காலத்தின் கையில்.. ******************** இன்றைய நிலையில் ஊடகங்களில் மற்றும்...
காலத்தின் கையில்..
********************
இன்றைய நிலையில் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் நாளும் ஒரு செய்தி என்பது , மணிக்கு ஒரு செய்தி என்பது நொடிக்கு ஒரு செய்தி என்றாகி , அனைவரையும் பார்க்க வைப்பதும்,படிக்கத் தூண்டுவதும் மட்டுமன்றி குழப்பவும் செய்கிறது , சிரிக்கவும் வைக்கிறது , சில நேரங்களில் சிந்திக்கவும் தூண்டுகிறது.
இதில் அரசியல் , ஆன்மீகம் ,சமுதாய குற்றங்கள் , ஆணவக் கொலைகள், ஆத்திகம் நாத்திகம் பற்றிய கருத்து மோதல்கள் , பேச்சுக்கள் , மற்றும் விசித்திரமான நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவாதங்கள் ஆகிய அனைத்தும் அடங்கும் .இவைகளினால் உண்மை ,பொய் , இரண்டும் கலந்தவை , புரளிகள் , மாறுபட்ட அனுமானங்கள் , எதிர்பார்ப்புகள் மற்றும் தேவையற்ற நிகழ்வுகள் இப்படி ஏற்படுவது இன்று சாதாரணமாகிவிட்டது .
இதனால் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தவித பயனும் இல்லை என்பதை பலர் புரிந்து வைத்திருந்தாலும் சிலர் இன்னும் அறியாமல் இருட்டிலேயே வாழ்கின்றனர் . அறியாமை என்னும் மாயையில் உழல்கின்றனர். ஒரு சிலர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை, இன்று நாள் முடிந்தால் சரி ,நாளைப்பற்றியும், தம்மைப்பற்றியும், சமூகத்தைப் பற்றியும் நினைக்காமல் இருப்பதும் காண முடிகிறது . காலம் நம்மைவிட வேகமாக கடந்து செல்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் உள்ளனர் .
நம் நாட்டில் தனிநபர் முன்னேற்றம் தான் பெரிதாக கருதப்படுகிறது சமுதாய முன்னேற்றத்தை விட ...மக்களை ஏமாற்றும் அரசுகள் ,வாக்காளர்களை ஏய்க்கும் அரசியல்வாதிகள் ,பக்தர்களை மயக்கத்தில் சுழலவிட்டு, மூடநம்பிக்கை மூலம் மூளைச் சலவை செய்து, சிந்திக்கும் திறனை சிதைத்து, அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் ஒரு சில சாமியார்கள் / மடாதிபதிகள், ஆன்மீகம் என்ற போர்வையில் தனது உண்மை நிறத்தை மறைத்து மகிழ்ச்சி அடையும் சுயநல செயல்கள் இன்று வாடிக்கையாகிவிட்டது .
இந்த காட்சிகள் முடிவது எப்போது ? உறங்கிடும் உள்ளங்கள் விழிப்பதும் , அப்பாவி மக்களுக்கான விடியலும் எப்போது ? மாயை விலகி வாய்மை நிலைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் .அனைத்தும் கடந்து சென்று, ஒரு நல்ல முடிவை , பயன்மிகு, வளமிகு புதிய மாற்றத்தை காலம்தான் உருவாக்க வேண்டும் . அதை தீர்மானிக்கும் முடிவு, வல்லமை மக்கள் கையில் தான் இருக்கிறது. ஆனாலும் நாம் காலத்தின் மீது பழி சுமத்தி, நேரத்தை வீணாக்குவது பழகிவிட்டது. வளரும் தலைமுறை இனியாவது இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.
பழனிகுமார்
25.10.2020