மண்வாசனை...!! (Mano Red)

மணக்கும் மண்குடிசைகள்,
ஒழுகா ஓட்டு வீடுகள்,
ஒதுங்கி நிற்கும்
ஒற்றை பெரிய ஆலமரம்,
ஒய்யார அய்யனார் சாமி என
மொத்தமும் சுத்தமாய்
மண்வாசனையுடன் கிராமம்..!!

புழுதி பறக்கும் தெரு,
புரவியில் பறக்கும் வேகம்,
சட்டை கழற்றும் பொடுசுகள்,
சகதி மண் களங்கள்,
உருண்டு புரண்டு வீடு சேரும் வரை
பூமி அன்னையின் மடியில்..!!

ஓரமாய் நிற்கும் மாட்டுவண்டி,
ஒரு பக்கம் மேயும் மாடு,
துணையாய் மாட்டுக்காரன்,
தூரத்தில் பனிப்புல்,
இயற்கையுடன் காதல்,
வானின் மொத்த புகைப்படமும்
இவர்களை சுற்றியே..!!!

கட்டாந்தரை வீடு,
சாணி மெழுகிய தரை,
வீடு முழுக்க கோலம்,
நுழைந்தவுடன் வாசம்,
நோய் தவிர்க்கும் சுவாசம்,
அத்தனை அறிவியலுக்கும்
அடித்தளம் இங்கே தான்..!!!

ஒற்றைப் பனைமரம்,
பாழடைந்த வீடு,
வற்றிப் போன கிணறு,
வழிநெடுக நெருஞ்சி முள்,
ஆள் அரவமில்லா காடு,
செவி வழியாய் பேய்க் கதை என
கற்பனையில் மிரட்டிய
கிழவி இயக்குனர்கள் பிறப்பிடம்..!!

பொய்யில்லாப் பாசம்,
பொல்லாப்பில்லாத நேசம்,
எல்லாரும் சொந்தம்,
மொத்தமாய்ப் பந்தம்,
சோகத்தில் பாதி,
சந்தோஷத்தில் மீதி,
என்றும் நகத்துடன் சதையாகி
மண்வாசனை மாறா மக்களுடன்
மக்கிப் போகாத கிராமங்கள்..!!!

எழுதியவர் : மனோ ரெட் (4-Oct-13, 11:54 am)
பார்வை : 74

மேலே