சொர்க்கமே என்றாலும்…..

தாய்லாந்தில் இருந்த போது பணி நிமித்தம் வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பொதுவாகவே வெளிநாடுகளில் உள்ள அனைவருக்குமே உள்ளது போலவே, “இந்த மாதிரியான வளர்ச்சியெல்லாம் நம் நாட்டில் சாத்தியமே இல்லையா?” என்ற ஏக்கப் பெருமூச்சு எப்போதுமே எழும்.

கூடவே எது எப்படி இருந்தாலும் ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா?’ என்ற் பாடலைப் பாடி என்னைக்கா இருந்தாலும் ஊரிலே போய் செட்டில் ஆனா தான் நிம்மதி என்றும் நினைப்போம்.

அப்படி, இப்படி என்று கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டது இந்தியாவிற்கு மீண்டும் வந்து. ரேஷன் கார்டு, லைசன்ஸ், டெலிஃபோன், கேஸ் கனெக்‌ஷன், பள்ளிக்கூட அட்மிஷன் தொடங்கி ஒவ்வொன்றுக்கும்.. ஒவ்வொன்றுக்கும்.. நாய் அலை, பேய் அலை அலைய வேண்டியிருக்கிறது.

அப்ளிகேஷன் ஃபார்ம்கள் இண்டர்நெட்டிலிருந்து டவுன்லோடி பார்த்து பார்த்து பூர்த்தி செய்து எடுத்துச் சென்றாலும் அலட்சியமாக தூக்கி மூஞ்சியில் விட்டெறிவார்கள். அவர்களைப் பொறுத்த வரை அவர்கள் அலுவலக வாசலில் 10 ரூபாய்க்கும், 20 ரூபாய்க்கும் அப்ளிகேஷன் பூர்த்தி செய்து கொடுக்கும் இடைத் தரகர்கள் பூர்த்தி செய்த அப்ளிகேஷன் தான் உலகத்திலேயே ஒழுங்கானது. நாமெல்லாம் நேரடியாகச் சென்றால் மதிப்புமில்லை, மரியாதையுமில்லை.

ஸ்பீடு போஸ்டு அனுப்பினால் ஏழெட்டு நாள் கழித்து தான் டெலிவரி ஆகும். கேட்டால் ‘அப்படித்தான்’ என்று அலட்சிய பதில்.

வீடு மாறும் போது கேஸ் கனெக்‌ஷனை சரண்டர் செய்து விட்டு புது இடத்தில் மீண்டும் பெறுவதற்குள் ஏழெட்டு பிரசவ வேதனைகளை எளிதில் அனுபவித்து விடலாம் போன்ற இம்சைகள்.

ட்ரைவிங் லைசன்ஸில் முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றால், “ஏற்கனவே இருந்த ஏரியா ஆர்.டி.ஓ. ஆஃபீஸிலேர்ந்து நோ அப்ஜெக்‌ஷன் சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு வா” என்று பதில். நான் என்ன சோமாலியாவிலே எடுத்துட்டு வந்த லைசன்ஸையா அட்ரஸ் சேஞ்ச் செய்யச் சொல்றேன்? இதே தமிழ்நாட்டுக்குள்ளே உள்ள ஒரு அரசாங்க அலுவலகத்தில் போராடிப் பெற்ற லைசன்ஸில் தற்போதைய முகவரியை மாற்ற நேரடியாக மீண்டும் பழைய ஏரியா ஆஃபீஸில் சென்று நோ அப்ஜெக்‌ஷன் சர்டிஃபிகேட் வாங்க வேண்டுமாம். எல்லாமே இணையத்தில் பதிந்து வைத்திருக்கிறீர்களே. அதில் பார்த்து சரி செய்து முகவரி மாற்றத்தை செய்து கொடுத்துத் தொலைய வேண்டியது தானே?

சிம் கார்டு விண்ணப்பித்து செயல்பட ஆரம்பித்து ஓரிரு வாரங்களில் கட் செய்கிறார்கள். கேட்டால், “உங்கள் விண்ணப்பம் வரவில்லை. மீண்டும் சமர்ப்பிக்கவும்”. அப்போ ஏற்கனவே விண்ணப்பம் இல்லாம எப்படிய்யா சிம் ஆக்டிவேட் செஞ்சீங்க? அஜ்மல் கசாப்புக்கெல்லாம் இப்படித்தான் ஆக்டிவேட் செஞ்சு கொடுத்திட்டீங்களான்னு கேட்டால் பதில் வராது.

இணைய வேகம் அதிகமாக வேண்டும் என்று பணம் கட்டி 8 Mbps ஸ்பீடு எடுத்தால் அது வரவே வராது. கேட்டால் அப்லோடு ஸ்பீடு 746 kbps என்று இருக்கிறதே.. அதான் 8 Mbps என்று இந்த Kbps / Mbps கண்டு பிடித்தவனுக்கே தெரியாத புதுக் கணக்குகளைக் காட்டி குழப்புவார்கள்.

எங்கேயுமே க்யூ பின்பற்ற வேண்டும் என்ற உணர்ச்சியே பெரும்பாலான மக்களுக்கும் இருக்காது. “நீங்க 10 பொருள் வாங்கியிருக்கீங்க சார்.. அவர் ஒண்ணே ஒண்ணு தான்” என்று க்யூவில் வராமல் முந்திச் சென்று பில் போட நீட்டி நாம் கேள்வி கேட்டவுடன் பில்லிங் போடுபவரிடமிருந்து பதில் வரும். உன் கடையிலே வந்து 10 பொருள் வாங்கினதுக்கான தண்டனையா இது?!

தியேட்டருக்குச் சென்றால் ஏ.சி.க்கு காசு வாங்கி விட்டு ஏ.சி. இருக்காது. தட்டிக் கேட்டாலும் ஒன்றும் நடக்காது.

பேருந்திலோ, ரயிலிலோ புகை பிடிக்காதீர்கள் என்றால் எவன் கேட்கிறான்?

ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் காலை நகர்த்தக் கூட இடமில்லாமல் முன் பதிவு செய்யாதவர்களையெல்லாம் அனுமதித்து உட்காரச் செய்திருப்பார்கள்.

பேருந்து நிலையங்களில் மட்டுமே இருந்த ‘அதிகபட்ச சில்லறை விலையைக் கண்டு கொள்ளாமை’ என்பது இப்போது அநேகமாக நெடுஞ்சாலையோரக் கடைகள் அனைத்திலும் பின்பற்ற ஆரம்பித்தாகி விட்டது.

சிக்னலில் பொறுமையாக நிற்பது என்பது எங்க வம்சத்துக்கே வழக்கம் கிடையாது என்று அனைவருமே சபதமேற்றிருப்பார்கள் போல. சிக்னலில் பச்சை ஒளிர ஆரம்பித்த அடுத்த விநாடியே நூறு வாகனங்களுக்குப் பின்னால் இருப்பவன் கூட ஹார்ன் ஒலி எழுப்பிக் கதற ஆரம்பித்து விட வேண்டியது!

இதையெல்லாம் பொறுக்க மாட்டாமல் தட்டிக் கேட்டால் நம்மை வேற்று கிரக ஜந்து போல விநோத லுக் விடுகிறார்கள் மக்கள்!

ஆனாலும் ஒன்று மட்டும் புரிகிறது.. நம்ம ஊரில் எதுவாக இருந்தாலும் கேள்வி கேட்டால் தான் ஒவ்வொருவரும் தான் செய்ய வேண்டிய கடமையையே வேண்டா வெறுப்பாகச் செய்கிறார்கள்.

இணையம், தகவலறியும் உரிமைச் சட்டம், முதலமைச்சருக்கு புகார் அனுப்பும் இணைய தளம் ஆகியவையெல்லாம் இல்லாவிட்டால் நாமெல்லாமும் உரிமையைக் கூட பெற இயலாத ஏதிலியர்களாகத் தான் வாழ நேரிடும் இந்த நாட்டில். கூடவே, “எல்லாருக்கும் அப்படித்தானே. உனக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்?” என்று இயலாதவர்களின் ஏளன அட்வைஸூம் கூட சேர்ந்து ‘கொல்லும்’.

எப்ப தான் மாறுமோ!?

நன்றி ;மாயவரத்தான்....
கட்டுரை தளம்

எழுதியவர் : கே இனியவன் (2-Sep-13, 8:06 pm)
பார்வை : 67

சிறந்த கட்டுரைகள்

மேலே