காட்சிப் பிழைகள் 48 மீமணிகண்டன்

காட்சிப் பிழைகள் - கசல் தொடர் - மணிமீ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(1)
பிள்ளையிவன் வணங்குதமிழ் கோலோச்சும் உலகே
பிரித்தறிந்தால் வார்த்தைகளைக் கசலிதுவும் அழகே -1

வள்ளுவரும் ஒளவையுமே சொன்னதமிழ் புதியவை
வாங்கியதை வாழ்ந்திடவே உள்மனதில் பதியவை -2

வாசமுண்டு கேட்டதுண்டோ வயலுழுதோர் பாட்டும்
வயிற்றில்பசி கொடுத்தவரை விரட்டியதோர் கூட்டம் -3

சோதனைகள் மனிதருக்கு வாழ்வினிலோர் கட்டம்
சோறுநிலம் அழித்தோர்க்கு வாழ்வேபேர் நட்டம் -4

தொலைப்பதுவோ கிராமங்களை மாற்றமென்ற பெயரால்
துயருருமே சந்ததிநீ செய்யுகின்ற தவறால் -5

நாகரிகம் என்றுசொல்லும் நாடகத்தை நிறுத்து
நலமென்ன பெருக்கிவிட்டாய் பழமையதை மறுத்து? -6

கணுக்காலும் தொடவில்லை மூதாதை சமத்தில்
கண்டதெல்லாம் நோய்நொடியே பணப்போதை யுகத்தில் -7

அவசரமாய் சேர்த்ததெல்லாம் காய்ந்தவெறும் புல்லே
ஆயிரத்தால் உன்னுயிரை நிறுத்தநீயும் சொல்லேன்? -8

கூடுமாறும் ஆவியிது குந்திடாது வீட்டில்
குவிப்பதுமேன் தவிப்பதுமேன் சொந்தமெது நாட்டில் -9
---------------------------------------------------------------------------------------------------------------------------
(2)
தொலைநோக்குச் சுருங்கியதே தோழாஅழு கின்றேன்
தொலையவில்லை மாற்றிடுவோம் துயிலாதெழு இன்றே -1

இருக்கும்வரை இறப்பதில்லை வாழ்கையெனும் கணக்கு
இருந்தவரின் அருமைகளும் புரியவேணும் உனக்கு - 2

அறம்மறந்து பொருள்படைக்க ஆக்குமொரு படிப்பு
அதுஇருந்தும் அறிவிலிதான் எதற்குஇறு மாப்பு? -3

வாயொழுகிப் பால்குடித்த வாசமது குறையா
வயதிரண்டில் வகுப்பறையில் தள்ளுவது முறையா? -4

மாராப்பு விலகுவதில் காமமில்லை - தாயும்
மாரீன்று வளர்த்தவள்தான் மறக்கவில்லை நீயும் -5

கண்வழியே காதலுண்ட ஐம்புலரே நீரும்
காத்தவராம் பெற்றோர்க்கு நற்பெயரே தாரும் -6

கற்புடையாள் காதலனின் நேசமுல்லை ஈரம்
கனியவளைப் பெண்டாள நினைப்பதில்லை வீரம் -7

வாழ்க்கையிது காட்சிப்பிழை அறிந்திடாமல் ஓடி
வழிமறந்து தடமழிந்து போனவர்கள் கோடி -8

கோடியிலே ஒருவனாக ஆகிடாது நிற்க
குறிப்பறியும் வித்தையினை நீவிடாது கற்க -9

... மீ.மணிகண்டன்
.
.
.
.
.
.
---------------------------------------------------------------------------------------------------------------------------
"ratheef வராது போனாலும் kaafiya அவசியம் வரவேண்டும்" தமிழன்பன் ஐயா அவர்களின் விளக்கத்தை மனதில் கொண்டு வரையப்பட்ட கசல். இங்கே ratheef, kaafiya, அசைகள் பிறழாத 9 சமச்சீர் கண்ணிகள், கூடவே மோனையும் கூட்டி வரையப்பட்ட கசல். திருத்தங்கள் இருப்பின் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இலக்கணச் சுத்தக் கவியை உருவாக்கிய பெருமை உங்களைச்சாரும் ! நன்றி !!!

(3)
ஏடுதந்த வள்ளுவரை என்மனதில் ஏற்று
எழுதிவைத்தேன் சிலவரிகள் தாளதனில் நேற்று -1

எனக்களித்த நேரமது கசல்பதிய இன்று
எழுத்தினிலே இணைத்தேனே நலம்பொழிய வென்று -2

வாய்ப்பளித்துத் தமிழ்வளர்க்க வந்துநின்ற ஜின்னா
வான்தொடவே உயரவென வாழ்த்துதின்று என்நா -3

...மணிமீ
---------------------------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : மீ.மணிகண்டன் (28-Jan-16, 3:01 am)
பார்வை : 305

மேலே