"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" தாய்மையுணர்வை விட்டுத்தள்ளுங்கள் மனித...
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
தாய்மையுணர்வை விட்டுத்தள்ளுங்கள் மனித உணர்வு சிறிதுமின்றி இரு உயிர்களை அதுவும் ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்திருப்பது மிகப்பெரிய குற்றம். அக்குற்றத்தை செய்த குற்றவாளி மனித தன்மையற்றவர், நிச்சயம் அவர் சட்டத்தினாலும், சமூகத்தினாலும் தண்டிக்கப்பட வேண்டியவர். இந்த கருத்தில் சிறு மாறுபாடோ, சந்தேகமோ எனக்கில்லை. ஆனால் இச்சமூகம் கொலைசெய்த அபிராமியை மட்டுமே திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறதே தவிர அக்கொலைக்கு மூலகாரணான சுந்தரத்தை திட்டாமலும், இக்கொலையில் அவனது பங்கு என்னவென்பதை பற்றி பேசாமலும் அமைதிகாப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது(?!). ஏனெனில் தன் கடைக்கு தொடர் வாடிக்கையாளராக வந்த ஒரு பெண்ணை திருமணமானவர் என தெரிந்தும் தன் காம பசிக்கு இறையாக்க அவளை தன் வலையில் வீழ்த்தியதிலிருந்து தன் உறவுக்கு இடையூறாக இருந்த அவள் குழந்தைகளையும், கணவனையும் கொலைசெய்ய திட்டம்தீட்டி கொடுத்து அதை செயல்படுத்தியது வரை இச்சம்பத்தில் அய்யோக்கியன் சுந்தரத்தின் பங்கே முதன்மையானது. சட்டப்படியோ, நியாயப்படியோ அவனே இக்குற்றத்தின் முதன்மையானவன், அவனே அதிக தண்டனைக்குரியவன். அவனே முதலில் தண்டிக்கப்படவும் வேண்டும்.
அபிராமியை திட்டுவதும் அவள்மீது கோபம்கொள்வதும் நியாயம்தான், ஆனால் அப்படி கோபப்படும் நம்மில் எத்தனை பேர் சுந்தரத்தின் குற்றத்தை பேசுகிறோம்? எத்தனை பேர் அந்த அய்யோக்கின் மீது கோபம் கொள்கிறோம்? இச்சம்பவம் தொடர்பாக பதிவிட்ட பதிவுகளில் எத்தனை பதிவுகளில் சுந்தரத்தின் பெயர் இடம்பெற்றது? எத்தனை பதிவுகள் இக்குற்றத்தில் சுந்தரத்தின் பங்கை பேசியிருக்கிறது? அப்படியானால் இச்சமூகம் சுந்தரங்களையும், அவர்களின் அய்யோக்கியத் தனங்களையும் ஏற்றுக்கொள்கிறதா? அபிராமிக்கள் செய்தால் மட்டுமே அது தவறாகவும், குற்றமாகவும் பார்க்கப்படும் என்கிறதா? என்பதே என் கேள்வியாகும். முதலில் நம்மிள் இருக்கும் சுந்தரங்களை திருத்(ந்)துவோம், அதன்பிறகு அபிராமிக்கள் தன்னால் திருந்துவார்கள்.