கொடி காத்த திருப்பூர் குமரன்

உழவும் நெசவும் போல
தீரன் சின்னமலையும்
திருப்பூர் குமரனும்
கொங்கு நாட்டின் இரு கண்கள் ....!

மனிதர்களின்
மானம் காக்கும்
நெசவு தொழில் புரியும்
சென்னிமலையில்
நீ
பிறந்ததனால் தானே
கொடியேந்தி
நம் தேசத்தின் மானம் காத்தாய்......!

கைத்தறியில்
நூல் நூற்று வாழ்ந்த
நாச்சிமுத்து முதலியாரும்
கருப்பாய் அம்மாளும்
சேர்ந்து நூற்ற
தேசத்தின் குழந்தை நீ ....!

அக்டோபர் 1904 - ல்
அவதரித்தாய்...!

வறுமை உன் குடும்பத்தை
வாட்டியெடுத்தாலும்
தேசம் சார்ந்த செய்திகளே
உன் செவிவழி உணவாயிற்று....!

குடும்பத்தின் வறுமை நீங்க
பாவோடி, கஞ்சி தோய்ந்து
சேலை நெய்து
சென்னிமலைக்கும் ஈரோடுக்கும்
தலையில் சுமந்து அலைந்தவன் நீ ...!

சுதந்தர இந்தியாவில்
இன்னும்
உன் வழித்தோன்றல்கள்
ஒட்டிய வயிறோடு
நெசவு தொழில் புரிகின்றனர்
உன் மண்வாசனையை சுமந்தவாறு ....!

நெசவுத்தொழில் வருமானம்
வாய்க்கும் - வயிற்றுக்கும்
எட்டாக்கனியாகவே இருந்ததால்
வாழ்வு மாறுமென திருப்பூருக்கு
குடும்பத்தோடு குடிபெயர்ந்தாய் .....!

பத்தொன்பது வயதில்
பதினாலு வயதான இரமாயி
வாழ்க்கை துணைவியானார்.....!

வாலிபத்தின்
வசந்த அழைப்புகளை விட
தேசபந்து வாலிபர் சங்கமே
உன் வசந்த மண்டபமாயிற்று...

வாரிசு வேண்டுமென
ஆசைப்படாமல்
வாழும் மனிதர்களுக்கு
சுதந்திரம் வேண்டுமென
ஆசைப்பட்டவன் நீ......!

சட்ட மறுப்பு இயக்க
ஊர்வலத்தில்
எழுச்சி நாயகனாய்
திருப்பூர் வீதிகளில்
சிங்கமாய் சிலிர்த்தெழுந்தவன் நீ ...!

நீ
தூக்கி சென்று
இரத்தம் சிந்தியதால் தானே
இன்று தேசியக்கொடியும் பெருமை பெற்றது....!

தலையில் தடிகளும்
உடம்பில் பூட்ஸ்களும்
புரட்டி புரட்டி எடுத்தாலும்
துடிக்கும் மீசையாய்
சிலிர்த்து பறந்தது
கொடி உன் கரங்களில் ....!

கொடியை கீழே விழாமல்
தாங்கி பிடித்தது உன் தேசிய உணர்வு .....!

உயிரை பிடுங்குவதும்
கொடியை பிடுங்குவதும்
ஒன்று என நிரூபித்தவன் நீ...!

மண்ணுக்கு சுதந்திரம் கிடைக்க
மண்ணில் ரத்தம் சிந்தினாய்
மனிதர்களுக்கு .....?

உன்போன்ற
சுதந்திர போராட்ட தியாகிகளால்
தேசியக்கொடி ஆகாயத்தில்
பறக்குது பெருமையுடன்
இன்னும் மாறவில்லை
இந்திய திருநாட்டில்
உழவனும் நெசவாளனும்
கட்டியுள்ள கோவணங்கள் .....!

இன்று
தேசியக்கொடியிலிருந்து
விழும் மலர்கள்
அன்று
உன்போன்ற தியாகிகளின்
மனைவிகளின்
கூந்தலில் இருந்து
விழுந்தவையன்றோ ....?

இளைய சமுதாயமே
இதை
நீ உணரும் நாள் எந்நாளோ ....?

எழுதியவர் : வெற்றிநாயகன் (21-Jul-12, 12:27 am)
பார்வை : 11115

மேலே