எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிக்கோ. அப்துல் ரகுமான் மதம் இன்று ஒரு கெட்டவார்த்தையாக...

கவிக்கோ. அப்துல் ரகுமான்

மதம் இன்று ஒரு கெட்டவார்த்தையாக மாறிவிட்டது. ‘மதவாதி’ என்று ஒருவனை இன்று சொல்கிறோம் என்றால் மோசமான ஆள் என்று சொல்கிறோம் என்று ஆகிவிட்டது. அதற்கு காரணம் என்னவென்றால் எல்லா மதங்களிலும் மதவாதிகளிடம் லேபிள் மட்டும்தான் இருக்கிறது. உள்ளே சரக்கே இல்லை. மதம் படித்திருக்கிறார்களா என்றால் இல்லை மதம் பிடித்திருக்கிறார்கள்.

சமயங்கள் அத்தனையும் அடிப்படையான உண்மையாக ஒன்றைத்தான் சொல்கின்றன. உண்மையே இறைவன் என்றால் நாத்திகம் வந்திருக்காது. இறைவன் உண்மை என்றான் பிரச்சனை வந்துவிட்டது. உண்மை ஒன்றல்ல பார்வையற்றவர்கள் பார்த்த யானை போல உண்மை பலவாக இருக்கிறது. இருப்பது எதுவோ அதுதான் சத்தியம். இறைவனை ஒருவன் நம்புகிறான் என்று சொன்னால், அவனால்தான் எல்லா உயிர்களும் படைக்கப் பட்டிருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறான் என்று சொன்னால் பிற உயிர்களுக்கு எப்படி அவனால் தீமை இழைக்க முடியும்?

மனித உடல்தான் உண்மையான இறைவனின் உயிராலயம், வள்ளலார் ஜீவகாருண்யத்துக்கு ஓர் அற்புதமான விளக்கம் கொடுத்தார்; “இறைவன் இருக்கின்ற உயிராலயமாகிய இந்த உடல் பசியென்ற நெருப்பினால் எரிகின்ற பொழுது, அதை யார் ஒருவன் ஆகாரம் என்ற நீரால் அணைக்கின்றானோ அவன்தான் ஜீவகாருண்யன்” என்று.

இறைவனை எந்த ஞானியும் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியாது. ஏனென்றால் மனித மூளையின் செயல்பாட்டுக்கு ஓர் எல்லை உண்டு. வானவில்லில் ஏழு நிறம் என்கிறோம். ஏழுநிறம்தானா? அல்ட்ரா வயலட், இன்ஃபரா ரெட் என அது விரிவடைகிறது. பனிமலை நீரின் மிதக்கிற போது ஒரு முனை தெரியுமே அதுமாதிரியே இறைவனை தெரிந்து வைத்திருப்பது. பௌதீகத்தை கண்டறிவதே இப்படி என்றால் அபௌதீகத்தை எப்படி கண்டறிவான்?

பெரியபுராணத்தில் ஓர் அற்புதமான பாடல். சுந்தரமூர்த்தி நாயனாரை கல்யாண கோலத்தில் தடுத்தாள் கொண்டு ‘நீ என்னுடைய அடியவன்’ என்று இறைவன் சொன்னபோது, சுந்தரமூர்த்தி நாயனார் ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்கிறார், அதற்கு இறைவன் ‘எனக்கு சிறப்புமிக்க அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக என்றான் தூமரை பாடும் வாயான். சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரை பிறக்க வைத்ததன் நோக்கமே ‘தமிழில் பாடுவதற்கு’ என்கிறார் சேக்கிழார். எவ்வளவு தமிழ்ப்பற்று? அதென்ன சொற்றமிழ்; இறைவனைப் பாடுவதற்குரிய மொழி தமிழில்தான் இருக்கிறது. வேறு மொழிகளில் இல்லை. உலகம் முழுவதும் இறைவனை அவன்/அவள் என்றுதான் சொல்ல வேண்டும். சிவப்பிரகாசர் சொன்னார் தமிழில்தான் அவன் என்றால் ஆணாகிவிடுவாய், அவள் என்றால் பெண்ணாகி விடுவாய். அவர் என்ற பொதுச்சொல் தமிழில் இருக்கிறது நான் தப்பித்தேன் என்று.

சொற்றமிழ் பாடச் சொன்னவன் யார் என்றால் தூயமறையை யார் ஆக்கினானோ அவன் சொன்னான். மொழி பிரச்சனைக்கு இங்கு இடமே கிடையாது. இறைவனுக்கு சமஸ்கிருதம் மட்டும்தான் தெரியும் என்பவர்களுக்கு இறைவனைப் பற்றியே தெரியவில்லை என்று அர்த்தம். சாதாரண மனிதனுக்கே பத்துமொழி தெரியும். சாதாரணமானவனைவிட இறைவன் மோசமானவனா?

சங்க இலக்கியம் முழுக்க படித்துப் பார்த்தோம் என்றால் தொல்காப்பியத்தில் பார்த்தோம் என்றால் உலகமே வாழ்க்கை. அதை அகம், புறம் என்று இரண்டாக பிரித்தார்கள். ஒருத்தரை ஒருத்தர் விரும்பி கூடி வாழ்வதற்கு அகம் என்றார். அகம் என்றால் வீடு என்ற ஓர் அர்த்தமும் இருக்கு. அகம் என்றால் உள்ளம் என்ற அர்த்தமும் இருக்கு. உள்ளத்தால் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது அகம். அகம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் மெய். ஆககுடும்பம் என்பது மெய்யென்று சொன்னான் அகம்-புறம் அதான் மதம். சங்க காலம் முழுக்க நாம் பார்த்தால் பெரிய கோயில்களோ, பெரிய திருவிழாக்களோ இருந்ததாகத் தெரியவில்லை.

சங்க காலத்தைப் பொற்காலம் என்று சொல்ல ஒரு காரணம் அங்கு மதச்சண்டைகளே இல்லை. திணை நிலங்களை வணங்கி இருக்கிறான். குறிஞ்சியில் முருகன், முல்லையில் திருமால், மருதத்தில் இந்திரன், நெய்தலில் வருணன் என வணங்கி இருக்கிறார்கள். இத்தனைக்கும் நெடுங்காலமாக முருகனைத்தான் தலைமை தெய்வமாக வணங்கி இருக்கிறார்கள். அங்கேயும் அவர்களின் ஆன்மீக நுட்பம் தெரிகிறது. முருகனுக்கு வைத்த பெயர் ‘முருகு’ என்பது. முருகன் என்றோ முருகள் என்றே வைக்கவில்லை. திருமுருகு ஆற்றுப்படை என்றுதான் வைத்தார். முருகன் என்றால் இறைவன் ஆணாகிவிடுகிறான். இறை தத்துவம் ஆண்மை மட்டுமல்ல. முருகள் என்றால் இறைவன் பெண்ணாகிவிடுகிறான். இறைத்தத்துவம் பெண்மை மட்டுமல்ல. ஆண்மையும் பெண்மையும் கலந்தது. அதுதான் அர்த்த நாரீசுவரர் வடிவம்.

முருகு என்றால் அழகு என்று பொருள். அழகை தமிழன் ஆண்டவனாக வணங்கி இருக்கின்றான். பூவைப் பறித்து இறைவனுக்கு அர்ச்சனைப் பண்ணி கொண்டிருந்தவர் தாயுமானவர். ஒருநாள் பூவை பறிக்கப் போனவரை பூ பறித்துவிட்டது. அப்பொழுதுதான் ஆண்டவனை தரிசிக்கிறார். உன்னையே பிடுங்கி உன்மேல் போட்டு நான் பூசையென்று நினைத்துக் கொண்டிருந்தேனே என்கிறார். தமிழர்களின் சிறப்புகளில் மற்றொன்று. உயிர் எழுத்து மெய்யெழுத்து என்று பெயர் வைத்தது. உலகில் யாரும் எழுத்துக்களுக்கு இதுமாதிரி பெயர் வைக்கவில்லை. உயிர் எழுத்தை முதலிலும் மெய்யெழுத்தைப் பின்னாடியும் வைத்திருக்கிறார்கள். என்ன அர்த்தம் என்றால் உயிர் தோன்றியது முதலில் பிறகு மெய் தோன்றியது. உயிரில்லாமல் மெய் இருக்காது. தமிழர்கள் ஞானத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

ஒழுக்கத்தையே மதமாக வைத்திருக்கின்றார்கள். அதனால் பெயர் வைக்கும் போதுகூட உயர்திணை என்று வைத்தார்கள். திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். தொல்காப்பியர் கூறுகிறார். ‘உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே’ என்று. பிறரால் எவன் மனிதன் என்று சுட்டிக்காட்டப் படுகின்றானோ அவன்தான் மனிதன். உயர்வுக்கு எதிர்பதம் தாழ்வு. ‘தாழ்திணை’ என்றுதான் வைத்திருக்க வேண்டும். ஆனால் தொல்காப்பியர் அஃறிணை என்று வைத்தார். உயர்வு அல்லாத மற்ற திணைகள் என்பது பொருள். தாழ்ந்ததைக் கூட தாழ்ந்ததென சொல்லக்கூடாது என்று தமிழ்ப் பாண்பாடு நினைக்கிறது. எனவே அது உய்வு அல்லாத திணை என்றார்.

சத்தியம் என்பது ஒன்றுதான் என்ற வார்த்தை வேதத்தில் வருகிறது. இதையெல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பலவாக இருப்பது என்பது நாம் புரிந்து கொண்டது. இதைத்தான் தெய்வங்கள் பல பெயருடனும் வடிவத்துடனும் வணங்கப்படினும் அவை எல்லாமாயிருப்பது ஒருவனே என்ற கருத்து சங்க இலக்கிய பரிபாடலில் வருகிறது.

பாமரர்களுக்கு இருக்கிற இறை பற்றி ஞானம் கூட படித்தவர்களிடம் மதவாதிகளிடம் இல்லை. பாமர மக்கள் கூறினார்கள், ‘அரியும் சிவனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயில் மண்ணு’ என்று.

(மதுரை காமராசர் பல்கலைக்கழக சமயங்கள், தத்துவம், மனிதநேயம் புலத்தின் சார்பில், தமிழ்ச்சமய மரபுகளும் உலகச் சமயங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் கவிக்கோ அப்துல் ரகுமான் முதன்மை உரையாகப் பேசியதிலிருந்து)

நன்றி : புதிய காற்று மாத இதழ் மார்ச் 2006

பதிவு : myimamdeen
நாள் : 4-May-14, 9:51 am

மேலே