நடைப்பழகும் சூரியன்-9 பாக்களால் பாதை அமைத்தேன் உன் பூக்கால்களால்...
நடைப்பழகும் சூரியன்-9
பாக்களால் பாதை அமைத்தேன் உன்
பூக்கால்களால் பழகு நடை
வாட்டம் மனதில் மங்கியழிய நாளும்
தோட்டத்தில் பழகு நடை
சோற்றில் கை மூழ்க உழவனுடன்
சேற்றில் பழகு நடை
அதிகாலையின் சோம்பலழி -சொக்கவைக்கும் காலைக்
கதிரின் விரிவு காண்
தந்தை விரல் பிடித்து நட
முந்தி வரும் பட்டறிவு
அன்னை கரம்பற்றி நட-என்றும்
முன்னை மறையும் இடர்
தோழமைத் தோள் படர்ந்து நட
ஏழைக்கு உதவு நாளும்
அழுத கண்களின் அருந்துயர் துடைக்க
எழுந்து நட ஏற்றமுடன்
பொய் மெய் ஆய்ந்தறிய -பள்ளிக்கு
பைத் தூக்கி நட
இரு கை விரித்து நடக்கின்றாய்
பெரு இன்பம் என்னுள்
பன்னொலி எழுப்பி நடக்கின்றாய் -அவை
மண்ணின் மொழிகளா சொல்?
புயலென காலசைத்து நடக்கின்றாய் புன்னகையுடன்
கயல் மீனாய் என்னிதயம்!
விழுவாயோ என நான் பதறுகையில்
அழகாய் அமர்ந்து சிரிக்கிறாய்