புறநானூறு பாடல் 17 - சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

சேரர் மரபில் இரும்பொறைக் குடியில் பிறந்த இச்சேரமன்னனின் இயற் பெயர் சேய் என்பது ஆகும். யானையினது நோக்குப்போலும் தீர்க்கமான நோக்கினை உடையவன் என்பதனால் இவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்படுகிறான். வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்’ என இவனைக் குறுங்கோழியூர் கிழார் பாராட்டியிருக்கிறார். இவன் தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக்கொண்டு கி. பி. 200 - 225 காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது.

இவனுக்கும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் ஒருசமயம் நடந்த போரில் இச்சேரமான் தோல்வியுற்று அவனால் சிறைப்படுத்தப்பட்டான். அச் சிறையிலிருந்து தன் வலிமையினால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் அரசு கட்டிலில் சிறப்புற்றான். நல்லிசைச் சான்றோர் பலருக்கும் இவன்பால் பெரும் ஈடுபாடு உண்டு.

இப்பாட்டின் ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் ஆவார். கோழியூர் என்பது உறையூருக்கு இன்னொரு பெயராகும். குறுங்கோழியூர் என்பது உறையூரைச் சார்ந்த ஒருபகுதி எனப்படுகிறது. இவர், இச்சேரமான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறையிலிருந்து தப்பிச் சென்று அரசு கட்டி லேறியிருக்க, அவனைக் கண்டு, ‘குடவர் கோவே, சேரர் மரபைக் காத்தவனே, தொண்டி நகரத்தோர் தலைவனே, உன்னைக் காண வந்தேன்’ என்று கூறுகின்றார்.

பாண்டியன் சிறையிலிருந்து இச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தப்பிச் சென்ற திறத்தை, தான் அகப்பட்டுக் கொண்ட குழியினின்றும் கரையைக் குத்தித் தப்பிப் போகும் யானை ஒன்றின் செயலோடு ஒப்பிட்டு இப்பாட்டின் ஆசிரியர் நயமாக உவமித்துச் சொல்லியிருக்கிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
கொடிதுகடிந்து கோறிருத்திப் 5

படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல
குலையிறைஞ்சிய கோட்டாழை
அகல்வயன் மலைவேலி 10

நிலவுமணல் வியன்கானற்
றெண்கழிமிசைச் சுடர்ப்பூவிற்
றண்டொண்டியோ ரடுபொருந
மாப்பயம்பின் பொறைபோற்றாது
நீடுகுழி யகப்பட்ட 15

பீடுடைய வெறுழ்முன்பிற்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
நீபட்ட வருமுன்பிற் 20

பெருந்தளர்ச்சி பலருவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய வுயர்மண்ணும்
சென்றுபட்ட விழுக்கலனும் 25

பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும்
ஏந்துகொடி யிறைப்புரிசை
வீங்குசிறை வியலருப்பம்
இழந்துவைகுது மினிநாமிவன்
உடன்றுநோக்கினன் பெரிதெனவும் 30

வேற்றரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழேத்திக்
காண்கு வந்திசிற் பெரும வீண்டிய
மழையென மருளும் பஃறோன் மலையெனத்
தேனிறை கொள்ளு மிரும்பல் யானை 35

உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானை யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா வீகைக் குடவர் கோவே. 40

பதவுரை:

தென்குமரி வடபெருங்கல் – தென் திசையில் குமரி மலையும், வட திசையில் இமயமும்

குணகுடகடல் எல்லையா – கிழக்கு மேற்கில் கடல் எல்லையாகவும்

குன்று மலை காடு நாடு – நடுப்பட்ட நிலத்தில் உள்ள குன்றம், மலை, காடு, நாடு என்பனவற்றை உடையோர்

ஒன்று பட்டு வழி மொழிய - ஒன்றாக வழிபட்டு ஆமோதிக்க,

கொடிது கடிந்து – தீமைகளைப் போக்கி

கோல் திருத்தி படுவதுண்டு – அரசு செம்மையாகச் செய்து, அரசர்க்குரிய இலக்கணத்துடன் ஆட்சி செய்து

பகல் ஆற்றி – நடுவு நிலைமையுடன்

இனிதுருண்ட சுடர் நேமி – நல்லபடியாக சுழற்சியும் ஒளியுமுடைய சக்கரத்தால்

முழுதாண்டோர் வழி காவல – நாடு முழுவதையும் ஆண்டோரது மரபின் காவலனே!

குலை இறைஞ்சிய கோள் தாழை - குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும்

அகல் வயன் மலை வேலி – அகன்ற வயல்களையும், மலைகளை வேலியாகவும்

நிலவு மணல் வியன் கானல் – நிலாப் போன்ற வெண்மையான மணலையுடைய அகன்ற கடற்கரையையும்

தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின் – கடலையடுத்த தெளிந்த உப்பங்கழியிடத்துப் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய

தண் தொண்டியோர் அடு பொருந – குளிர்ந்த தொண்டி என்ற ஊரில் உள்ளோர் விரும்பும் வெற்றி வேந்தனே!

மாப் பயம்பின் பொறை போற்றாது – யானை, பொய்யான நிலம் போலத் தோன்றும் பள்ளத்தை கருத்துடன் அறிந்து கொள்ளாது மனச்செருக்கால்

நீடுகுழி அகப்பட்ட – நீண்ட பள்ளத்தில் அகப்பட்டு,

பீடுடைய எறுழ் முன்பின் – பெருமையும் வலிமையும் உடைய

கோடு முற்றிய கொல் களிறு – பல இடையூறு களைக் கண்டு தேறிய கொம்பு முதிர்ந்த வயதான ஆற்றலுடைய யானை

நிலை கலங்கக் குழி கொன்று – அதன் நிலை கலங்கினாலும் அப்பள்ளத்தைத் தூர்த்து

கிளை புகலத் தலைக்கூடி யாங்கு – தன் உறவு விரும்ப, தன் இனக் கூட்டத்துடன் சென்று சேர்ந்தது போல

அரு முன்பின் – யாராலும் காண்பதற்கு அரிய உனது வலிமையால் பகையைப் பொருட்படுத்தாது

நீ பட்ட பெருந்தளர்ச்சி – உனக்கு ஏற்பட்ட பெரிய தளர்வு

பிறிதுசென்று பலர் உவப்ப – நீங்கி உன் நாட்டுக்குச் சென்றது பலரும் மகிழும்படி

மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக் கூறலின் – விரிந்த உன் சுற்றத்தார் பலர் நடுவே உயர்வாகச் சொல்லப்படுகிறது, ஆதலால்

உண்டு ஆகிய வுயர் மண்ணும் – நீ செழியனால் பிடித்து அடைக்கப்படுவதற்கு முன், உன்னால் அழிக்கப்பட்டு பின் தங்கள் அரசை அடையாது உன் வரவு பார்த்திருந்த் அரசர் இவனால் கொள்ளப்பட்டு, தன்னிடத்தே இருந்து விடுபட்டுப் போன உயர் நிலமும்,

சென்று பட்ட விழுக்கலனும் பெறல் கூடும் – இவனால் எடுத்துச் செல்லப்பட்ட சிறந்த அணிகலமும் திரும்பக் கிடைக்கவும் கூடும் எனவும்,

இவன் நெஞ்சு உறப் பெறின் எனவும் – இவனது பரிவான நெஞ்சம் நமக்கு உரித்தாகக் கிடைக்கப் பெறக்கூடுமானால் என நினைந்தும்

ஏந்து கொடி இறைப்புரிசை - உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட உயர்ந்த கொடி பறக்கும் உயர்ந்த மதிலையும்,

வீங்கு சிறை வியல் அருப்பம் - மிகுந்த காடுகள், அகழி முதலிய காவலாக உடைய அகலமான அரண்களை

நாம் இனி இழந்து வைகுதும் – நாம் இனி இழந்து இருப்போம் என்றும்

உடன்று நோக்கினன் பெரிது எனவும் – இவன் கோபத்துடன் நம்மைப் பார்த்தாலே மிகப் பெரிய செயல் என்று

வேற்றரசு – பகை வேந்தர்

பணிதொடங்கும் நின் ஆற்றலொடு புகழேத்தி – ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமாகிய உனது வலிமையையும் புகழையும் வாழ்த்துதல் பொருட்டு

காண்கு வந்திசின் பெரும – உன்னைக் காண வந்தேன் பெருமானே!

ஈண்டிய மழையென மருளும் பல் தோல் – திரண்ட முகிலெனக் கருதி அஞ்சத்தக்க கேடயங்கள் ஏந்திய பல படைகளையும்

மலையெனத் தேன் இறை கொள்ளும் இரும்பல் யானை – மலையிடத்தே கூடு அமைக்கும் இயல்புள்ள தேனினம், யானையின் மதநாற்றத்தை தேன் கொண்ட மலையெனக் கருதித் தங்கும் பெரிய பல யானைகளையும்

(தேன் = வண்டு, இறை = தங்குதல்)

உடலுநர் உட்க வீங்கி – மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால்

கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது,

கடு ஒடுங்கு எயிற்ற – நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய

அரவுத் தலை பனிப்ப – பாம்பின் தலை நடுங்க

இடியென முழங்கு முரசின் – இடியைப் போல முழங்கும் முரசினையும்

வரையா ஈகை – எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய

குடவர் கோவே – குடநாட்டார் வேந்தே!

பொருளுரை:

தென் திசையில் குமரி மலையும், வட திசையில் இமயமும், கிழக்கு மேற்கில் கடல் எல்லையாகவும், நடுப்பட்ட நிலத்தில் உள்ள குன்றம், மலை, காடு, நாடு என்பனவற்றை உடையோர் ஒன்றாக வழிபட்டு ஆமோதிக்க, தீமைகளைப் போக்கி அரசு செம்மையாகச் செய்து, அரசர்க்குரிய இலக்கணத்துடன் ஆட்சி செய்து நடுவு நிலைமை யுடன் நல்லபடியாக சுழற்சியும் ஒளியுமுடைய சக்கரத்தால் நாடு முழுவதையும் ஆண்டோரது மரபின் காவலனே!

குலைகள் தாழ்ந்து பறிப்பதற்கு ஏற்றதாக உள்ள தென்னை மரங்களையும் அகன்ற வயல்களையும், மலைகளை வேலியாகவும், நிலாப் போன்ற வெண்மையான மணலையுடைய அகன்ற கடற்கரையையும், கடலையடுத்த தெளிந்த உப்பங்கழியிடத்துப் பூத்த சிவந்த ஒளிவிடும் பூக்களையும் உடைய குளிர்ந்த தொண்டி என்ற ஊரில் உள்ளோர் விரும்பும் வெற்றி வேந்தனே!

யானை, பொய்யான நிலம் போலத் தோன்றும் பள்ளத்தை கருத்துடன் அறிந்து கொள்ளாது மனச்செருக்கால் நீண்ட பள்ளத்தில் அகப்பட்டு, பெருமையும் வலிமையும் உடைய பல இடையூறுகளைக் கண்டு தேறிய கொம்பு முதிர்ந்த வயதான ஆற்றலுடைய யானை அதன் நிலை கலங்கினாலும் அப்பள்ளத்தைத் தூர்த்து தன் உறவு விரும்ப, தன் இனக் கூட்டத்துடன் சென்று சேர்ந்தது போல, யாராலும் காண்பதற்கு அரிய உனது வலிமையால் பகையைப் பொருட்படுத்தாது உனக்கு ஏற்பட்ட பெரிய தளர்வு நீங்கி உன் நாட்டுக்குச் சென்றது பலரும் மகிழும்படி விரிந்த உன் சுற்றத்தார் பலர் நடுவே உயர்வாகச் சொல்லப்படுகிறது.

ஆதலால், நீ செழியனால் பிடித்து அடைக்கப்படுவதற்கு முன், உன்னால் அழிக்கப் பட்டு பின் தங்கள் அரசை அடையாது உன் வரவு பார்த்திருந்த் அரசர் இவனால் கொள்ளப்பட்டு, தன்னிடத்தே இருந்து விடுபட்டுப் போன உயர் நிலமும், இவனால் எடுத்துச் செல்லப்பட்ட சிறந்த அணிகலமும் திரும்பக் கிடைக்கவும் கூடும் எனவும், இவனது பரிவான நெஞ்சம் நமக்கு உரித்தாகக் கிடைக்கப் பெறக்கூடுமானால் என நினைந்தார்கள்.

உன் வரவை எதிர்பாராத பகைவர்கள், தாங்கள் கவர்ந்து கொண்ட உயர்ந்த கொடி பறக்கும் உயர்ந்த மதிலையும், மிகுந்த காடுகள், அகழி முதலிய காவலாக உடைய அகலமான அரண்களை நாம் இனி இழந்து இருப்போம் என்றும், இவன் கோபத்துடன் நம்மைப் பார்த்தாலே மிகப் பெரிய செயல் என்று பகை வேந்தர் ஏவல் செய்யத் தொடங்குவதற்குக் காரணமாகியவன் நீ!

திரண்ட முகிலெனக் கருதி அஞ்சத்தக்க கேடயங்கள் ஏந்திய பல படைகளையும் மலையிடத்தே கூடு அமைக்கும் இயல்புள்ள தேனினம், யானையின் மதநாற்றத்தை தேன் கொண்ட மலையெனக் கருதித் தங்கும் பெரிய பல யானைகளையும் மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால் கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது, நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய பாம்பின் தலை நடுங்க இடியைப் போல முழங்கும் முரசினையும் எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய குடநாட்டார் வேந்தே! உனது வலிமையையும் புகழையும் வாழ்த்துதல் பொருட்டு உன்னைக் காண வந்தேன் பெருமானே!

திணை: இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை. ’நீடுகுழி யகப்பட்ட கோடுமுற்றிய கொல்களிறு நிலைகலங்கக் குழிகொன்று கிளைபுகல’ என்பதிலிருந்து சேரமானின் வீரம் புலப்படுகிறது.

துறை: அரசவாகை ஆகும்.

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகைநாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

வரையா வீகைக் குடவர் கோவே என்று அவனின் ஈகையையும், இயல்பையும் கூறுவதால் இது இயன்மொழித் துறையும் ஆயிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-13, 11:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 469

சிறந்த கட்டுரைகள்

மேலே