புறநானூறு பாடல் 7 - சோழன் கரிகாற் பெருவளத்தான்

சோழன் கரிகாலன் சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும் முதற்காரணமானவன். இவன் தன் தாய்மாமன் இரும்பிடர்த்தலையரிடம் கல்வி கற்று இளமையிலேயே தன் பகைவரை வென்று புகழ் பெற்றவன். நடுநிலையிலும் அரசியல் முறையிலும் தலைசிறந்தவன்.

சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினதையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன். இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாதனார் சேரநாட்டுச் சான்றோர். கரிகாலனிடத்துப் பெருமதிப்பும், பேரன்பும் உடையவர்.

இனி பாடலைப் பார்ப்போம்.

களிறு கடைஇயதாள்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
மாமறுத்த மலர்மார்பின் 5

தோல்பெயரிய வெறுழ்முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல
இல்லவா குபவா லியல்தேர் வளவ 10

தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே.

பதவுரை:

களிறு கடைஇயதாள் – யானையின் பிடரி மேலிருந்து அதனைச் செலுத்துகின்ற கால் பாதங்களையும்

கழல் உரீஇய திருந்தடி – வீரக்கழல் அணிந்த முன் வைத்த காலைப் பின் வைக்காத திருத்தமான அடியும்

கணை பொருது – அம்பொடு இணைத்து

கவி வண் கையால் – பிறர்க்கு வேண்டுவது வழங்குவதற்காக நிரம்ப அள்ளிக் கொடுக்கக் கவியும் கைகளில்

கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து – கண்களில் ஒளி விளங்கும் அழகிய வில்லும்

மாமறுத்த மலர்மார்பின் - திருமகள் பிறர் மார்பை மறுத்து, இவன் மார்பில் குடியிருக்கும்படியான அழகிய பரந்த மார்பினையும்

தோல் பெயரிய எறுழ் முன்பின் – யானைக்கு நிகரான மிக்க வலிமையுமுடைய

எல்லையும் இரவும் எண்ணாய் – பகலென்றும் இரவென்றும் எண்ணாது

பகைவர் ஊர் சுடு விளக்கத்து – பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியில்

அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை ஆகலின் – கூவியழைத்தலும், அச்சம் நடுக்கமுடன் மக்கள் அழுகின்ற ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புதலை உடையவன் ஆதலின்

நல்ல இல்ல ஆகுபவால் – நல்ல பொருள்களை இல்லாதவாறு ஆக்கும் வண்ணம்

இயல் தேர் வளவ - இயக்கப்பட்ட தேரையுடைய வளவ!

யாணர் பயன் திகழ் வைப்பின் – புது வருவாயினை உடைய செழிப்புடன் திகழும் ஊர்களையுடைய

(யாணர் - beauty, அழகு, 2 . Carpenters, stone-cutters, architects, தச்சர், 3. a good , நன்மை ; 4 . novelty, புதுமை 5 . Fertility)

பிறர் அகன்றலை நாடே – மாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடு

தண் புனல் பரந்த பூசல் – குளிர்ந்த நீர் பாயும் ஓசையையுடைய பரந்த நீர் வளங்களை

மண் மறுத்து – மண் அடைத்து

மீனிற் செறுக்கும் – மீனால் அடைக்கும்.

பொருளுரை:

யானையின் பிடரி மேலிருந்து அதனைச் செலுத்துகின்ற கால் பாதங்களையும், வீரக்கழல் அணிந்த முன் வைத்த காலைப் பின் வைக்காத திருத்தமான அடியும், அம்பொடு இணைத்து பிறர்க்கு வேண்டுவது வழங்குவதற்காக நிரம்ப அள்ளிக் கொடுக்கக் கவியும் கைகளில், கண்களில் ஒளி விளங்கும் அழகிய வில்லும், திருமகள் பிறர் மார்பை மறுத்து, இவன் மார்பில் குடியிருக்கும் படியான அழகிய பரந்த மார்பினையும், யானைக்கு நிகரான மிக்க வலிமையுமுடையவன்.

பகலென்றும் இரவென்றும் எண்ணாது பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியில் கூவியழைத்தலும், அச்சம் நடுக்கமுடன் மக்கள் அழுகின்ற ஆரவாரத்தோடும் கூடிய கொள்ளையை விரும்புதலை உடையவன்.

ஆதலின் நல்ல பொருள்களை இல்லாதவாறு ஆக்கும் வண்ணம் இயக்கப்பட்ட தேரையுடைய வளவ!

புது வருவாய் நிரம்பிய செழிப்புடன் திகழும் ஊர்களையுடைய மாற்றாரது அகன்ற பரப்புடைய நாடு குளிர்ந்த நீர் பாயும் ஓசையையுடைய பரந்த நீர் வளங்களை மண் அடைத்து மீனால் அடைக்கும் என்றும், ‘நீயோ இரவும் பகலும் அந்நாட்டுப் பகையரசர்களைப் பொருதழிக்கக் கருதி, அவர்தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் அந்நாட்டு மக்கள் அழுது புலம்பும் ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; அதனால் அந்நாடுகள் நலமிழந்து கெட்டன காண்’ என்றும் கரிகாலனிடம் கருங்குழலாதனார் எடுத்துக் கூறுவது இவரது சான்றாண்மையைப் புலப்படுத்துகிறது.

இப்பாட்டின் மூலம், இவர் கரிகாலனின் வீரத்தைப் பாடும் பொழுது, அவனது போரின் கடுமையால் பகைவர் நாடு அழிவுறுதலை எடுத்துச் சொல்லி அவன் மனதில் அருள் பிறப்பிப்பது முக்கியமானது.

இப்பாடல் வஞ்சித் திணையாகும். மண்ணாசை காரணமாக வீரர்கள் வஞ்சிப்பூவை சூடிப் பகைவர் நாட்டுடன் போரிடுவது வஞ்சித் திணையாகும்.

துறை: இது, பிறர் அகன்றலை நாடு நல்ல இல்ல ஆகுப என்று அமைதலால் கொற்றவள்ளை துறையென்றும், ஊர் சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலை என்றதால் மழபுல வஞ்சித்துறை என்றும் ஆயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-13, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 612

மேலே