எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மதுரை,: தமிழர் அடையாளமான வேட்டி குறித்த விழிப்புணர்வுடன், அதற்கான...



மதுரை,: தமிழர் அடையாளமான வேட்டி குறித்த விழிப்புணர்வுடன், அதற்கான விற்பனையை நாடு முழுக்க வேகப்படுத்தி, கலாச்சார பண்பாடு காக்க நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த கிரிக்கெட் கிளப் விழாவில் வேட்டி அணிந்து சென்ற நீதிபதி, மூத்த வக்கீல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழர் அடையாள, இந்திய உடை பெருமைக்குரிய இந்த வேட்டிக்கு நேர்ந்த அவமானம், பலதரப்பிலும் கண்டன குரல்களாக ஒலித்து வருகின்றன. வேட்டி அணிவது குறித்த விழிப்புணர்வை அரசு, மக்கள், அமைப்புகள் இணைந்து முடுக்கி விட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சோமாலியர்கள், அபார் இனத்தவர் இந்த வேட்டியை மகாவிக என்கின்றனர். தமிழர்கள் வாழ்கிற ஆப்ரிக்கா, இலங்கை, வங்காள தேசம், மாலத்தீவிலும் வேட்டி உண்டு. எனினும் தமிழகத்தின் முக்கிய உடையாகவே வேட்டி இருக்கிறது. திருமணம் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் கட்டாயம் வேட்டி கட்டுகின்றனர். அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், கோயில் ஊழியர்கள் பலரும் அன்றாடம் அணிகின்றனர்.
ரஷ்யாவில் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்க சென்ற காமராஜருக்கு அதிகாரிகள் கோட் தைத்து கொடுத்தனர். இதை அணியமாட்டேன் எனக்கூறி, வேட்டி, சட்டையில் வெளிநாடு சென்று திரும்பினார். இன்றும் விருதுநகர் காமராஜர் இல்லத்தில் காமராஜர் போடாத கோட் ஞாபகச் சின்னமாக இருக்கிறது. தலைவர்கள் போற்றி காத்த, வேட்டி உடை காக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு கோஆப்டெக்ஸ் நிறுவனம் பொங்கல் நாளை வேட்டி நாள் என அறிவித்து விற்பனை நடத்தி சாதனை புரிந்தது. இந்த கலாச்சார, பண்பாட்டுக்குரிய ஆடை அணிந்து சென்ற நீதித்துறையினரை அனுமதிக்க சென்னை விழாவில் மறுக்கப்பட்டிருப்பது, பலருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு வேதனையை அள்ளித்தரும் செயலாகும்.
இதுகுறித்து மதுரை கல்வியாளர் ஜேம்ஸ் லூர்துராஜ் கூறுகையில், சர்தார் வல்லபாய் பட்டேல் குஜராத்தில் வக்கீல் தொழிலின்போது வேட்டி கட்டி சென்றார். கழுத்தில் அணிகிற ஒயிட் ஸ்காலர்தான் சரியான அடையாளம் எனவும், இந்திய ஆடையான வேட்டி சட்டையில் தவறில்லை என்றும் வாதாடினார்.
காந்தியடிகளின் நண்பரும், விடுதலை போராட்ட வீரரும், ரேகைச்சட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவரும், வக்கீலுமான ஜார்ஜ் ஜோசப் தமிழர் அடையாளம் என்றபடி வேட்டி, சட்டையில் சென்றுதான் மதுரை மகாலில் இருந்த நீதிமன்றத்தில் வாதாடினார். இதுபற்றி அறிந்து, இதனைக் காண, காமராஜர் விருதுநகரிலிருந்து மதுரைக்கு வந்த வரலாறும் இருக்கிறது. எனவே நம் கலாச்சார உடையான வேட்டி அணியும் பண்பாடு மேலும் வளர்க்கப்பட வேண்டும். இதற்கென அரசு பல்வேறு திட்டங்கள் தீட்டி நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றார்.

வேட்டிக்கு வேறுமொழியில்
தமிழில் வேட்டி என்கிற இந்த உடை, சமஸ்கிருதத்தில் தவுத்தா, ஒரியாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமிய மொழியில் சூரியா, வங்காளத்தில் தூட்டி என்றழைக்கப்படுகிறது. மேலும், இந்த வேட்டியை கன்னடத்தில் தோத்தி அல்லது கச்சே, கேரளத்தில் முந்த்து, தெலுங்கில் தோத்தி அல்லது பன்ச்சா, மராத்தியில் தோத்தர், பஞ்சாபியில் லாச்சா,
உபி, பீகார் பகுதிகளில் மர்தானி என நாடு முழுக்க பலரும் பலதரப்பட்ட பெயர்களில் அழைக்கின்றனர்.

நாள் : 16-Jul-14, 5:53 pm

மேலே