வெளிச்சத்திற்கு வந்த நாடகம் ! மோடி பதவியேற்பு விழாவுக்கு...
வெளிச்சத்திற்கு வந்த நாடகம் !
மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து, தமிழக முதல்வர் மிகவும் ஜாக்கிரதையான வார்த்தைகளை தனது அறிக்கையில் பயன்படுத்தியிருந்தார்.
"தவறான ஆலோசனையின் பேரில் அமைந்த இந்தச் செயல் தவிர்க்கப்பட்டிருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற அடிப்படையிலும் தேசிய, சர்வதேச அரசியல் பற்றி அறிந்தவர் என்கிற ரீதியிலும் முதல்வரின் வார்த்தைப் பிரயோகங்கள் ஆழமாக இருந்தன. அதற்கேற்றார்போல...யாருமே எதிர்பாராத விதமாக வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ராஜபக்சே "வாங்க டெல்லிக்கு ஹாயா போயிட்டு வரலாம்" என்று அழைப்பு விடுத்து இருக்கிறார். ஏதோ பல காலம் அன்பாகக் கட்டிப்புரண்டு வாழ்ந்த ஒரு சமூகத்தின் ஒரு முதல்வரை அழைப்பதுபோல விக்னேஸ்வனை ராஜபக்சே அழைக்கும்போதே....இந்த விவாகரத்தில் ராஜபக்சேவையும் வரவழைக்கவேண்டும், தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு வலுக்கக்கூடாது என்ற இந்திய வெளிவிவகாரத்துறையின் ஏக்கமும், தடுமாற்றமும் புரிகிறது.
இத்தகயை நிலையில்..."வடக்கு மாகாணத்தில் ராணுவ நிலை நிறுத்தல்கள் இன்னமும் எம்மைக் கட்டுப்படுத்தி வருகின்றன. நான் அதிபரோடு டெல்லி சென்றால் உண்மையை மறைத்ததாகிவிடும் எனவே நான் வரமுடியாது" என்று பகிரங்கமாகவும், முகத்தில் அறைந்தாற்போலவும் சொல்லியிருக்கிறார் விக்னேஸ்வரன்.
இதையெல்லாம் தாண்டி...இந்த சர்ச்சையில் கலைஞர் கருணாநிதி வெளியிட்ட சில வாசகங்கள் மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. "இலங்கையை நட்பு நாடு என்று சொல்லி வந்த காங்கிரஸ் அரசுக்கு விளைந்த எதிர்மறை விளைவுகளை பா.ஜ.க., நினைவு கூர வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆக...மோடி அரசு பதவியேற்கும்முன்னரே...ஏற்கனவே பழைய இலங்கை அரச பாசத்தில் இருக்கும் வெளியுறவு அதிகாரிகளோ...பா.ஜ.கவின் அங்கமாக இருக்கும் சர்வதேச தொடர்புடைய சுப்ரமணியன் சாமி போன்றவர்களோ அரங்கேற்ற நினைத்த ஒரு நாடகத்தை விக்னேஸ்வரன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.
ராஜபக்சே எந்த போர்க்குற்றமும், இனப்படுகொலையோ... இனத்துவேசமோ காட்டாதவராக இருந்திருந்தால் இந்த சர்ச்சையின்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கலாம்... நான் குற்றமற்றவன். எனினும் தமிழ்நாட்டு மக்களும், உலகத் தமிழர்களும் என்மீது குற்றம் சாட்டுகின்றனர். நான் எந்த விசாரணைக்கும் உட்பட்டு குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டு இந்தியாவுக்குள்...ஏன் தமிழ்நாட்டிற்குள்ளேயே கால் வைப்பேன் என்று...!
சொல்வீர்களா ராஜபக்சே....சொல்வீர்களா ???
நன்றி : - (விஷ்வா) விஸ்வநாத், TNTV- SBNN News Service