சென்னை : பொறியியல் கவுன்சலிங்கை ஒத்திவைத்தது தெரியாமல் அண்ணா...
சென்னை : பொறியியல் கவுன்சலிங்கை ஒத்திவைத்தது தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெட்டி, படுக்கையுடன் வந்த கிராமப்புற மாணவர்களும் பெற்றோரும் ஏமாந்தனர்.தமிழகத்தில் 571 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்து 76 ஆயிரம் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மாணவர் சேர்க்கையின் முதல்கட்டமாக 10 இலக்கங்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 16ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.பொது பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் நேற்று தொடங்கி அடுத்த மாதம் 28ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்து.இந்நிலையில், அகில இந்திய கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தமிழகத்தை சேர்ந்த 9 தனியார் கல்லூரிகள், பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், பொறியியல் சேர்க்கைக்கான முதல் கட்ட கவுன்சலிங் 27ம் தேதி தொடங்கி, ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முதல்கட்ட கவுன்சலிங்கை ஜூலை 15க்குள் அண்ணா பல்கலைக்கழகம் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.இதனை தொடர்ந்து நேற்று நடைபெறுவதாக இருந்த பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக பொது பிரிவு கவுன்சலிங் மறுதேதி அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கவுன்சலிங் நடக்கும் அண்ணா பல்கலை பகுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், அதனால் கவுன்சலிங் தள்ளி வைக்கப்பட்டது குறித்தும் பேனர்கள் வைக்கப்பட்டன.மாணவர்கள் வருகை: கவுன்சலிங் ரத்து செய்யப்பட்ட தகவல் கிடைக்காத மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் நேற்று காலை 6 மணி முதல் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வர ஆரம்பித்தனர். அப்போது பல்கலைக் கழகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேற்கொண்டு அவர்கள் யாரிடம் கேட்பது என்பது புரியாமல் தவித்தனர்.அதிகாரி விளக்கம்: அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கவுன்சலிங்குக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. அண்ணா பல்கலையில் தொடங்கவிருந்த பொறியியல் மாணவர்களுக்கான பொதுபிரிவு கவுன்சலிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கவுன்சலிங் துவங்குவது குறித்து ஏஐசிடிஇ தகவல் அளித்ததும் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு கூடி கவுன்சலிங் தேதியை முடி வெடுக்கும். பெரும்பாலும், ஜூலை மாதம் 4ம் தேதி முதல் முதல்கட்ட பொதுபிரிவு கவுன்சலிங் நடைபெற வாய்ப்புள்ளது’’ என்றார்.ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: இந்நிலையில், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார்ஜெயந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இது குறித்து குமார் ஜெயந்த் கூறுகையில், ‘‘ஏஐசிடிஇக்கு உச்சநீதிமன்றம் 7 நாட்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளது. ஏஐசிடிஇ அங்கீகாரம் அளித்து, எங்களுக்கு தகவல் கொடுத்ததும் நாங்கள் எங்கள் பணியை, மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத அளவில் முடிப்போம்.
ஏஐசிடிஇ 7 நாட்களுக்கு பதிலாக ஒரே நாளில் பணியை முடித்தால் கூட, அடுத்த இரண்டு நாட்களில் கவுன்சலிங்கிற்கான பணிகள் துவங்கிவிடும். மேலும், மாணவர்களுக்கு கவுன்சலிங்கில் கலந்து கொள்ள போதிய காலஅவகாசம் கொடுக்கப்படும். இதுகுறித்து உரிய தகவல் முன்னதாக அனுப்பி வைக்கப்படும்’’ என்றார்.மாணவர்கள் விரக்தி: கவுன்சலிங்கில் கலந்து கொள்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து வந்திருந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “கவுன்சலிங்கில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்தோம். இங்கு உறவினர் வீட்டில் தங்கியிருந்தோம். நேற்றிரவு 7.30 மணிக்கு கவுன்சலிங் ரத்து செய்யப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது.கவுன்சலிங் குறித்த கூடுதல் தகவலை தெரிந்து கொள்வதற்காக அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வந்தேன். அதிகாரிகளிடம் கேட்டபோது, கவுன்சலிங் துவங்க குறைந்தது 10 நாட்கள் வரை ஆகும் என்றார். இதனால் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்கிறோம். கவுன்சலிங் துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்தாகவே தகவல் அளித்தால் நன்றாக இருக்கும் என்றார்.
வாசலில் வரவேற்பு
அண்ணா பல்கலைக்கழக முதன்மை வாசல் பகுதியில் காத்திருந்த அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் தலைமையிலான குழுவினர், கவுன்சலிங்கிற்காக வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம், தற்காலிகமாக கவுன்சலிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது நீங்கள் திரும்பி செல்லுங்கள் என கூறினர். மேலும், கவுன்சலிங் துவங்குவதற்கு முன் உங்களுக்கு உரிய தகவலை அனுப்பி வைப்போம் எனவும் கூறினர். இதை தொடர்ந்து மாணவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.