[488] -சந்தத் தமிழைச் சொந்தமாக்குவோம்..(கட்டுரை)
138869- சியாமளா ராஜசேகர் அவர்களின் சாய்-நாதரின் தாள் பணிவோம் என்ற பாடலுக்குக் கருத்தாகப் பதிவு செய்ததை மற்றத் தள நண்பர்களுக்கும் பயனாக இருக்கக் கருதி மீள்பதிவு செய்யப்படுகிறது:
-புதுக்கவிதை என எழுதும்பொழுது வசன கவிதையாகக் கூட இல்லாமல் வசனமாகவே எழுதுவதைத் தவிர்க்க உதவலாம்;
-எழுதும் கவிதையில் சீரான சந்தங்களைக் கூட்டி
அதை மேலும் அழகுடையதாகவும், இரசிக்கக் கூடியதாகவும் செய்ய உதவலாம் ;
-சியாமளா அவர்களின் கவிதையில் பெரும்பகுதி நன்றாக அமைந்திருந்தும் சந்த ஒழுங்கு செய்யப்பட்டால் இன்னும் அழகாக இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது என்பதாலும், அம்முயற்சியில் எளிதாகச் சில விடயங்களைச் சொல்ல முடிந்தது என்பதாலும் இங்கே இது அப்படியே தரப்பட்டுள்ளது- பலரும் நல்ல பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கையில்.
-----
பாபா / நாமம் / சொல்லச் / சொல்ல,
சத்குரு / பாதம் / பற்றிக் / கொண்டால்,
அன்பாய் /உருகி /வேண்டிக் /கொண்டால் '
உண்மை / யுடனுள / மாறக் /கூப்பிட (மற்றப்பட்டுள்ளது)
ஷீரடி / நாதரின் / தாள்களைப் / பணியச் (மாற்றப்பட்டுள்ளது)
சகலமும் /சாயி / எனச்சரண் / அடைந்தால்,
கருணைக் /கடலாம் / பாபா / வைத்தொழ, (மாற்றப்பட்டுள்ளது)
தயாள /சீலரைத் /தண்டனிட் /டழுதிடத் ,(மாற்றப்பட்டுள்ளது)
சாந்த / சொரூபன் / சாய்பக / வானின்,
அல்லல் / மிகுந்த / வாழ்வினில் / நமது , (மாற்றம் செய்யப்பட்டுள்ளது)
அருமருந் /தாவது / பாபா /வின்,உதி ,
பொறுமை,நம் / பிக்கை / யுடன்வேண் / டிடவே,
மதபே / தமிலா / மகானின் / லீலைகள்
மனதில் / நிறுத்திடுவோம்!
சத்குரு /சரணம் /சரணம் /என்றே
சாய்ராம்/ புகழ்சொல்வோம்!
என்று அமையக் கூடிய வகையில் சந்த ஒழுங்குக்குக் கொண்டுவந்தால் இன்னும் அழகாக இருக்கும்;
இது ஒன்றும் கடினம் இல்லை; முதலடியை ஒழுங்கு செய்ய
எல்லாம் ஈரசைச் சீர்களாகவும் ; அவற்றையும் தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்ற வாய்ப்பாடின் படியும் வரும் விதமாக அமைக்கப் பட்டுள்ளது;
இரண்டாவது அடியில் காய்ச்சீர் வரும்படியான சொற்களை ஒன்றுபோல உபயோகப் படுத்தியும் வைத்துக் கொள்ளலாம்;
உதாரணத்திற்கு:
பாவங்கள் / பறந்தோடும் /
பித்தம் / தெளிவாகும் /
அபயம் /அளித்திடுவார் /,
அதிசயம் / பல நிகழ்த்தும்/ (மாற்றப்பட்டுள்ளது)
இவற்றில் கடைசிச் சீர் மூவசைகளையுடைய காய்ச் சீராக வருவதை நோக்கவும்;
இந்த இரண்டடிகளைப் போலவே மூன்றாவது நான்காவது அடிகளையும், இந்த அடிகளை ஒற்றி எழுத முயற்சி செய்ய மொத்தத்தில் சந்தம் சீராக ஒரு ஒழுங்கான ஓசை நயத்துடன் பாடல் இன்னும் சிறப்புற வழிவகுக்கும்.
இவ்வகையான சீர், அசை, சந்த ஒழுங்குகளை எல்லோரும் அறிய ஒரு சந்தர்ப்பமாக இது அமைய வேண்டுமென்ற விருப்பமே என்னை இவற்றைத் தனி விடுகையில் அனுப்பாமல் கருத்தில் பதிவு செய்யத் தூண்டியுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அதிகப்பிரசங்கித்தனமாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
மேலும் சிறப்பாக எழுத வாழ்த்துக்களுடன் -எசேக்கியல்
-----
நன்றி