தூரத்து உறவுகள்👵
வந்த பேரூந்தில்
நினைத்த நேரத்திலேறி
எங்கள் ஊருக்கு
வருவார் என் அம்மம்மா
வரும் வழியை எதிர்பார்த்திராத
எங்கள் மனம் குதூகலிக்கும்
தூரத்தில் கண்ட அவரை ஓடிச் சென்று
வாசல் வரை கூட்டி வந்து வரவேற்க
இடுப்பில் சொருகிய முந்தானையை
அவிழ்த்துச் சிறு மிட்டாய் சரையை
கொத்தாகக் கொடுப்பாள்
சிறு தூரத்திலிருந்து
திடீர் திடீர் வாசம் செய்யும் என் பாட்டி
அம்மாவின் முகம் பூரிப்பில் பூத்துக் குலுங்குமன்று; தூரமென்பது
சிறு தூரமல்ல பெரு நாடாகியது
பேரனும் பேத்தியும் பேசாமலே இருந்துவிட்டு
பேருக்கு நாலு நாள் பேரனிடம் வருவது
பேச்சாகிப் போனது; பெரு நாட்டு வாசம்
ஐரோப்பா, அமெரிக்கா வென்று
தூரதேச உறவுகள்
காசனுப்பி வைக்கும் இயந்திர மனிதர்
என்றானது; இயல் தொடர்புகள் துண்டாடப்பட்டு தொலைபேசியிலே தொலைந்து போனது இன்று!
- யோகராணி கணேசன்/நோர்வே