புறநானூறு பாடல் 35 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிமுகம் காண்க)

இப்பாடலில், இப்பாடல் ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், விளைநிலங்கட்கு குடிகள் செலுத்த வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் செலுத்தப்படாமல் அரசர்க்குக் கடனாய் விட, அதனைத் தள்ளி விட்டுத்தரல் வேண்டுமெனக் கேட்க குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை அடைந்தார்.

அவனிடம், " ‘நாடுகெழுச் செல்வத்துப் பீடுகெழு வேந்தனே! நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாக காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத வானத்தால் சூழ்ந்த மண் செறிந்த இவ்வுலகில் குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு உரியவராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தருள்ளும் அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது உன்னுடைய அரசுதான் பெருமானே!

விளங்குகின்ற சுடர்க் கதிர்களையுடைய கதிரவன் நான்கு திக்கிலும் தோன்றினாலும் ஒளிபொருந்திய கதிர்களையுடைய விண்மீன்கள் தென்திசைக்குச் சென்றாலும் அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல கால்வாய்களாகப் பிரிந்து நீர்வளம் சிறக்கிறது. அதனால் இது மூன்று இலைகளாகப் பிரிந்த வேலினை ஒப்ப காட்சி அளிக்கிறது.

அசைந்த கணுக்களையுடைய கரும்பின் வெண்மை யான பூக்கள் அசைந்தாடும் நாடென்று சொல்லப் படுவது உனது நாடே ஆகும். அத்தகைய நாட்டை உடைய செல்வமும் பெருமையும் உடைய வேந்தே! உன்னிடம் சில செய்திகள் சொல்வேன்; என்னுடைய சில வார்த்தைகளைக் கேட்பாயாக!

அறக்கடவுளே நேரில் அரசர் உருவெடுத்து ஆட்சி செய்வதைப்போல், வளையாத கோல் போன்ற செங்கோலால் ஆராய்ந்து ஆட்சி செலுத்தும் உன் ஆட்சியில் உன்னிடம் நீதி கேட்கும் பொழுது மிகவும் எளியவர்கள் இங்கு, மழைத்துளியை விரும்பி வேண்டிய பொழுது பெருமழை பெய்யப் பெற்றது போல வேண்டிய நீதியைத் தக்க சமயத்தில் பெறுவர்.

ஞாயிற்றைத் தன்மேற் சுமந்து பக்கம் திரண்ட மேகம் மேலேயுள்ள ஆகாயத்தின் நடுவில் நின்று அங்கே அதன் வெயிலை மறைப்பதுபோல் கண்ணொளியுடன் மாறுபட விளங்குகின்ற உனது வானை முட்டிய வெண்கொற்றக் குடை வெயிலை மறைத்தற்கு கொண்டதோ என்றால் அதுவல்ல! வருத்தமுற்ற குடிமக்களை நிழல் கொடுத்து காப்பதற்காகவே உள்ளது கூரிய வேலினையுடைய வளவ!

உள்ளே வயிரமில்லாத இளைய பனந் துண்டங்கள் வேறு வேறாகக் கிடப்பது போல யானைகளின் திரட்சியான கூட்டம் பொருதும் இடமகன்ற போர்க் களத்தில் வருகின்ற பகைவர் படையை எதிர் நின்று போரிட்டு பகைவர் தோல்வியுற்று புறமுதுகிடு வதைக் கண்டு ஆரவாரித்து உனது போர் செய்யும் படை தரும் வெற்றியும் உழவர்களின் கலப்பை ஊன்றி நிலத்தில் உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும்.

மழை பெய்யும் காலத்தில் பெய்யத் தவறினாலும், விளைச்சல் குறைந்தாலும் இயல்பான காரணங் களல்லாமல் செயற்கையாக மக்களது உழைப்பை யும் மீறி ஏற்பட்டாலும் அரசரையே பழித்துரைக்கும் இந்த இடமகன்ற பரந்த உலகம்.

அதனை நன்றாக அறிந்தாயென்றால் நீயும் புறம் சொல்வோரது உறுதியில்லாத சொற்களை மனதில் கொள்ளாமல் ஏரைப் பாதுகாக்கும் உழவர்களின் குடியைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைய குடிகளையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்யின், உனக்கு அடங்காத பகைவர்களும் உன் பாதங்களைப் போற்றுவர்’ என்று சோழன் கிள்ளி வளவனுக்கு வெள்ளைக்குடி நாகனார் அறிவுறுத் துகிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும 5

அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் றோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் 10

நாடெனப் படுவது நினதே யத்தை, ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவ லெனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து
முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் 15

டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய 20

குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை 25

ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
அதுநற் கறிந்தனை யாயி னீயும் 30

நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே.

பதவுரை:

நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாக

வளியிடை வழங்கா – காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத

வானஞ் சூடிய மண் திணி கிடக்கை – வானத்தால் சூழ்ந்த மண் செறிந்த இவ்வுலகில்

தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற் குரியவர் ஆகிய

முரசு முழங்கு தானை மூவருள்ளும் – முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தருள்ளும்

அரசெனப் படுவது நினதே பெரும - அரசு என்று சிறப்பித்துக் கூறப்படுவது உன்னுடைய அரசுதான் பெருமானே!

அலங்கு கதிர்க் கனலி நால் வயின் தோன்றினும் – விளங்குகின்ற சுடர்க் கதிர்களையுடைய கதிரவன் நான்கு திக்கிலும் தோன்றினாலும்

இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் – ஒளி பொருந்திய கதிர்களையுடைய விண்மீன்கள் தென் திசைக்குச் சென்றாலும்

அந் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட – அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல கால்வாய்களாகப் பிரிந்து நீர்வளம் சிறக்க

தோடு கொள் வேலின் தோற்றம் போல – மூன்று இலைகளாகப் பிரிந்த வேலின் காட்சியை ஒப்ப

ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் – அசைந்த கணுக்களையுடைய கரும்பின் வெண்மையான பூக்கள் அசைந்தாடும்

நாடெனப் படுவது நினதே – நாடென்று சொல்லப் படுவது உனது நாடே ஆகும்

நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே – அத்தகைய நாட்டை உடைய செல்வமும் பெருமையும் உடைய வேந்தே!

நினவ கூறுவல் – உன்னிடம் சில செய்திகள் சொல்வேன்

எனவ கேண்மதி – என்னுடைய சில வார்த்தை களைக் கேட்பாயாக

அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் – அறக்கடவுளே நேரில் அரசர் உருவெடுத்து ஆட்சி செய்வதைப்போல், வளையாத கோல் போன்ற செங்கோலால் ஆராய்ந்து ஆட்சி செலுத்தும் உன் ஆட்சியில் உன்னிடம் நீதி கேட்கும் பொழுது

பதன் எளியோர் – மிகவும் எளியவர்கள்

ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே – இங்கு மழைத்துளியை விரும்பி வேண்டிய பொழுது பெருமழை பெய்யப் பெற்றவரே

ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ – ஞாயிற்றைத் தன்மேற் சுமந்து பக்கம் திரண்ட மேகம்

மாக விசும்பின் நடுவு நின்றாங்கு – மேலேயுள்ள ஆகாயத்தின் நடுவில் நின்று அங்கே அதன் வெயிலை மறைப்பதுபோல்

கண்பொர விளங்கு நின் விண் பொரு வியன் குடை – கண்ணொளியுடன் மாறுபட விளங்குகின்ற உனது வானை முட்டிய வெண் கொற்றக் குடை

வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே – வெயிலை மறைத்தற்கு கொண்டதோ என்றால் அதுவல்ல!

வருந்திய குடி மறைப் பதுவே – வருத்தமுற்ற குடிமக்களை நிழல் கொடுத்து காப்பதற்காகவே உள்ளது

கூர்வேல் வளவ – கூரிய வேலினையுடைய வளவ!

வெளிற்றுப் பனந் துணியின் வீற்று வீற்றுக் கிடப்ப – உள்ளே வயிரமில்லாத இளைய பனந் துண்டங்கள் வேறு வேறாகக் கிடப்பது போல

களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை – யானைகளின் திரட்சியான கூட்டம் பொருதும் இடமகன்ற போர்க்களத்தில்

வரு படை தாங்கிப் பெயர் புறத் தார்த்து – வருகின்ற பகைவர் படையை எதிர் நின்று போரிட்டு பகைவர் தோல்வியுற்று புறமுதுகிடுவதைக் கண்டு ஆரவாரித்து

பொருபடை தரூஉம் கொற்றமும் – உனது போர் செய்யும் படை தரும் வெற்றியும்

உழுபடை ஊன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயனே - உழவர்களின் கலப்பை ஊன்றி நிலத்தில் உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும்.

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் – மழை பெய்யும் காலத்தில் பெய்யத் தவறினாலும், விளைச்சல் குறைந்தாலும்

இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும் – இயல்பான காரணங்களல்லாமல் செயற்கையாக மக்களது உழைப்பையும் மீறி ஏற்பட்டாலும்

காவலர்ப் பழிக்கும் – அரசரையே பழித்துரைக்கும்

இக் கண்ணகன் ஞாலம் – இந்த இடமகன்ற பரந்த உலகம்

அது நற்கு அறிந்தனை யாயின் – அதனை நன்றாக அறிந்தாயென்றால்

நீயும் நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது – நீயும் புறம் சொல்வோரது உறுதியில்லாத சொற் களை மனதில் கொள்ளாமல்

பகடு புறந் தருநர் பாரம் ஓம்பி – ஏரைப் பாதுகாக்கும் உழவர்களின் குடியைப் பாதுகாத்து

குடி புறந் தருகுவை யாயின் – அக்காவலாலே ஏனைய குடிகளையும் பாதுகாப்பாயானால்

நின் அடி புறந் தருகுவர் அடங்காதோரே – உனக்கு அடங்காத பகைவர்களும் உன் பாதங்களைப் போற்றுவர்.

இப்பாடல் பாடாண்திணை ஆகும். பாடு + ஆண் + திணை. பாடுதற்குத் தகுதி உடைய ஓர் ஆண் மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை.

துறை: செவியறிவுறூஉ. செல்வமும் பெருமையும் உடைய வேந்தே! உன்னிடம் சில செய்திகள் சொல்வேன்; கேட்பாயாக! உனது வானை முட்டிய வெண்கொற்றக் குடை வெயிலை மறைத்தற்கு அல்ல! வருத்தமுற்ற குடிமக்களை நிழல் கொடுத்து காப்பதற்காகவே உள்ளது வளவ!

புறம் சொல்வோரது உறுதியில்லாத சொற்களை மனதில் கொள்ளாமல் ஏரைப் பாதுகாக்கும் உழவர் களின் குடியைப் பாதுகாத்து அக்காவலாலே ஏனைய குடிகளையும் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்யின், உனக்கு அடங்காத பகைவர் களும் உன் பாதங்களைப் போற்றுவர்’ என்று சோழன் கிள்ளி வளவனுக்கு வெள்ளைக்குடி நாகனார் அறிவுறுத்துவதால் இப்பாடல் செவியறிவுறூஉ துறை ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Aug-13, 8:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 917

மேலே