்கள் , சர்ச்சைகள் , வழக்குகள்  நடைபெறுவதை நாம் காண்கிறோம். நாம் அவற்றை ஊடகங்கள் அல்லது திரைப்படங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது . ஆனால் ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் சுயமரியாதை இழக்க விரும்பாமல் , கௌரவத்திற்காக ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்க மனமில்லாமல் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம் என்பதுதான் உண்மை . 


மனிதராக பிறந்த எவருமே ஒன்றுதான் மண்ணில் ..பாலினத்தால் பிரிக்கப்படுவதை , ஆண் என்பதால் உயர்ந்தவர் , வலிமை மிக்கவர் , வாழத் தகுதியானவர் என்றும் பெண் என்றால் பலவீனமானவர் , அணைத்து தகுதியிலும் , ஆற்றலிலும் ஆணைவிட குறைவானவர் என்ற ஒரு மாயை சமுதாயத்தில் நிலவி வருகிறது . அதற்கு முக்கிய காரணம்  காப்பியங்களிலும் , கவிதைகளிலும் , கதைகளிலும் கற்பனையாக வடிக்கப்பட்ட பெண் கதாபாத்திரங்கள் பற்றி தொடர்ந்து கூறப்படுவதும் , மக்கள் அதை நம்புவதும் ஆகும் . நாம் மென்மையான பெண்களைப் பற்றியும் படிக்கிறோம் , பல வீராங்கனைகள் பற்றியும் படிக்கிறோம் , வாழ்ந்ததை அறிகிறோம் . ஆனாலும் ஆண்களுக்கு பின்தான் பெண்கள் என்கிற எண்ணம் ஆழ்மனதில் தேங்கி கிடப்பதால் , வேரூன்றி தழைத்து இருப்பதால் அந்த பக்குவம் , இருபாலாரும் சமம் என்பதை ஏற்க மறுக்கிறோம் . இதுதான் யதார்த்தம் . நாம் வாழும் காலத்திலேயே சாதனை புரிந்த பல பெண்கள் இருந்தும் உளவியல் ரீதியாக ஒப்புக்கொள்வதில்லை சமூகம் என்பதுதான் உண்மை . 


உலக மகளிர் தினம் என்று அன்று ஒருநாள் மட்டும் சம்பிரதாயத்திற்காக , ஊரோடு ஒத்துப்போக , விளம்பரத்திற்காக , ஏதோ ஒருவகை சுயநலத்திற்காக , பெருமைக்காக கொண்டாடி மகிழ்கிறோம் . ஆனால் வாழ்வியல் நடைமுறையில் , குடும்பத்தில் , சமுதாயத்தில் நிலையாக பெண்களை ஆண்களுக்கு இணையாக அல்லது சமநிலையுடன் காண்பதில்லை , நடத்தவில்லை என்பது யதார்த்தம் .உயர் பதவியில் உள்ள பெண்களை மட்டும் வேறுவழியின்றி மதிக்கிறோம் போற்றுகிறோம் . ஆனால் அந்த உயர்ந்த பதவியில் உள்ள பெண்களுக்கே வீட்டில் என்ன நிலை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் . நான் பெண்களுக்காக ஆதரவாக , வக்காலத்து வாங்கிடவோ இதனை கூறவில்லை . நான் எனது அனுபவத்தில் கண்டதை , காண்பதை வைத்தே கூறுகிறேன் . நான் அரசியல்வாதியும் அல்ல பெண்கள் ஆதரவு கோரிடவும் ...அவர்களின் அனுதாபத்தை பெற்றிடவும் . பொதுவாக அனைவருக்கும் பெண்ணினத்தை சார்ந்த உறவுகள் உண்டு ... தாய்  தமக்கை, தாரம் மற்றும் நட்பு ரீதியில் . பெண்மையை போற்றுவோம் , பெண்ணினத்தைக் காத்திடுவோம் .  உலக மகளிர் தினத்தை ஒட்டி , எனது அனுபவத்தின் குரலாக பதிவு செய்கிறேன் .


 பழனி குமார்               


நாள் : 11-Mar-18, 10:01 pm

மேலே