KG மாஸ்டர் கட்டுரை (1)

தொட்டில் முதல்

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்ற வாக்கியம் பழமையானதும் பழகிப் போனதுமான ஒன்றாகிவிட்டது. உண்மையில் இந்த வாக்கியத்தை முதல் முதல் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் என்பது எமக்குத் தெரியாவிட்டாலும் இன்று வரை இது சுமந்து செல்லப்படுகின்றது என்பது மட்டும் உண்மை. நாம் தொட்டிலில் எமது வாழ்க்கையைத் தொடங்கிய போது எந்தப் பழககத்துடனும் வரவில்லையே! யார் எமக்குப் பழக்கினார்கள்? எதைப் பழக்கினார்கள்? எப்படிப் பழக்கினார்கள்?

பழக்கியவர்கள் தாம் மறைந்த பின்னரும் அதை சுடுகாடு வரைக்கும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டார்களா? இல்லையே! அப்படியாயின் தொட்டிலில் பழகியது சுடுகாடுவரைக்கும் கொண்டு செல்லப்படுவது எப்படி? யாரால் கொண்டு செல்லப்படுகிறது? இவ்வாறான வினாக்களுக்கு விளக்கம் அளிப்பது மட்டுமல்ல எனது நோக்கம். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் பக்குவத்தை உடைய குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் அவர்களை தொட்டிலில் இருந்து எங்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதயும் விளக்குவது தான் நோக்கம்.

முதலில், ஒரு குழந்தையின் ஆரம்பப் பழக்க வழக்கங்களின் போதகர்களாக, ஆசிரியர்களாக, வழிகாட்டிகளாக பெற்றோர்கள் அமைந்து விடுகிறார்கள். தாயின் மடியில் ஆரம்பிக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கை அதே அணைப்பின் உணர்வைக் கொடுக்கும் தொட்டிலுக்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. தாயின் மடியும் தொட்டிலுமாக மாறி மாறி அதன் வாழ்க்கை நகர்த்தப்படுகின்றது. இவ்வாறு நகர்த்தப்படும் காலப் பகுதியில் பல விடயங்களைக் குழந்தை கற்றுக்கொள்கிறது. கற்றலின் பெரும் பகுதி அதன் அவதானிப்பால் உள்வாங்கப்படுகின்றது. தன்னைச் சுற்றியுள்ள சக்தியின் அதிர்வலைகள் மூலம் அதன் தன்மையை உணர்கிறது. உள்வாங்குகிறது. உதாரணமாக, தாயின் குரலை அந்தக் குரல் உருவாக்கும் அதிர்வலைகள் மூலம் குழந்தை பதிவு செய்து விடுகிறது. பதிவு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் மீண்டும் அந்தக் குரலை கேட்கும் போது அந்தக் குரலை இனம் கண்டுகொள்கின்றது. இவ்வாறாக ஒவ்வொரு ஓசையும் முதலில் அதற்கு அதிர்ச்சி தருவதாக அமைந்தாலும் அந்த ஓசைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது குழந்தைக்கு அது பழக்கப்பட்ட ஒன்றாகி விடுகின்றது. இந்தக் கற்றலானது ஒலி சார்ந்த கற்றலாக அமைகின்றது. ஒலி அதிர்வு சார்ந்த கற்றலே குழந்தையின் ஆரம்பக்கற்றலின் ஒரு பகுதியாகும்.. குழந்தையின் அடுத்த கற்றல் நிலை ஒளி சார்ந்ததாக அமைகின்றது. இப்போது குழந்தையின் பார்வைக்கு உட்படுபவை எல்லாம் அதன் ஆழ்மனதில் படங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் ஒலியையும் ஒளியையும் இணைத்துக் கொள்ளும் தகுதியும் குழந்தைக்கு ஏற்படுகின்றது. இப்போது அது பதிவு செய்துள்ள குரலையும் அதற்கு உரியவரது உருவத்தையும் இனங்கண்டுகொள்கின்றது. இங்கே ஒரு குழந்தையின் கற்றல் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுவதற்கான காரணம் இக்கட்டுரையை உள்வாங்கிக் கொள்ளும் பெற்றோர்கள் ஒரு குழந்தை குறிப்பிட்ட வயதின் பின்னரே தனது கற்றலை ஆரம்பிக்கின்றது என்ற தவறான அபிப்பிராயத்தை அடியோடு அழித்துவிட்டு, குழந்தை அதன் முதலாவது மூச்சிலிருந்தே கற்க ஆரம்பிக்கின்றது என்ற உண்மையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.

அடுத்ததாக, குழந்தையின் பழக்க வழக்கங்கள் பற்றிப் பார்ப்போம். ஒரு குழந்தையின் பழக்கங்கள் என்பன அந்தக் குழந்தைக்கு நாம் கொடுக்கும் பயிற்சிகள் தான். எமது ஒரு செயல் குழந்தைக்கு அது சார்ந்த ஒரு செயலுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இந்த ஊக்கத்தின் வெளிப்பாடு குழந்தையின் குரல் (ஒலி) சார்ந்ததாகவும் அது உள்வாங்கிக் கொண்ட தன்மையைப் பொறுத்து தனது முகத்தின் பிரதிபலிப்பு (ஒளி) சார்ந்ததாகவும் அமையும். இங்கே நாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் செயற்படுத்தும் போது அந்தச் செயற்பாட்டுக்கு தொடர்ச்சியாக தனது பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் குழந்தை அதற்குப் பழக்கப்பட்டுவிடும். இது அக் குழந்தையின் பழக்கமாகி விடும். காலப் போக்கில் ஒரு குழந்தை தனக்குப் பழக்கமாக்கிக் கொண்ட ஒரு விடயத்தை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிக்கும். ஏனெனில் இப்போது குழந்தைக்கு அது வழக்கமாகிவிட்டது. எனவே ஒரு குழந்தை எதையெல்லாம் பழக்கமாக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதில் பெற்றோர்கள் அதன் தொட்டில் காலத்தில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் அந்தப் பழக்க வழக்கங்கள் எதிகாலத்தை நிர்வகிப்பதில் எவ்வாறான பங்களிப்பைச் செய்யவேண்டும் என்பதிலும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

பெரும்பாலான பெற்றோர்கள் தமது குழந்தைகளிடம் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைத் தமக்குச் சொந்தமாக்கும் தகுதியை உருவாக்குவதில்லை. மாறாக ஏற்கனவே தாம் தொட்டிலில் நீண்ட காலம் இருந்து தமக்குப் பழக்கமாகிப் பின் வழக்கமாகி, எதிர் நீச்சல் போடுவதற்கான வலிமையை இழக்கவைத்து, தாம் அடிமைகளாக்கப்படுவதற்குக் காரணமான இரவல் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், மரபுகளையும், போலியான குடும்ப அந்தஷ்துக்களையும் தமது குழந்தைகளுக்கும் தொட்டிலிலே கற்றுக் கொடுத்து அறுபது எழுபது வருடங்களுக்குச் சுமக்கவிட்டு அப்படியே சுடுகாட்டுக்கு வழிகாட்டி விடுகிறார்கள். தாம் உயிர் வாழும் காலம் வரை தமது குழந்தைகள் தொட்டிலை விட்டு இறங்குவதற்கு இந்தப் பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் தொட்டிலிலே பழக்கப்பட்டது சுகமாகிப் போனதால் இந்தக் குழந்தைகளும் தொட்டிலைவிட்டு இறங்குவதற்கு முயற்சிப்பதுமில்லை. ஏனெனில், தொட்டிலை விட்டு இறங்கினால் எங்கே போவது, என்ன செய்வது என்ற அச்சம் இவர்களுக்கு. ஆனாலும், ஆனாலும்.... ஆனாலும், முற்றுமுழுதான உள்ளுணர்வோடு இரு கரங்களையும் கூப்பி நன்றி கூறுவதற்குத் தகுதி பெற்றுள்ள பெற்றோர்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் தான் நெஞ்சுத் துணிவும் நேர்மையும் கொண்டு எதிர்காலத்தைச் சொந்தமாக்கித் தாமும் மற்றவர்களும் நற்பயன்களை அடைவதற்குத் தகுதி வாய்ந்த குழந்தைகளை இந்த உலகிற்குத் தருகிறார்கள். இவர்கள் செய்வதெல்லாம் தமது குழந்தைகளைத் தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தி, அந்தத் தொட்டிக்குள் படிப்படியாக நீர் மட்டத்தை உயர்த்தி நீச்சலைக் கற்றுக் கொடுப்பதுதான். நீந்தப் பழகிவிட்ட குழந்தை குளத்திலும் நீந்தும் கடலிலும் நீந்தும். எதிர் நீச்சலும் போடும். நேர்மையும் நெஞ்சுத் துணிவும் இயல்பாகவே அமைந்துவிடும். நிகழ் காலத்தில் வாழப் பழகிவிடும். அதனால் எதிர் காலத்தைச் சொந்தமாக்கிவிடும். தொட்டிலில் இருந்து தொட்டிக்கு நகர்த்தப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் தகுதியும் திறமையும் உருவாகும். இன்றும் நாளையும் இவர்களுக்குத்தான் சொந்தம்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (10-Jan-13, 8:48 pm)
பார்வை : 119

சிறந்த கட்டுரைகள்

மேலே