எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலைமாமணி விக்கிரம ன் அய்யா அவர்களுக்கு நினைவஞ்சலி அனைத்திந்திய...

கலைமாமணி  விக்கிரமன்  அய்யா  அவர்களுக்கு   நினைவஞ்சலி 


அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்
சங்கம் சமீபத்தில் இயற்கை எய்திய எழுத்தாளர் திரு விக்ரமன் அய்யா அவர்களுக்கான அஞ்சலி
கூட்டத்தை இன்று நிகழ்த்தியது.
   அஞ்சலி செலுத்த எனக்கும் அழைப்பு வந்து தி. நகரில் உள்ள சந்திர சேகர் கல்யாண
மண்டபத்திற்கு இன்று காலை 11.15 மணி அளவில் அடைந்தேன்.
   விக்கிரமன் அய்யா குடும்பத்தினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்
என்று
  இக்கூட்டத்தில்   கலந்து கொண்டு காலை 11.00 மணியிலிருந்தே அஞ்சலி செலுத்திக்
கொண்டிருந்தனர்.



 



நான் அத்திருமண மண்டபத்தை
அடைந்தபோது அமுத சுரபி ஆசிரியர் திரு திருப்பூர் கிருஷ்ணன் அய்யா அவர்கள்
விக்கிரமன் அய்யாவின் பெருமைகளையும் அவர் தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும்
ஆற்றிய தொண்டுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
  பின்பு ஒவ்வொருவராக மேடை ஏறி அவருக்கான இரங்கலை கவிதையாக  வடித்து வந்து வாசித்தனர். 
நேரமின்மை காரணாமாக அனைவருக்கும்

மேடையில் இரங்கலைத் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
 



 



விக்கிரமன் அய்யா அவர்களின்
மரணம் பெரு வெள்ளம் கண்ட நேரத்தில் நிகழ்ந்தபடியாலும் அவரது இல்லம் முழுதும் இடுப்பளவு
சூழ்ந்திருந்த காரணத்தினாலும் அவருக்கான ஈமக் காரியங்களைக் கூட செய்ய இயலாத சூழலில்
ஒரு சிலர் மட்டுமே அந்த வெள்ளத்தை நீந்திக் கடந்து அவரது உடலை கண்டு
வந்திருக்கின்றனர் என்பது எனது அருகாமையில் அமர்ந்திருந்த தோழி மற்றும் திரைப்பட பாடலாசிரியர்
திருமதி உமா சுப்பிரமணியம் அவர்களின் மூலமாக அறிந்து கொண்டபோது மனது மிகவும் வேதனை
அடைந்தது.
 



 



இந்த அஞ்சலிக் கூடத்தில்
முக்கிய பிரமுகராக முனைவர் திரு ம. நடராஜன் அவர்கள் கலந்து கொண்டது
குறிப்பிடத்தக்கது.
   தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர் அளிக்கும்
மரியாதையும், வரவேற்பும், சலுகைகளும் ஓரிரு வார்த்தைகளில் சொல்லிவிட இயலாது.
   இதை என் அனுபவத்தில் சொல்கிறேன்.   அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள்  சங்க உறுப்பினர்களுடன் 
பாரதியார் பிறந்த தினத்தன்று எட்டையபுரம் சென்றிருந்தேன்.
  திருநெல்வேலியில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து பாரதியார் இல்லம்,
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவர் இல்லம்,
    உமறு புலவர் நினைவிடம், தமிழூர் என்று பல இடங்களுக்கு சென்று வந்த போது திரு ம. நடராஜன் அவர்கள் உடன் வந்ததோடு நாங்கள் அனைத்து
இடங்களுக்கும் செல்ல வாகன ஏற்பாடுகள், உணவு என்று குறைவில்லாமல் செலவு செய்தது
கண்டு பிரமித்து போனேன்.
 
தங்கும் இடத்தையும் அவரேதான்
ஏற்பாடு செய்திருந்தார்.
  இரண்டு வேளை உணவு ஐந்தருவி அருகாமையில் உள்ள
அவரது விருந்தினர் மாளிகையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  உணவு உண்ணும்போது 
ஒவ்வொருவரிடத்திலும் பிடித்ததை கேட்டு சாப்பிடுங்கள் என்று உபசரித்தபோது அவர் மீது
அதிக அளவு மரியாதைதான் ஏற்பட்டது.
   இதே போன்றுதான் புதுவை நோக்கி பாவேந்தர் பாரதிதாசன்  அவர்கள் பிறந்த நாளன்றும் மற்றும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த நாளன்று சிறுகூடல் 
பட்டியிலும்
  எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த வரவேற்பும்
உபசரிப்பும் நெஞ்சை விட்டு அகலவில்லை.



 



இன்று நடந்த அஞ்சலி கூட்டத்தில்
விக்கிரமன் அய்யா அவர்கள் நடத்திக்கொண்டிருந்த "இலக்கிய பீடம்" பத்திரிக்கை
தடையின்றி வெளிவர நிதியுதவியாக
 ம.
நடராசன் அய்யா அவர்கள் ஒரு இலட்சம் வழங்கியபோது
  அவரின் மீதான மரியாதை மேலும்தான் அதிகரித்தது. 



 



சங்க செயலாளர் திரு  பெரியண்ணா  அவர்கள் பேசுகையில் என் விழிகளை நீர்
நிறைத்திருந்தது.
   அவரும்தான் பேச இயலாமல் தனது பேச்சினை
நிறுத்திவிட்டார்.
    இந்த சூழ் நிலையை ஏற்படுத்தியது விக்கிரமன்
அய்யா அவர்கள் கடைசியாக எழுதி வைத்துவிட்டு சென்றது.
  அதனை படிக்கும்போது எல்லோருடைய மனதும் கலங்கி இருக்கக்கூடும்.   என் மனதினில் படிந்துபோன அக்கடித்தத்தின்
சாராம்சம் இதுதான்.
 



 



நான் இறந்த பிறகு அனைவருக்கும்
தெரிவித்து ஆடம்பரமாக எனது ஈமக் காரியங்கள் செய்வதை நான் விரும்பவில்லை.
   எனக்குத் தெரிந்த நெருங்கியவர்களுக்கு மட்டுமே நான் இறந்துவிட்ட செய்தியை தெரிய படுத்தவும்.  (அவர் கூறியது போலவே நிறைய பேருக்கு
அறிவிக்கப்படாமல் போய்விட்டது.
 மழை
வெள்ளத்தால் இயற்கையாகவே நடந்துவிட்டது. அவருக்கு ஒரு மாலைதான் போடப்
பட்டிருந்ததாம்.
  மழை வெள்ளத்தில் எங்கும் பூக்கள் கூட
கிடைக்காமல் எப்படியோ அந்த ஒரு மாலையை வாங்கி வந்து அணிவித்திருக்கிறார்கள்)



 



எனது ஈமக்காரியங்களை எளிய
முறையில் செய்து ஆடம்பர செலவினை குறைத்து அந்த பணத்தினை உதவும் கரங்களுக்கும், சிவானந்த
குருகுலதிற்கும் அளித்து விடவும்.



 



எனது சடலத்தை
குளிப்பாட்டவோ அல்லது சம்பிரதாயங்கள் பெயரில் எனது மனைவிக்கும் எவ்வித கொடுமைகளும்
நடக்கக் கூடாது.
 



 



எனது மனைவிக்கு நான்
கட்டிய தாலியை எவரும் பறிக்க அதிகாரமோ அல்லது உரிமையோ கிடையாது.
  (மேடையில் விக்கிரமன் அய்யா அவர்களின் மனைவி சுமங்கலி யாகத்தான் மங்களமாக வீற்றிருந்தார்கள் - இக்காட்சி மனதிற்கு ஒரு நிம்மதியை
அளித்தது)



 



பதினோராம் நாள் அன்றுடன்
எனது ஈமக்காரியங்கள் முடிவுற வேண்டும்.
  அதன்பின் தொடரக் கூடாது.      


 எழுத்தாளர்களுக்கு அரசாங்கத்திடம் சலுகைகளைப் பெற்றுத் தரவும்.



 



இந்த கடிதத்தினை படித்து
முடித்திருந்தபோது நிறைய பேர் மனங்கள் அழுதிருக்கக் கூடும்.
  இந்த முறையை இச்சமூகம் பின்பற்றினால் என்ன என்றே தோன்றுகிறது. 



 



மேலும் அய்யா அவர்கள் பேனா
என்றால் மிகவும் விருப்பப்படுபவராம்.
  யார்
பேனா கொடுத்தாலும் ஆசையுடன் பெற்றுக்கொள்வாராம்.
   இந்த அஞ்சலி நிகழ்ச்சியின்  முடிவில் அனைவருக்கும் மதிய உணவினை விக்கிரமன் அய்யா அவர்களின்
குடும்பத்தாரே ஏற்பாடு செய்திருந்தனர்.
   உணவருந்திவிட்டு வெளியேறுகையில் அய்யா அவர்கள் மிகவும் விரும்பும்
அந்த பேனாவே அவர்கள் குடும்பத்தாரால் எல்லோருக்கும் பரிசளிக்கப்பட்டது.
   அந்த பேனாவைப் பெற்றுக் கொண்டு இல்லம்
திரும்புகையில் ஒரு நல்ல மனிதரை இந்த நாடு
 
இழந்து விட்டதை நினைத்து நெஞ்சம் கனக்கத்தான் செய்தது.


பதிவு : C. SHANTHI
நாள் : 13-Dec-15, 11:29 pm

மேலே