எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஸ்போர்ட்ஸ்: உலக கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம் ஒட்டாவா...








ஸ்போர்ட்ஸ்:  உலக கால்பந்து போட்டிகள் இன்று தொடக்கம் 

ஒட்டாவா முதல் ஒசாகா வரை அனைத்துலக விளையாட்டு ஆர்வலர்கள் பேரார்வமுடன்  எதிர்பார்த்து வரும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று தொடங்குகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இப்போட்டி நான்குஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த  போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி வாகை சூடியது. 

தற்போது, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் ஜூலை மாதம் பதினைந்தாம் தேதி  வரை நடைபெறவுள்ளன. முப்பது இரண்டு நாடுகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் அறுபது நான்கு ஆட்டங்களாக நடைபெறும் இந்த போட்டியைக்காண சுமார் ஒரு கோடி ரசிகர்கள் மாஸ்கோ நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தகவல். போட்டியை உலக முழுதும்  ரசிகர்கள் கண்டு ரசிக்க இணையதளத்திலும் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்திய நேரப்படி இன்று  மாலை 6.30 மணிக்கு  போட்டிகள் தொடங்குகின்றன. தொடக்க ஆட்டத்தில் ரஷ்யா-சவூதி அரேபிய அணிகள் மோதுகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளின் கால்பந்து அணிகள் மற்றும் ஆர்வலர்கள் வருகையால் மாஸ்கோ நகரமே ஜிலு ஜிலு வென்று  திருவிழா கோலம் பூண்டுள்ளது.     போட்டிக்காக ரஷ்யாவில் பதினோரு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் பன்னிரண்டு மைதானங்களை தேர்வு செய்து, அடிப்படை வசதிகளையும் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் இறுதிப்போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மைதானம்  எண்பத்தோராயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டது.  

டிக்கெட்டுகள் ஆயிரத்து முன்னூறு ரூபாயிலிருந்து  இருந்து எழுபத்தோராயிரம் ரூபாய்  வரையிலான விலைகளில் விற்கப்படு கின்றன.  இதுவரை இருபத்தைந்து லட்சத்திற்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுள்ளன. மேலும் இந்திய ரசிகர்களுக்காக சுமார் பதினெட்டாயிரம் டிக்கெட்டுகளை ‘பிஃபா’ அமைப்பு ஒதுக்கியுள்ளதாம்.  பெரும்பாலான ரசிகர்கள், முக்கியஸ்தர்கள் வருகையையொட்டி மாஸ்கோவில் பாதுகாப்பு பணிகள் தீவிரப் படுத்தபட்டுள்ளன. சுமார் முப்பதாயிரம்   போலீசார் மைதானத்தை சுற்றி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்து  வரும்  கால்பந்து போட்டி 2022 இல்  கத்தாரில் நடைபெறும் என தகவல் உலக கால்பந்து போட்டியை பெருமையுடன்  கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனமும் தமது பங்காக  டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார்.

விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரின் விளையாட்டு பசிக்கு ஏற்ற  தீனி ‘பிஃபா’ உலக கால்பந்து போட்டி என்கின்ற சீனி தகவலை தனியாக பகிரவும் வேண்டுமோ ???!!!  

:::   கடையநல்லூரான்         

பதிவு : KADAYANALLURAN
நாள் : 14-Jun-18, 11:29 am

மேலே