புறநானூறு பாடல் 15 - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

இப்பாண்டிய மன்னன் யாகசாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்தவன் என இவன் பெயரால் அறியலாம். இவனை வாழ்த்தும் நெட்டிமையார் எனும் சான்றோர் ‘பஃறுளியாற்று மணலினும் பல்லாண்டு வாழ்க’ என வாழ்த்துதலால், இவன் குமரிக்கோடும், பஃறுளியாறும் கடல் கொள்ளப் படுவதற்கு முன்பே நம் தமிழகத்தில் வாழ்ந்த வனென்று அறியப்படுகிறது.

இப்பாட்டின் ஆசிரியர் நெட்டிமையார், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் போர் மிகுதியும், வேள்வி மிகுதியும் கண்டு வியந்து, ‘பெரும, மைந்தினையுடையோய், பகைவருடைய நல்ல கோட்டைகள் சூழ்ந்த அகன்ற இடங்களை கழுதை ஏர் பூட்டி உழுது பாழ் செய்தாய்; அவர் தேசத்து விளைநிலங்களில் தேர்களைச் செலுத்தி அழித்தாய்; காவலையுடைய பயன் தரும் நீர்நிலைகளில் களிறுகளை நீராட்டிக் கலக்கி அழித்தாய்!’

இத்தகைய சீற்றமுடையோனாகிய உன் தூசிப்படையை அழிக்க எண்ணி ஆசையோடு வந்து பொருதி அந்த ஆசை ஒழிந்து பழியுடன் வாழ்ந்தவர் பலர்; நால்வேதத்தில் கூறியபடி வேள்வி பல செய்து தூண்கள் நடப்பட்ட வேள்விச் சாலைகள் பல. பழியுற்றவர் எண்ணிக்கையோ, வேள்வித் தூண்களின் எண்ணிக்கையோ இவற்றுள் மிகை எது? என்று கேட்கிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்
புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத் 5

தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறவர
காப்புடைய கயம்படியினை 10

அன்ன சீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய 15

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவ னால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி 20

யூப நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வாருற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே. 25

பதவுரை:

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் – விரைந்து செலுத்தப்படும் தேரினால் எங்கும் குழிகளாக்கப் பட்ட தெருக்களை

வெள் வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ் செய்தனை– வெளிறிய வாயையுடைய இழிந்த மிருகக் கூட்டத்தைச் சேர்ந்த கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கினாய்

அவர் நனந்தலை நல்லெயில் – பகைவர்களின் அகன்ற இடங்களையுடைய நல்ல அரண்களையும்

புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல் – பறவையினங்கள் ஒலிக்கும் புகழுடன் கூடிய விளையும் வயல்களையும்

வெள்ளுளைக் கலிமான் கவி குளம்பு உகள - வெளிறிய பிடரிமயிர்களை உடைய குதிரைகளின் கவிந்த குளம்புகள் ஊன்றித் தாவிப்பாய

நின் தெவ்வர் தேஎத்துத் தேர் வழங்கினை – உன் பகைவர் வாழும் நாட்டில் தேரைச் செலுத்தினாய்

துளங்கியலால் பணை எருத்தின் – அசையும் தன்மையுடைய பெருத்த கழுத்தினையும்

பா வடியால் செறல் நோக்கின் – பரந்த காலடியோடு கோபம் கொப்பளிக்கும் பார்வையினையும்

ஒளிறு மருப்பின் களிறு – பிரகாசமான தந்தக் கொம்புகளையும் உடைய களிற்றை

அவர காப்புடைய கயம் படியினை – அப்பகைவரின் காவலுடைய நீர்நிலைகளில் நீராட்டிக் கலக்கி அழித்தாய்

அன்ன சீற்றத்து அனையை – அப்பேர்ப்பட்ட சினத்துடன் செயல்படும் இயல்பினை உடையவன் நீ!

ஆகலின் - ஆதலால்

விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு – தரமான இரும்பால் செய்யப்பட்ட ஆணியும், பட்டமும் அறைந்த அழகுமிகுந்த கேடயத்துடன்

நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் - நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து உன் பகைவர்

ஒண்படைக் கடுந்தார் – சிறந்த படைக்கலங்களை உடைய உனது விரைந்த தூசிப்படையின்

முன்பு தலைக்கொண்மார் – வலிமையைக் கெடுத்து அழிக்க எண்ணி

நசைதர வந்தோர் நசை பிறக்கொழிய – ஆசை யோடு வந்தோர் அந்த ஆசை அழிந்தொழிய

வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் – பழியுடன் வாழ்ந்தோர் பலரா?

புரையில் நற்பனுவல் நால்வேதத்து – ஒப்புயர் வில்லாத நல்ல தரும நூல் மற்றும் நால்வகை வேதங்களிலும் சொல்லப்பட்ட

அருஞ்சீர்த்தி – அருமை மிகுந்த புகழுக்குரிய

பெருங்கண்ணுறை நெய்ம்மலி யாவுதி பொங்க –ஒன்பது வகையான யாகத்தில் இடக்கூடிய சமிதைப் பொருட்களை நெய் மிகுந்த ஆகுதியில் இட்டு

(சமிதை - Sacrificial fuel, of which there are nine kinds, யாகத்திற்குரிய ஆல், அரசு, அத்தி, இத்தி, மா, பலாசு, வன்னி, நாயுருவி, கருங்காலி என்பவற்றின் சுள்ளி)

பன்மாண் வீயாச் சிறப்பின் – பல மாட்சிமையுடைய குறைவில்லாத சிறப்புடன்

வேள்வி முற்றி யூப நட்ட வியன் களம் பலகொல் – யாகங்கள் முடித்து தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?

யா பலகொல்லோ நினக்கே பெரும – இவற்றுள் உனக்கு எவைகள் பல, பெருமானே!

வாருற்று விசிபிணிக் கொண்ட மண்கனை முழவின் – வார் பொருத்தி இறுக்கிக் கட்டி, இனிது ஒலிக்கும்படி ஒருவகை மண்ணால் ஆகிய கருஞ்சாந்து பூசப்பட்ட முழவு வாசிப்புடன்

(மண்கனை = ஒருவகை மண்ணால் ஆகிய சாந்து;
மார்ச்சனை - 1. Black paste smeared on the head of a drum to increase its resonance, இனிது ஒலிக்க முழவில் வாய்ப்பூச்சிடும் கருஞ்சாந்து)

பாடினி பாடும் வஞ்சிக்கு – உன் படையெடுப்பு களைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப

நாடல் சான்ற மைந்தினோய் – ஆராய்ந்து அமைந்த வலிமையுடையோய்.

பொருளுரை:

விரைந்து செலுத்தப்படும் தேரினால் எங்கும் குழிகளாக்கப்பட்ட தெருக்களை வெளிறிய வாயையுடைய இழிந்த மிருகக் கூட்டத்தைச் சேர்ந்த கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கினாய்!

பகைவர்களின் அகன்ற இடங்களையுடைய நல்ல அரண்களையும், பறவையினங்கள் ஒலிக்கும் புகழுடன் கூடிய விளையும் வயல்களையும் வெளிறிய பிடரிமயிர்களை உடைய குதிரைகளின் கவிந்த குளம்புகள் ஊன்றித் தாவிப்பாய உன் பகைவர் வாழும் நாட்டில் தேரைச் செலுத்தினாய்!

அசையும் தன்மையுடைய பெருத்த கழுத்தினையும் பரந்த காலடியோடு கோபம் கொப்பளிக்கும் பார்வையினையும் பிரகாசமான தந்தக் கொம்பு களையும் உடைய களிற்றை அப்பகைவரின் காவலுடைய நீர்நிலைகளில் நீராட்டிக் கலக்கி அழித்தாய்! அப்பேர்ப்பட்ட சினத்துடன் செயல்படும் இயல்பினை உடையவன் நீ!

ஆதலால், தரமான இரும்பால் செய்யப்பட்ட ஆணியும், பட்டமும் அறைந்த அழகு மிகுந்த கேடயத்துடன நிழல் உண்டாக்கும் நெடிய வேலை எடுத்து உன் பகைவர், சிறந்த படைக்கலங்களை உடைய உனது விரைந்த தூசிப்படையின் வலிமையைக் கெடுத்து அழிக்க எண்ணி ஆசையோடு வந்தனர். அந்த ஆசை அழிந்தொழிய பழியுடன் வாழ்ந்தோர் பலரா?

ஒப்புயர்வில்லாத நல்ல தரும நூல் மற்றும் நால்வகை வேதங்களிலும் சொல்லப்பட்ட அருமை மிகுந்த புகழுக்குரிய ஒன்பது வகையான, யாகத்தில் இடக்கூடிய சமிதைப் பொருட்களாகிய ஆல், அரசு, அத்தி, இத்தி, மா, பலாசு, வன்னி, நாயுருவி, கருங்காலி என்பவற்றின் சுள்ளிகளை நெய் மிகுந்த ஆகுதியில் இட்டு மாட்சிமையுடைய குறைவில்லாத சிறப்புடன் யாகங்கள் பல முடித்து தூண்கள் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?

வார் பொருத்தி இறுக்கிக் கட்டி, இனிது ஒலிக்கும்படி ஒருவகை மண்ணால் ஆகிய கருஞ்சாந்து பூசப்பட்ட முழவு வாசிப்புடன் உன் படையெடுப்புகளைப் புகழ்ந்து பாடும் பாடினியின் பாட்டுக்கேற்ப ஆராய்ந்து அமைந்த வலிமை உடையோய்! இவற்றுள் உனக்கு எவைகள் பல, பெருமானே!

திணையும், துறையும்: ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும். இப்பாடலில் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் படை வலிமையையும், அவன் செய்யும் வேள்விகளின் பெருமையையும் போற்றிக் கூறுவதால் இது பாடாண் திணையாகும். இவ்விரண்டு செயல்களையும் எப்பொழுதும் செய்தல் இயல்பெனக் கூறுவதால், இது இயன்மொழி துறை ஆயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jun-13, 10:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 275

சிறந்த கட்டுரைகள்

மேலே