நெஞ்சக்குமுறல் தாழிடப்பட்ட அறையை திறந்து முதலாக நுழைகிறேன், நிசப்தத்தை...
நெஞ்சக்குமுறல்
தாழிடப்பட்ட அறையை
திறந்து முதலாக நுழைகிறேன்,
நிசப்தத்தை அகற்றிக் கொண்டிருக்க
உதவிக்கு மின்விசிறியை அழைத்துக்கொண்டேன்,
இப்போது எங்கும் ஓலம்
சப்தம் காதைப் புடைத்துக்கொண்டிருக்கிறது,
நேற்றைய(03/07/2014) செய்தித்தாளில்
பாலத்தின் சுவற்றில் தந்தையால் அடிக்கப்பட்ட
பச்சிளம் குழந்தையின் ஓலம்,
குழந்தையை தன் கணவனே
கொடூரமாய் கொல்வதைப் பார்க்க நேர்ந்த
தாயின் கதறல் ஓலம்
மவுலிவாக்க கட்டட இடிபாட்டில்
இறந்த தொழிலாளிகளின் ஓலம்,
உயிர் மட்டும் மீட்கப்பட்டு
நடைபிணமாய் வாழ நேர்ந்த
உழைப்பாளிகளின் ஓலம்,
இப்படி நான் அறிந்த நாட்களின் ஓலங்களை
ஒவ்வொன்றாய் மின்விசிறி வரிசையாய் ஓலமிட்டுக்கொண்டிருக்க,
இதயமே வெடித்துவிடுவதான ஈழ ஓலம்
இறுதியாய் கதறத் தொடங்கியது
"ஓ" என்று ஓலமிட்டபடி
தரையை அறைந்து கதறினேன்,
மின்சாரம் நின்று அறை நிசப்தமானது
ஓலம் அடங்க மறுக்கிறது
என் இதய அறையில் ..........