புறநானூறு பாடல் 33 - சோழன் நலங்கிள்ளி
சோழன் கரிகால் பெருவளத்தானின் இளைய மகனான வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி கரிகாலன் இறந்த பிறகு பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.
வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கு, கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். ஒரு சமயம், இவனுக்கும் இமயவரம்பனுக்கும் (அண்ணன் மருமகன்) இடையே போர் நடந்தது. அப்போரில் அவ்விரு மன்னர்களும் இறந்தனர். இவன் போரில் இறந்த பிறகு, இவன் மகனான நலங்கிள்ளி தன் தந்தையைப் போல், பூம்புகாரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தான்.
இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி என்றும் கூறுவர். ஒருசமயம், நலங்கிள்ளிக்கும் உறையூரை ஆண்டு வந்த நெடுங்கிள்ளிக்கும் போர் தொடங்கியது. அப்போரில் நெடுங்கிள்ளி தோல்வி யடைந்ததால், நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரியதாக்கி, தனது வரையா ஈகையால் புகழ் பெற்றான்.
தொண்டை நாட்டிலுள்ள கோவூர் என்னும் ஊரைச் சேர்ந்த சான்றோர் கோவூர் கிழார் இப்பாட்டில் இச்சோழன் நலங்கிள்ளியைப் பாடுகின்றார். இவர் சிறந்த நல்லிசைப் புலமையுடையவர். ஆசிரியர் கோவூர் கிழார் இப்பாட்டில் சோழன் நலங்கிள்ளி யின் வெற்றி நலம் குறித்து, "வேந்தே! காட்டில் தங்கி வாழும் சினம் மிக்க வேட்டை நாய்களை உடைய வேடன் மான் தசைகள் வைக்கப்பட்ட ஓலையால் புனைந்த பெட்டியும், இடைச்சியர் குடம் நிறைய கொண்டு வந்த தயிரும் ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர் பெற்றுக் கொண்டு, குளத்தின் கீழுள்ள வயல்களில் விளைந்து, வேறிடத்தே அமைத்த களத்தில் தொகுத்து, வைக்கோலும் பதரும் களைந்த தூய்மையான நெல்லை முகந்து எடுத்துக் கொடுப்பர்.
வேடரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்ற ஊர் தென் திசையில் பொதிகைமலை உள்ள பாண்டியனது நல்ல நாட்டில் உள்ளது. அங்கு அமைந்த ஏழு அரண்களின் கதவுகளை அழித்துக் கைப்பற்றி பெரிய வாயை உடைய உனது புலியைப் பொறிக்கும் வலிமையை உடையவன் நீ!
உன்னைப் பாடும் புலவர்கள் நீ பகைவருடைய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றதைப் புகழ்ந்து பாட, உன் படைவீரர்கள் பூந்தாதுக்கள் பரவியுள்ள தெருக்களில் அமைந்த பாசறைகள் பொலிவு பெற, உலராத பசுமையான இலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட மலராத முல்லை அரும்பு களாற் தொடுத்த மாலையின் பூப்பந்தைப் காண்பது போன்ற தசைகளோடு கூடிய பெருஞ்சோற்றுத் திரளையை பாணர்களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கிறார்கள். அத்தகைய சிறப்புடையது உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம்.
கைவல்லுனர்களால் புனைந்து செய்தும் வரையப்படும் அழகு பொருந்திய அல்லிப் பாவை அல்லியம் என்னும் கூத்தை ஆடும் அழகை ஒப்ப அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாக இருவராக அல்லாமல் நள்ளிரவில் தனியாக ஆண்மகன் ஒருவன் செல்வதில்லை.
அத்தகைய குளிர்ந்த மலர்களையுடைய பூஞ்சோலையின் செல்வதற்கு இனிய செறிந்த மணலையும், புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் மண்டபங்கள் தோறும் செம்மறி யாடுகளை அறுத்து உண்டு, அல்லிப்பாவைகள் ஆடும் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். பாணர் களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கும் உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம் நீ எடுத்துக் கொண்ட விழாக்கள் பலவினும் சிறப்புடையது" என்று கோவூர் கிழார் கூறுகிறார்.
இனி பாடலைப் பார்ப்போமா!
கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5
முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர் 10
தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை 15
வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்
காம விருவ ரல்லதி யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி 20
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே.
பதவுரை:
கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் – காட்டில் தங்கி வாழும், சினம் மிக்க வேட்டை நாய்களை உடைய வேடன்
மான் தசை சொரிந்த வட்டியும் – மான் தசைகள் வைக்கப்பட்ட ஓலையால் புனைந்த பெட்டியும்
வட்டி, கடகம் _ பனை யகணியால் முடையப்பட்ட பெரிய பெட்டி (Large tray made of palmyra-stems)
ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பு நிறைய – இடைச்சியர் தயிர் கொண்டு வந்த குடம் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் - ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங் களில் வாழும் மகளிர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் – குளத்தின் கீழுள்ள வயல்களில் விளைந்து, வேறிடத்தே அமைத்த களத்தில் தொகுத்து, வைக்கோலும் பதரும் களைந்த தூய்மையான நெல்லை
முகந்தனர் கொடுப்ப – முகந்து எடுத்துக் கொடுப்பர்
உகந்தனர் பெயரும் - வேடரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்ற
தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும் – தென் திசையில் பொதிகைமலை உள்ள பாண்டியனது நல்ல நாட்டில் அமைந்த
ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு – ஏழு அரண்களின் கதவுகளை அழித்துக் கைப்பற்றி
நின் பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை – பெரிய வாயை உடைய உனது புலியைப் பொறிக்கும் வலிமையை
பாடுநர் வஞ்சி பாட – உன்னைப் பாடும் புலவர்கள் நீ பகைவருடைய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றதைப் புகழ்ந்து பாட
படையோர் தாதெரு மறுகிற் பாசறை பொலிய - உன் படைவீரர்கள் பூந்தாதுக்கள் பரவியுள்ள தெருக்களில் அமைந்த பாசறைகள் பொலிவு பெற
புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த - உலராத பசுமையான இலைகளை இடையிடையே வைத்துக் கட்டப்பட்ட
மலரா மாலைப் பந்து கண்டன்ன – மலராத முல்லை அரும்புகளாற் தொடுத்த மாலையின் பூப்பந்தைப் காண்பது போன்ற
ஊன் சோற்றமலை – தசைகளோடு கூடிய பெருஞ் சோற்றுத் திரளையை
பாண் கடும்பு அருத்தும் - பாணர்களின் சுற்றத் தார்கள் உண்பதற்கு அளிக்கும்
செம்மற்று நின் வெம்முனை யிருக்கை – சிறப்புடைத்தது உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம்
வல்லோன் தைஇய – கைவல்லுனர்களால் புனைந்து செய்தும்
வரி வனப்புற்ற – வரையப்படும் அழகு பொருந்திய
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப - அல்லிப் பாவை அல்லியம் என்னும் கூத்தை ஆடும் அழகை ஒப்ப
(அல்லிப் பாவை - ஆணும் பெண்ணுமாகிய கோலமுடைய பாவை, அலிப்பேடு)
காம இருவரல்லது – அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாகிய இருவராக அல்லாமல்
யாமத்து - நள்ளிரவில்
தனிமகன் வழங்காப் பனி மலர்க் காவின் – தனியாக ஆண்மகன் ஒருவன் செல்லாத குளிர்ந்த மலர்களை யுடைய பூஞ்சோலையின்
ஒதுக்கு இன் திணிமணல் – செல்வதற்கு இனிய செறிந்த மணலையுடைய
புதுப் பூம் பள்ளிவாயில் – புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில்
மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப – மண்டபங்கள் தோறும் செம்மறியாடுகளை அறுத்து
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பல – நீ அவ்விடத்து எடுத்துக் கொண்ட விழாக்கள் பலவாகும்.
விளக்கம்:
ஏழெயில் கதவம் – ஏழெயில் என்பது சிவகங்கையைச் சார்ந்துள்ள ஏழு பொன்கோட்டை என்ற ஊராக இருக்கலாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதுகிறார்கள். இப்பாட்டில் கூறப்படும் பாண்டிய நாட்டு மருத வளமும் அவ்வூர்ப் பகுதியின் இன்றைய நிலையும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
அல்லியம் என்னும் கூத்தானது கண்ணன், கம்சன் விடுத்த யானையின் கொம்பை ஒடிப்பதற்கு ஆடிய கூத்து எனச் சிலப்பதிகார உரை கூறுகிறது. ஆணும், பெண்ணுமாகிய கோலமுடைய பாவை அல்லிப் பாவை எனப்படுவர். இக்கூத்தாடுவோர் வட்டணையும், அபிநயமுமின்றி எழுதிய ஓவியம் போல்வர். காமவிருவர் சென்றால் வருத்தம் செய்யாது, ’யாமத்து தனிமகன் வழங்காப் பனி மலர்க் காவின்’ என்று தனிமகன் அப்பொழில் வழிச் சென்றால் காமவுணர்ச்சி எழுப்பி வருத்தும் எனப்படுகிறது.
வாகைத்திணை: வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றி இப்பாடல் கூறுவதால் இப்பாடல் வாகைத்திணை ஆகும். ’தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின் பேழ்வா யுழுவை பொறிக்கும் ஆற்றல்’ என்று கோவூர் கிழார் இச்சோழன் நலங்கிள்ளியின் வெற்றியைப் பாடுவதால் இப்பாடல் வாகைத் திணை ஆகும்.
துறை: அரசவாகை. 1. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரசவாகைத் துறையாகும்.
2. ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை எனப்படுகிறது.
3. அரசவாகையில் பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் கூறப்படுகின்றன.
புதிய பூக்களையுடைய சாலைகளின் வாயில்களில் மண்டபங்கள் தோறும் செம்மறியாடுகளை அறுத்து உண்டு விழாக்கள் கொண்டாடுவதோடு, பாணர் களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கும் உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம் நீ எடுத்துக் கொண்ட விழாக்கள் பலவினும் சிறப்புடையது என்று நலங்கிள்ளியின் நல்ல் இயல்புகளைக் கூறுவதால் இப்பாடல் அரசவாகைத் துறையு மாகும்.