புறநானூறு பாடல் 21 - கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி

இந்த மன்னன் உக்கிரப் பெருவழுதி, பாண்டிய வேந்தருள் பழையோருள் ஒருவன். இவன் காலத்து பிற முடிவேந்தரான சேரமான் மாரி வெண்கோவும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் இவனுக்கு நண்பராய் இருந்தனர். இம்மூவரும் ஒருங்கிருந்த காட்சி கண்டு ஔவையார் மகிழ்ந்து பாடியுள்ளார். அகநானூற்றைத் தொகுப்பித்தவன் இவன் என்பர். இவன் முன்பே திருவள்ளுவரது திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்றும் கூறுவர்.

இவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவன் என்று வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது.

கானப்பேர் என்பது இப்போது காளையார் கோயில் என வழங்குகிறது. இது பாண்டிய நாட்டிலுள்ளது. தற்போதைய மதுரையிலிருந்து 63 கி.மீ தொலைவில் உள்ளது. உக்கிரப் பெருவழுதியின் காலத்தே இவ்வூர் வேங்கை மார்பன் என்ற குறுநில மன்னனுக்கு உரிய நல்ல அரணாக அமைந்து விளங்கிற்று. இவன் அம்மன்னனை வென்று அக்கானப் பேரெயிலைத் தனதாக்கிக் கொண்டான். அதனால் இவனுக்குக் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப் பெயர் வழங்குகிறது.

கானப் பேரெயில் கடந்து வெற்றி கொண்டு விளங்கும் மேம்பாட்டைக் கண்டு வியந்து ஐயூர் மூலம் என்ற ஊரைச் சேர்ந்த ஐயூர் மூலங்கிழார் என்னும் சான்றோர் இப்பாட்டில் இக்கானப் பேரெயிலின் அரண் சிறப்பை எடுத்துச் சொலி, அதற்குரியவனான வேங்கை மார்பன், ‘இனி, நம் அரண் இரும்புண்ட நீரினும் மீட்டற்கரிது’ என இரங்குமாறு இவன் அதனைக் கடந்த செய்தியைப் பாராட்டுகிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

புலவரை யிறந்த புகழ்சா றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை 5

அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென
வேங்கை மார்ப னிரங்க வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர் 10

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே.

பதவுரை:

புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல் – உன்னைப் புகழ்ந்து பாடும் புலவோரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ!

நிலவரை இறந்த குண்டு கண் அகழி – நில எல்லையைக் கடந்த பாதலத்தே உள்ள ஆழ்ந்த அகழியினையும்

வான் தோய் வன்ன புரிசை – உயரத்தால் வானைப் பொருந்துவது போன்ற மதிலையும்

விசும்பின் மீன் பூத்தன்ன உருவ ஞாயில் – மதிலில் வானத்தில் மீனைப் பூத்தாற் போன்ற வடிவுடைய அம்பெய்தற்குரிய துளைகளை உடைய ஏவல் அறையினையும்

(ஞாயில்: மதிலில் அம்பெய்தற்குரிய துளை, கோட்டையின் ஏவறை, Breast work in fortification, bastion)

கதிர் நுழை கல்லா மரம் பயில் கடிமிளை – வெயில் கதிர்கள் நுழையாத அடர்த்தியான மரங்கள் நிறைந்த காவற்காட்டினையும் உடையவனே!

அருங் குறும்பு உடுத்த கானப் பேரெயில் – நெருங்கி கைப்பற்ற முடியாத சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண்

கருங் கைக் கொல்லன் – வலிமையான கையை உடைய கொல்லனால்

செந் தீ மாட்டிய – செந்தீயினில் சுடப்பட்ட

இரும்பு உண் நீரினும் மீட்டற் கரிது என – இரும்பினில் ஊற்றப்பட்டு உண்ட நீர் திரும்பப் பெறல் இயலாதது எனக் கருதி

வேங்கை மார்பன் இரங்க – வேங்கை மார்பன் வருந்த

வைகலும் ஆடு கொளக் குழைந்த தும்பை – நாள்தோறும் வெற்றி கொள்ளத் தழைத்த தும்பை யையுடைய

புலவர் பாடு துறை முற்றிய – புலவர் பாடப்படும் துறைகளை முடித்த

கொற்ற வேந்தே – வெற்றியினை உடைய வேந்தனே!

இகழுநர் இசையொடு மாய – உன்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே மறைந்து போக

புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – வெற்றிப் புகழுடனே நீ விளங்கி உன் வேல் பொலிவதாக!

பொருளுரை:

உன்னைப் புகழ்ந்து பாடும் புலவோரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ!

நில எல்லையைக் கடந்த பாதலத்தே உள்ள ஆழ்ந்த அகழியினையும், உயரத்தால் வானைப் பொருந்துவது போன்ற மதிலையும், மதிலில் வானத்தில் மீனைப் பூத்தாற் போன்ற வடிவுடைய அம்பெய்தற்குரிய துளைகளை உடைய ஏவல் அறையினையும், வெயில் கதிர்கள் நுழையாத அடர்த்தியான மரங்கள் நிறைந்த காவற் காட்டினையும் உடையவனே!

நெருங்கி கைப்பற்ற முடியாத சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண், வலிமையான கையை உடைய கொல்லனால் செந்தீயினில் சுடப்பட்ட இரும்பினில் ஊற்றப்பட்டு உண்ட நீர் திரும்பப் பெறல் இயலாதது போல, உக்கிரப் பெருவழுதியிடமிருந்து இனி கைக்கொள்ள முடியாது எனக் கருதி வேங்கை மார்பன் வருந்த, நாள்தோறும் வெற்றி கொள்ளத் தழைத்த தும்பையையுடைய, புலவர் பாடப்படும் துறைகளை முடித்த, வெற்றியினை உடைய வேந்தனே!

உன்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே மறைந்து போக வெற்றிப் புகழுடனே நீ விளங்கி உன் வேல் பொலிவதாக!

திணை: வாகைத்திணை. வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது வாகைத்திணை. ’அருங்குறும் புடுத்த கானப் பேரெயில் கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்பு ணீரினு மீட்டற் கரிது’ என்பதிலிருந்து உக்கிரப் பெருவழுதியின் வீரமும் வெற்றியும் புலப்படுவதால் இப்பாடல் வாகைத்திணை ஆகும்.

துறை: அரசவாகை ஆகும்.

1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.

2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.

3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகைநாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.

’இகழுந ரிசையொடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே’ என உக்கிரப் பெருவழுதியின் புகழையும், வெற்றியையும் சொல்வதால் இப்பாடல் அரசவாகைத் துறை ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-13, 7:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 306

சிறந்த கட்டுரைகள்

மேலே