புறநானூறு பாடல் 36 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

(சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அறிமுகம் காண்க)

இப்பாடலின் ஆசிரியர் ஆலத்தூர் கிழார் சோழநாட்டில் உள்ள ஆலத்தூர் என்ற ஊரைச் சார்ந்தவர் என்பதுடன், வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

இப்பாட்டில் ஆலத்தூர் கிழார், கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டு இருந்தபோது, அடைபட்டிருந்த கருவூர் மன்னன், சோழனுடைய வீரர் தன் நகர்ப்புரத்துக் காட்டிலுள்ள காவல் மரங்களை வெட்டுவதால் உண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சிக் கிடப்பது கண்டு, சோழனை நோக்கி, “வேந்தே! அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த செறிந்த பரல்கள் உடைய சிலம்பையும், சிறிய வளையல்களையும் அணிந்த மகளிர் பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து, பகைவர்களால் காணப்படும் அண்மையில், திண்ணைபோல் உயர்ந்த மணல்மேடுகளில் இருந்து விளையாடும் குளிர்ச்சியான ஆன் பொருந்தம் என்ற அமராவதி ஆற்றின் வெண்ணிறமான மணலைச் சிதற விளையாடுகிறார்கள்.

வலிய கைகளையுடைய கொல்லன் அரத்தால் கூர்மை செய்த அழகிய வெட்டு வாயினை உடைய நீண்ட கைப்பிடியுடைய கோடாலிகள் வெட்டுவதால் நின்ற நிலை குலைந்து பூமணம் கமழும் மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகி விழ, காடு முழுவதும் காவல் மரங்களை வெட்டும் சப்தம் தனது ஊரின் நீண்ட கோட்டைச் சுவரின் உள்ளே தனது காவலையுடைய அரண்மனையில் ஒலிக்கிறது.

அதைக் கேட்டும் மானமின்றி அங்கே அரண்மனை யில் மகிழ்வாக இருந்த வேந்தனுடன் இவ்விடத் தில் வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க, அவனுடன் போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல் ஆகும்.

ஆதலால், உன் பகைவனாகிய சேரனை, கருவூர் மன்னனைக் கொல்வதானாலும், கொல்லாமல் விடுவதானாலும் அவற்றால் உனக்கு வரும் பெருமையை நான் சொல்லத் தேவையில்லை, நீயே ஆராய்ந்து அறிந்து கொள். எனவே அப்போரைச் செய்யாது நிறுத்தி விடு" என்று ஆலத்தூர்கிழார் கிள்ளிவளவனிடம் கூறிப் போரை விலக்குகிறார்.

இனி பாடலைப் பார்ப்போம்.

அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் 5

கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப 10
ஆங்கினி திருந்த வேந்தனொ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே.

பதவுரை:

அடுநை யாயினும் விடுநை யாயினும் – கொல்வ தானாலும், கொல்லாமல் விடுவதானாலும்

நின் புரைமை - அவற்றால் உனக்கு வரும் பெருமையை நான் சொல்லத் தேவையில்லை

நீ அளந்தறிதி – நீயே ஆராய்ந்து அறிந்து கொள்.

வார் கோல் – அழகிய சித்திர வேலைப்பாடுகள் அமைந்த

செறியரிச் சிலம்பின் – செறிந்த பரல்கள் உடைய சிலம்பையும்,

குறுந்தொடி மகளிர் - சிறிய வளையல்களையும் அணிந்த மகளிர்

குறுந்தொடி - சிறுதொடியினைப்பூண்ட பெண் (Maiden wearing small bracelets)

பொலஞ் செய் கழங்கின் தெற்றி யாடும் - பொன்னால் செய்யபட்ட கழற்காய்களை வைத்து பகைவர்களால் காணப்படும் திண்ணைபோல் உயர்ந்த மணல் மேடுகளில் இருந்து விளையாடும்

(வேதிகை – திண்ணை, எக்கர் – மணல் மேடு)

தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய – குளிர்ச்சியான ஆன் பொருந்தம் என்ற அமராவதி ஆற்றின் வெண்ணிறமான மணலைச் சிதற

கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் – வலிய கைகளை யுடைய கொல்லன் அரத்தால் கூர்மை செய்த அழகிய வெட்டு வாயினை உடைய நீண்ட கைப்பிடியுடைய கோடாலிகளால் வெட்டுவதால்

நிலையழிந்து வீ கமழ் நெடுஞ்சினை புலம்ப – நின்ற நிலை குலைந்து பூமணம் கமழும் மரங்களின் நெடிய கிளைகள் துண்டாகி விழ

காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை – காடு முழுவதும் காவல் மரங்களை வெட்டும் சப்தம்

தன்னூர் நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப – தனது ஊரின் நீண்ட கோட்டைச் சுவரின் உள்ளே தனது காவலையுடைய அரண்மனையில் ஒலிக்க

ஆங்கு இனிதிருந்த வேந்தனோடு – அதைக் கேட்டும் மானமின்றி அங்கே அரண்மனையில் மகிழ்வாக இருந்த வேந்தனுடன்

ஈங்கு நின் சிலைத்தார் முரசம் கறங்க – இவ்விடத் தில் வானவில் போன்ற வண்ணங்கள் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முரசு ஒலிக்க

மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே - அவனுடன் போர்செய்வது வெட்கப்பட வேண்டிய செயல் ஆகும்.

விளக்கம்: பகைவர் தன்னூர்க் காவற் காட்டிற்குள் புகுந்து கடிமரம் தடியும் ஓசை தன் அரண்மனை யில் கேட்டும் போர்க்கு எழாது அரண்மனையில் இனிதிருப்பது மானமுள்ள வேந்தர் எவர்க்கும் இயலாத செயல் ஆகும்.

காவல் மரங்களைப் பகைவர் வெட்டுவதைக் காணும் தூரத்தில் அச்சமின்றிச் சென்று தெற்றி யாடும் இள மகளிர்க்குள்ள மனவலிமையும் இவ்வேந்தனிடம் இல்லை என்பதற்கு இளமகளிர் செயலை ஆலத்தூர் கிழார் எடுத்துக் கூறுகிறார்.

திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.

துறை: துணை வஞ்சி. பிறரை வெற்றி கொள்ள நிற்பவனை சமாதானப்படுத்தும் பாடல்கள் துணைவஞ்சித் துறையாகும். சேரனை வெல்ல நினைத்து அவனுடன் போர் புரியவிருக்கும் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூறிச் சமாதானம் செய்து போரை நிறுத்துமாறு ஆலத்தூர் கிழார் இப்பாடலில் கூறுவதால், இப்பாடல் துணை வஞ்சி என்ற துறை ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Sep-13, 10:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 698

மேலே