எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் - 11 ************************ ஒருகாலத்தில் குடும்பம்...

வாழ்க்கைப் பாடம் - 11
************************


ஒருகாலத்தில் குடும்பம் என்றாலே அது கூட்டுக் குடும்பமாகத் தான் இருந்தது. நானும் அதுபோல ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தான். இருபது வருடங்களில் பலவிதமான அனுபவங்களைப் பெற்றவன் . நடைமுறை பிரச்சினைகள் ஒருசில எழுவது இயற்கை. ஆனால் பொதுவாக நன்மைகள் மிகுந்து இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அப்போது குடும்பத்தை நிர்வகித்து நம்மை வழிநடத்தி சென்றவர்கள் பெரியவர்கள் மட்டுமே. அவர்கள் பேச்சுக்கு மறுபேச்சு அல்லது மறுப்பது என்பது ஒருதுளியும் இருக்காது. மிகவும் பெரியவர்கள் உச்சநீதிமன்றம் என்றால், தாய் தந்தை போன்றவர்கள் மாநில நீதிமன்றம் என்ற அளவிலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் வாதி பிரதிவாதிகள் என்ற நிலையில்தான் இருப்பர் . இன்றும் சில கூட்டுக் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறது , வெளியில் தெரிவதில்லை . சில குறைகளும் இருக்கும் ,சிலநேரங்களில் வருந்தக்கூடிய நிலைகளும் நேரிடலாம் ...அதை கடந்து செல்வது வாடிக்கை. அது தானே வாழ்க்கை. 


அதுவே சில வேளைகளில் நமக்கு நல்ல பாடங்களை போதிக்கும் நிகழ்வுகளாக அமைந்திடலாம் .இந்த காலத்தில் , வாழும் இளைய தலைமுறைகளுக்கு இந்த மனநிலை சூழ்நிலை ஓத்துவராத ஒன்றாக இருக்கலாம் .அவர்கள் தனியாக வாழ்வதையும் சுதந்திரமாக இருக்கவும் முடிவு எடுப்பது என்பது காலத்தின் கட்டாயமாகவும் , அவரவர் சூழலுக்கேற்பவும் இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை . இது நாகரீகத்தின் வளர்ச்சியால் ஏற்படும் மாற்றமா அல்லது இக்கால தலைமுறையினரின் மனநிலையின் வெளிப்பாடா என்று தெரியவில்லை . எது எப்படியோ , அதனால் நமது கலாசாரம் சீரழியாமல் ,எண்ணங்கள் சிதைந்து விடாமல் இருந்தால் அது தவறில்லை .

வெளிநாடுகளில் தான் பிள்ளைகள் ஆரம்பக்கட்டத்திலேயே தனியாக சென்று வசிக்கும் நிலை என்பது நடைமுறை . ஒருவேளை அதன் தாக்கமாக அல்லது அதுவே ஒரு முன்மாதிரியாக கொண்டு வாழும் பழக்கம் இங்கே வந்துவிட்டதா என்றும் புரியவில்லை . ஆனால் அதேவேளையில் அங்கே நிலவும் கலாச்சாரம் வேறு , பழக்க வழக்கங்கள் வேறு . ஆகவே அதோடு நம்மை ஒப்பிட்டுக் கொள்வதும் சரியல்ல .இங்கும் அனைத்தும் மாறிவருகிறது என்பதை எவரும் மறுக்க இயலாது . ஆனால் அது நன்மை அளிக்குமா அல்லது எதிர்மறையான எதிர்காலம் உருவாகுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும் . நல்லது நடந்தால் சரிதான் . அதுதான் நமக்கு தேவை .

எனினும் எதிலும் ஒருமித்தக் கருத்து ஒன்று முடிவானால் அதுவே வீட்டிற்கும் நாட்டிற்கும் உகந்தது .


பழனி குமார்

நாள் : 1-Dec-18, 2:55 pm

மேலே