எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாடும் நாளிதழும் --------------------- நாளும் நவிலும் நாட்டு நடப்பை...

  நாடும் நாளிதழும் 

---------------------

நாளும் நவிலும் நாட்டு நடப்பை , நாற்திசைச்  செய்திகளை தவறாது வழங்குவது நாளிதழ்கள் . என்னதான் விஞ்ஞானம் வளர்ந்து ஊடகங்கள் பல்கப் பெருகி, தொலைக்காட்சி என விரிந்து இருந்தாலும் , காலையில் காபி அருந்துவதற்கு முன்னரே என் விழிகள் அன்றைய நாளிதழைத்தான் தேடும். சிறிது தாமதமாக வந்தாலும் எனக்கு கோபம் வரும். அதற்கு காரணம் சிறு வயது முதலே எனக்கு வந்தப் பழக்கம் இது. ஆனால் இந்த காலத்து பிள்ளைகள் காலையில் தேடுவது செல் போனும் , ஐ பேடும் தான் . காலத்தின் சுழற்சி , விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பதை மறுக்கவில்லை. 


நாளிதழ்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும் , ஒருசில, சிறந்த நாளிதழ்களும், வார இதழ்களும் , பத்திரிகைகளும் இல்லாமல் இல்லை. அவை இன்றுவரை தரம் , மணம் , பல்சுவை கொண்டதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது . இதில் அவரவர் விருப்பம் என்பது மாறுபடும் . 


நாட்டு நடப்பு என்றால் நாளும் காண்பது  பொதுவான நிகழ்வுகள் மற்றும் சூடான அரசியல், சினிமா செய்திகளுடன் ​இன்று ​வன்முறை, கொலை, கொள்ளைப் போன்ற செய்திகள் தான் அதிகம் வருகிறது. அதிலும் சிலவற்றை படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. 


குறிப்பாக கொலைகள் நடப்பது குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகள், பழிவாங்கும் நோக்குடனும் மற்றும் பாலியல் வன்முறையின் உச்சமாக நிகழ்கின்றன. ஏதோ பாகிஸ்தான் பயங்கரவாதியை கொல்வது போலவும், சீனாவின் சிப்பாய்களை பழிவாங்குவது போலவும் , தந்தையை மகனும், மகனை மகளை தந்தையே கூலிப்படை மூலம் கொல்வதும் வழக்கமாகி விட்டது. சாதி மத வெறியும், சொத்துக்கள் காரணமாகவும் நடைபெறுவது கொடூரமான ஒன்​று ​. 


தினமும் நாளிதழை பிரிக்கும் போது இது போன்ற நிகழ்வுகள் இருக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்குகிறது. காசுக்காக பெற்ற தாயை, தந்தையை ​கொல்வதும்  ​, உடன்பிறந்த சகோதரரை கொன்று தீர்ப்பதுதான் ​தான் தீர்வு என்றால் இந்த சமுதாயம்  எந்த அளவுக்கு சீரழிகிறது என்பதை நினைத்து பார்க்கும் போது கலக்கமும் துயரமும் தான் ஏற்படுகிறது. 


இதைப் பற்றி கூறினால் அத்தனைக்கும் காரணம் சமூக ஊடகங்களா, திரைப்படங்களா என்று பட்டிமன்றத்தில் விவாதம் செய்​வார்கள் ​. ஆனால் சமூகம் மாறிட, குற்றம் செய்யும் உள்ளங்கள் திருந்திட ஆக்கப்பூர்வமான செயல்களை ஆற்றிட எவரும் முன்வரவில்லை என்பது எனது ஆதங்கம். 
காலம் தான் பதில் கூற வேண்டும். 


பழனி குமார்   

நாள் : 19-Jul-19, 7:07 pm

மேலே