இசைத்தமிழ் நூல் கருணாமிர்த சாகரம் - ஓர் அறிமுகம்

(Tamil Nool / Book Vimarsanam)

இசைத்தமிழ் நூல் கருணாமிர்த சாகரம் - ஓர் அறிமுகம் விமர்சனம். Tamil Books Review
இசைத்தமிழ் நூல் கருணாமிர்த சாகரம் - ஓர் அறிமுகம்
- ஆ. ஷைலா ஹெலின்

இசை எனப்படும் போது மெய்யது பனிப்ப உள்ளமது இனிக்க ஒரு வகையான பேருவகை மனத்தில் ஏற்படுகிறது. இவை மக்களின் வாழ்வியலில் உட்படும் ஒரு முக்கிய கூறாகும.; இந்தியக் கலாச்சாரம் நுண்கலைகளுக்குப் பெயர்பெற்றது. இசைக்கலை நுண்கலைகளுள் ஒன்றாகும். இசைத்தமிழின் வளமையைக் காண பல நூறு ஆதாரங்கள் தொல்காப்பியம் முதலாக இக்கால இலக்கியங்கள் வரையிலாக இலைமறைக்காயாக கிடக்கின்றன. இசை பற்றி ஒவ்வொரு இலக்கியமும் அதன் தேவைக்குத் தக்கவாறு குறிப்பிட்டுள்ளது. அவற்றைத் திரட்டி முறைப்படுத்தினால் அக்கால இசைக்கலையைப் பற்றிச் சிறிது அறிய வாய்ப்பு கிடைக்கிறது. இருப்பினும் முத்தமிழின் நடுவண் தமிழான இசைத்தமிழின் வரலாற்று தொன்மையும், கருத்து செறிவும் சிறப்புப் பெற்றிருப்பினும் அதன் அறிமுகமும் தெளிவுகளும் மக்களுக்கு மறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் ஒளிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்த நிலையை மாற்றி, இசைத்தமிழின் முழு விவரங்களின் தொகுப்பாக ‘கருணாமிர்த சாகரம்’ அமையப்பொற்றது தமிழ் மொழி; மற்றும் இசைத்தமிழின் சிறப்பினை நிலைநிறுத்தும் ஒரு தூணாக இருக்கிறது. இச்சிறப்பு வாய்ந்த “கருணாமிர்த சாகரம்” நூலினை அறிமுகம் செய்வதே நோக்கமாகும்.
கருணாமிர்த சாகரம் செய்த மு.ஆபிரகாம் பண்டிதர்(2-8-1859–31-8-1919), குற்றாலத்திலுள்ள சம்பவார்; வடகரை என்ற ஊரில் திரு.முத்துசாமிக்கும், திருமதி. அன்னம்மாளுக்கும் புதல்வனாக பிறந்தார். தமிழிசையின் பல நுட்பமான கருத்துகளை விளக்கும் இசைத்தமிழ் நூல் பண்டிதரின் பல்லாண்டு ஆராய்ச்சியால், கி.பி. 1917-ஆம் ஆண்டு கருணாமிர்த சாகரம் முதல் நூலும் 1946-ஆம் ஆண்டு இரண்டாம் நூலும் வெளியிடப்பட்டன. இந்நூல் 1346 பக்கங்களை கொண்டதாகும்.

கருணாமிர்த சாகர முதல் புத்தகம்
கருணாமிர்த சாகர முதல் புத்தகம் நான்கு பெரும் பாகங்களைக் கொண்டது. இப்பகுப்பிற்கு முன்பாக முகவுரை, பூர்வ இசைத் தமிழில்(சங்கீதத்தில்) காணப்படும் அரும்பத விளக்கமும் சில குறிப்புகளும் பாயிரமும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

முதல் பாகம்
கருணாமிர்தசாகர முதல் புத்தகத்தின் முதல் பாகம் ஏழு உள் பகுப்புகளைக் கொண்டிருக்கிறது. இதில் இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம் விளக்கப்பட்டுள்ளன. அவைகளாவன,
1. சங்கீதத்தின் பெருமையும் அதன் உற்பத்தியும்
2. சங்கீதம் பூர்வமாயுள்ளதென்பதற்குச் சத்திய வேத ஆதாரமும் அக்காலத்தில்
வழங்கிவந்த சங்கீத வாத்தியங்களும்
3. ஜலப்பிரளயத்தால் அழியுண்ட தமிழ் நாடுகளும் கலைகளும்
4. தமிழ்ப் பாஷையினது தொன்மை
5. இந்திய சங்கீதத்தைப்பற்றிப் பலர் சொல்லும் வௌ;வேறு அபிப்பிராயம்
6. தென்னிந்திய சங்கீதத்தை அப்பியாசித்து வந்தவர்களைப் பற்றிய சில
குறிப்புகள்
7. தஞ்சை சங்கீத வித்யா மகாஜன சங்கம்

இரண்டாம் பாகம்
கருணாமிர்த சாகர முதல் புத்தகத்தின் இரண்டாம் பாகம் இசையின் இருபத்திரண்டு சுருதிகள் பற்றியதாகும். சிறப்பு வாய்ந்த சில இசை ஞானிகளின் சுருதியின் முறையும் அவர்களின் கருத்துக்களும் விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சங்கீத ரத்தினாகரம் எழுதிய சாரங்கரின் சுருதியின் முறையும் இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்கள் நன்கு ஆராயப்பட்டுள்ளன.
மூன்றாம் பாகம்
கருணாமிர்த சாகர முதல் புத்தகத்தின் மூன்றாம் பாகம் தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத்தமிழ் சுருதிகள் குறித்து குறிப்பிடுகின்றது. மற்றும் இசைத்தமிழில் வழங்கிவரும் சுரங்களும் சுருதிகளும் இன்னின்னவையென்று சொல்லும் பூர்வ முறை, பண்டைத் தமிழ்மக்கள் தேர்ச்சிபெற்றிருந்த இசைத்தமிழில் வழங்கிவந்த சில கலைகளின் விவரம், பூர்வகாலத்தில் தமிழ்நாட்டில் வழங்கிவந்த இராகங்களின் தொகைளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

நான்காம் பாகம்
கருணாமிர்த சாகர முதல் புத்தகத்தின் நான்காம் பாகத்தில் கருநாடக சங்கீதமென்றழைக்கப்படும் இசைத்தமிழில் வழங்கிவரும் சுருதிகளின் கணக்கு நுட்பமாக ஆராயப்பட்டுள்ளன. மேலும் நான்கு பகுப்புகளில் மனுடனும் யாழும், சுரங்கள், சுருதிகள், நுட்பமான சுருதிகள் ஆகிய இவைகளி;ன் கணிதமும் அவைகள் வழங்கி வரும் பண்களும் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்து வந்த பாண்டிய அரசர்கள் முத்தமிழையும் ஆதரித்து வந்தார்கள் என்பதைக் காட்டுகின்ற சாசனங்களையும, இந்திய சங்கீதத்தையும் இந்தியாவையும் பற்றிய சில முக்கிய குறிப்புகளும் வரையறைக்கப்பட்டுள்ளன.

கருணாமிர்த சாகர இரண்டாம் புத்தகம்
கருணாமிர்த சாகர இரண்டாம் புத்தகம் நான்கு பெரும் பாகங்களைக் கொண்டது.
முதல் பாகம் இராகங்களைப் பற்றியது.
இரண்டாம் பாகம் உலகில் வழங்கி வரும் தாய் இராகங்கள் அல்லது மேளக்கர்த்தாக்கள் குறித்ததாகும்.
மூன்றாம் பாகம் 72 மேளக்கர்த்தாக்களையும் அவற்றில் வழங்கிவரும் ஜன்னிய இராகங்களையும் அவைகளின் ஆரோகண அவரோகண சுரங்களையும் அவைகள் இன்னின்ன அலகில் வருகின்றன என்பதனையும் விளக்குகிறது.
நான்காம் பாகத்தில் 72 மேளக்கர்த்தாக்களில் வழங்கிவரும் ஜன்னிய இராகங்களிலும் இன்னும் புதிதாய் உண்டாகும் இராகங்களிலும் ஆரோகண அவரோகண சுரங்களைத் தெரிந்து கீதம் கீர்த்தனம் செய்யும் முறையும் சிறப்புற விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசை இலக்கணத்தைக் கொண்டு இராகங்களை ஸ்புடம் செய்து கீதம், கீர்த்தனம், சுரஜதி, வர்ணம் முதலியன செய்யும் விவரம் ஆராயப்பட்டுள்ளன.

இராகஸ்புட முறையை மலையாளத்தில் ‘இராக விஸ்தாரம்’என குறிப்பிடுகின்றனர். இந்த இராகஸ்புட முறையை முதன் முதலில் உலகினுக்கு அறிமுகப்படுத்தியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

தமிழுக்கென்று இசையில்லை, இசை வரலாறு இல்லை என்று பல காலம் நிலவிய மாயை இருளை நீக்கித் தமிழிசை வரலாற்றையும் கனமான தமிழிசையையும் இசைத்தமிழின் சிறப்பினையும் அறிந்து கொள்ள முதல் வித்தினை விதைத்தவர் தமிழ்த்தாத்தா எனும் மகோபாத்திரியாயர் உ.வே.சா அவர்கள். “இருளில் புதைந்து கிடந்த இசைத்தமிழ்ப் புதையலை 1892-இல் உ.வே.சா சிலப்பதிகார பதிப்பின் மூலம் வெளிக்கொணர்ந்தார். இந்நூல் இன்றேல், கருணாமிர்த சாகரம் இல்லை” என்கிறார் இதன் ஆசிரியர் ஆபிரகாம் பண்டிதர். தமிழ் இசையே உலகில் ஆதியிசைகளிலெல்லாம் முதன்மையானது என்றும் ஏழு சுரங்கள் மற்றும் பன்னிரண்டு சுர நிலைகளை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இசையின் இலக்கணத்தையே உலகின் பிற இசை வடிவங்களும் பின்பற்றத் தொடங்கின என்றும் அவை முதலில் தோற்றம் பெற்ற இடம் தமிழ் மண்ணே என்றும் கருணாமிர்த சாகரம் விரிந்துரைக்கிறது.
கருணாமிர்த சாகரம் இசைத்தமிழ் ஆய்வின் முன்னோடி நூலாகும். இது முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழ் என்னும் சங்கீத நூல். ‘சங்கீதமானது மனதைச் சாந்தப்படுத்தி, தெய்வத்தோடு ஒற்றுமைப்படச் செய்து, சகல நற்குணங்களையும் வளர்த்தித் தெய்வபதம் பெறச் செய்கிறது. இம்மேம்பாடுடைய சங்கீதத்தை அப்பியாசிக்கும் ஜனங்கள் எவர்களோ, அவர்களை அது உயர்த்தி அவர்களிருக்கும் தேசத்தை மேன்மைப்படுத்திச் சகல கலைகளிலும் செல்வத்திலும் தெய்வபக்தியிலும் விருத்தியடையச்செய்கிறது’ என ஆபிரகாம் பண்டிதர் கருணாமிர்த சாகர முதல் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவாக
செம்மொழியாம் தமிழ்மொழி முத்தமிழாகும். முக்காலியின் ஒரு காலாக இலக்கியத்தமிழ் மட்டும் நிலைத்து நின்று கொண்டு, மற்ற இரு கால்களான இசைத்தமிழும் நாடகத்தமிழும் நிலைபெற்று நிற்கவில்லையெனில், தமிழ் மொழி தொடர்ந்து சிம்மாசனத்தில் வெற்றி வாகை சூடி அமர்ந்திடாது மேன்மையிழந்து போய்விடும். 19-ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் தமிழிசைக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் எனும் சிறந்த தமிழிசை இலக்கண நூலும், அதைத் தொடர்ந்து எண்ணற்ற தமிழிசைசார் இலக்கியங்களை பல தமிழிசை அறிஞர்கள் வெளியிட்டிருக்க, இசைத்தமிழை மேம்படுத்த தனியொரு இசைத்தமிழ் துறையும், அதன்பால் பல அறிஞர்களையும் உருவாக்கிட முயல்வோம். நிகழ்த்துக் கலையாம் தமிழிசைக் கலையை சீருடனும் பேருடனும் உலகறிந்திடச் செய்வோம்.

சேர்த்தவர் : ஆஷைலா ஹெலின்
நாள் : 14-May-15, 6:18 pm

இசைத்தமிழ் நூல் கருணாமிர்த சாகரம் - ஓர் அறிமுகம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே