எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் மறைவு தமிழ் கூறும்...
எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தமிழ் மண்ணின் நாடி துடிப்பை கண்டறிந்து துல்லியமாக அதன் மனம் குணங்களை புத்தக வடிவங்களாக கொண்டு வந்து உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரது சிந்தனைகளை விரிய செய்த பெருமை பாலகுமாரன் அவர்களையே சாரும். நமது மண்ணின் பெருமைதனை அவர்தமது எழுத்துக்களால் கொணர்ந்தது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம். ஒரு பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தது: " தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட திகைப்பு இன்றளவும் இருக்கிறது! எல்லா மனிதருக்கும் சரித்திரம் மிக முக்கியமென்று படும். எந்தப் பாரம்பர்யத்திலிருந்து வந்தோம்? யார் முன்னோர்? என் மொழியின் பலம் என்ன? என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறபோது, சரித்திரம் மிகப் பெரிதாக விரிவடைகிறது.அந்தக் கோயிலின் விமானத்தில் ஒரு நூல் பிசகினாலும் கோணலாகியிருக்கும். கல்லில் ஒரு நூலிழைகூட பிசகாமல் செதுக்கியிருக்கிற அந்த நித்ய விநோத பெருந்தச்சனை, குஞ்சரமல்லனை விழுந்து சேவிக்கத் தோன்றுகிறது. அவனைச் சீர்தூக்கி அமைத்த மன்னன் ராஜராஜனைக் கொண்டாடத் தோன்றுகிறது. அதனால் எழுந்ததுதான் உடையார்.
ஒரு தேசத்தின் கதை. ஒரு நதி தீரத்தின் நாகரிகம். தமிழ் மக்கள் அதை இருகரம் நீட்டி வாங்கிக்கொண்டார்கள். இத்தனை அழகா நம்மிடம் இருக்கிறது என்று வியக்கிறார்கள். ‘உடையார்’ படித்துவிட்டு குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிவந்த தமிழர்கள் ஏராளம்! ஏராளம்!"