புறநானூறு பாடல் 20 - சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரர் மரபில் இரும்பொறைக் குடியில் பிறந்த இச்சேரமன்னனின் இயற் பெயர் சேய் என்பது ஆகும். யானையினது நோக்குப்போலும் தீர்க்கமான நோக்கினை உடையவன் என்பதனால் இவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்படுகிறான்.
இவன் தொண்டி என்னும் ஊரைத் தலநகராகக் கொண்டு கி. பி. 200 - 225 கால கட்டத்தில் ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இப்பாட்டின் ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் ஆவார். கோழியூர் என்பது உறையூருக்கு இன்னொரு பெயராகும். குறுங்கோழியூர் என்பது உறையூரைச் சார்ந்த ஒருபகுதி எனப்படுகிறது.
இப்பாட்டின் ஆசிரியர் இப்பாட்டில் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோ லாட்சியின் செம்மையைப் புகழ்ந்து, ‘செம்மலே! நீ அறம் துஞ்சும் செங்கோலையுடையை! அதனால் உன் நாட்டவர் புதுப்புள் வரினும், பழம்புள் போகினும், தீயநிமித்தமென எண்ணி, ஏதும் துன்பம் வந்துவிடுமோ என்ற நடுக்கம் சிறிதும் இல்லாது இன்பமாய் வாழ்கின்றனர். அவர்கள் உனது செம்மைப் பண்பு கருதி, உனது உயிருக்கு ஏதும் கெடுதல் வந்துவிடுமோ என் அஞ்சுகின்றனர்’ எனப் பாராட்டுகிறார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்
கவையளந் தறியினு மளத்தற் கரியை 5
அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்குந் தீயோடு
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே
திருவி லல்லது கொலைவில் லறியார் 10
நாஞ்சி லல்லது படையு மறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணா வருமண் ணினையே 15
அம்புதுஞ்சுங் கடியரணால்
அறந்துஞ்சுஞ் செங்கோலையே
புதுப்புள் வரினும் புழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
அனையை யாகன் மாறே 20
மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே.
பதவுரை:
இரு முந்நீர்க் குட்டமும் – பெரிய கடலின் ஆழமும்
வியன் ஞாலத்து அகலமும் – அகன்ற இவ் வுலகத்துப் பரப்பும்
வளி வழங்கு திசையும் – வானத்தில் காற்று செல்லும் திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு அவை – வடிவமில்லா நிலைபெற்ற ஆகாயம் என்று சொல்லப்படுபவற்றை
அளந்து அறியினுன் – அளந்து அறிய முடியும் என்றாலும்
அறிவும் ஈரமும் பெருங் கணோட்டமும் – உனது அறிவும், அன்பு கொண்ட ஈர நெஞ்சமும், பரந்துபட்ட உனது கண்ணோட்டமும்
அளத்தற் கரியை – வரையறை செய்து அளக்க முடியாத அரியவன் நீ!
சோறு படுக்கும் தீயோடு – ஆதலால் சோறு சமைக்கும் நெருப்பின் வெம்மையும்,
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிது தெறல் அறியார் – செஞ்ஞாயிற்றின் வெம்மையும் இல்லாது வேறு வெம்மை அறியார்
நின் நிழல் வாழ்வோரே – உனது ஆட்சிக் குடையின் நிழலில் வாழ்வோர்
திரு வில் அல்லது கொலை வில் அறியார் – அழகிய வானவில்லையன்றி பகைவரது கொலை வில்ல அறியார்
(திருவில் - அழகிய வில், வானவில், Rainbow)
நாஞ்சில் அல்லது படையும் அறியார் – கலப்பையை அன்றி வேறு படைக்கலமும் அறியார்
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய – போர்த் திறன் அறிந்த வீரர்களோடு சென்று பகைவர் அழிய
அப்பிறர் மண் உண்ணும் செம்மல் – அந்த பகைவர் தேசத்து மண்ணை எடுத்துக் கொள்ளும் பெருமை யுடைய தலைவனே!
நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது – உனது நாட்டின் மகளிர் சூலுற்று, மசக்கையின் பொருட்டு விரும்பி உண்ணுவதல்லாது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே – பகைவர் வெற்றி கொண்டு உண்ணப்படாத பெருமைக்குரிய மண்ணையுடையவனே!
அம்பு துஞ்சும் கடியரணால் – அம்புகளுக்கு வேலையில்லாது அமைதி கொள்ளும் காவலை யுடைய அரணுடன்
அறம் துஞ்சும் செங்கோலையே – அறமும் நிலைக்கும் செங்கோலையுடையவனே!
புதுப்புள் வரினும் புழம்புள் போகினும் – புதுப் பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் அவ்விடத்தை விட்டுப் போனாலும்
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை – அவற்றால் தீய நிமித்தம் வந்ததென்று நடுக்கமுறுதல் அறியா சேமமுடைய நாட்டின் காவலையுடையவன் நீ!
அனையை யாகன் மாறே – அத்தன்மையை உடையவனாதலால்
மன்னுயி ரெல்லா நின் அஞ்சும்மே – உன் நாட்டில் நிலைபெற்ற மக்களெல்லாம் அவர்கள் உன் மேல் கொண்ட அன்பினால் உனக்கு ஏதும் தீங்கு வந்து விடுமோ என அஞ்சுகிறார்கள்.
பொருளுரை:
பெரிய கடலின் ஆழம், அகன்ற இவ்வுலகத்துப் பரப்பு, வானத்தில் காற்று செல்லும் திசை மற்றும் வடிவமில்லா நிலைபெற்ற ஆகாயம் என்று சொல்லப்படுபவற்றை அளந்து அறிந்து கொள்ள முடியும் என்றாலும், உனது அறிவும், அன்பு கொண்ட ஈர நெஞ்சமும், பரந்துபட்ட உனது கண்ணோட்டமும் இவ்வளவுதான் என்று வரையறை செய்து அளக்க முடியாத அரியவன் நீ!
ஆதலால் உனது ஆட்சிக் குடையின் நிழலில் வாழ்வோர் சோறு சமைக்கும் நெருப்பின் வெம்மையும், செஞ்ஞாயிற்றின் வெம்மையும் அல்லாது வேறு வெம்மை அறியார்; அழகிய வானவில்லையன்றி பகைவரது கொலை வில்லை அறியார்; கலப்பையை அன்றி வேறு படைக்கலமும் அறியார்.
போர்த்திறன் அறிந்த வீரர்களோடு சென்று பகைவர் அழிய, அந்த பகைவர் தேசத்து மண்ணை எடுத்துக் கொள்ளும் பெருமையுடைய தலைவனே! உனது நாட்டின் மகளிர் சூலுற்று, மசக்கையின் பொருட்டு விரும்பி உண்ணுவதல்லாது பகைவர் வெற்றி கொண்டு உண்ணப்படாத பெருமைக்குரிய மண்ணையுடையவனே!
அம்புகளுக்கு வேலையில்லாது அமைதி கொள்ளும் காவலையுடைய அரணுடன், அறமும் நிலைக்கும் செங்கோலையுடையவனே! புதுப்பறவைகள் வந்தாலும், பழைய பறவைகள் அவ்விடத்தை விட்டுப் போனாலும் அவற்றால் தீய நிமித்தம் வந்ததென்று நடுக்கமுறுதல் அறியா சேமமுடைய நாட்டின் காவலையுடையவன் நீ!
அத்தன்மையை உடையவனாதலால், உன் நாட்டில் நிலைபெற்ற மக்களெல்லாம் அவர்கள் உன் மேல் கொண்ட அன்பினால் உனக்கு ஏதும் தீங்கு வந்து விடுமோ என அஞ்சுகிறார்கள்.
திணை: இப்பாடல் வாகைத்திணை ஆகும். வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத் திணை. ’திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப்பிறர் மண் உண்ணும் செம்மல்’ என்றும், ’புதுப்புள் வரினும் புழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை’ என்றும் குறுங்கோழியூர் கிழார் பாடுவதிலிருந்து இச்சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் வீரமும் வெற்றியும் புலப்படுகிறது.
துறை: அரசவாகை ஆகும்.
1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.
2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.
3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.
உனது அறிவும், அன்பு கொண்ட ஈர நெஞ்சமும், பரந்துபட்ட உனது கண்ணோட்டமும் வரையறை செய்து அளக்க முடியாத அரியவன் என்றும், உனது நாட்டின் மகளிர் சூலுற்று, மசக்கையின் பொருட்டு விரும்பி உண்ணுவதல்லாது பகைவர் வெற்றி கொண்டு உண்ணப் படாத பெருமைக்குரிய மண்ணையுடையவன் என்றும் இச்சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் அன்பையும், பண்பான இயல்பையும் சொல்வதால் இப்பாடல் அரச வாகையைச் சேர்ந்தது ஆகும்.