லக்ஷ்மி மணிவண்ணனின் கேட்பவரே
நவீன தமிழ்க் கவிதையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர் லக்ஷ்மி மணிவண்ணன். அவர் இதுவரை எழுதிய கவிதைகளின் தொகைநூல் ‘கேட்பவரே’. அவர் 20 வருடங்களில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான இந்நூல் இன்று திருநெல்வேலியில் வெளியிடப்படுகிறது. இத்தொகுப்பு நூலைப் ‘படிகம்' பதிப்பகம் வெளியிடுகிறது. லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் இந்நிகழ்ச்சியில் பேசுகிறார். கூடங்குள அணு எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக மணிவண்ணன் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பான ‘ஓம் சக்தி ஓம் பராசக்தி’ சமீபத்தில் கவனம்பெற்ற நூலாகும்.
தமிழ்க் கவிஞர் வெளியிட்ட மலையாள நூல்
டிசி புக்ஸ் வியாச மகாபாரதக் கதையைத் தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. வித்வான் கே.பிரகாஷ் இதன் ஆசிரியர் எல்லாத் தரப்பு வாசகர்களும் அணுகும் விதத்தில் எளிமையாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த நூல்களுக்கு மலையாள வாசகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகப் பதிப்பகத்தார் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள டிசி புக்ஸ் க்ராஸ் வேர்டு ஸ்டாலில் மார்ச் 31 அன்று நடைபெற்ற நிகழ்வில் இந்தத் தொகுப்பைத் தமிழின் மூத்த கவிஞரான சுகுமாரன் வெளியிட்டார்.
சர்வதேச விருதுப் பட்டியலில் தமிழ்க் கவிதைகள்
ரோசெஸ்டர் (Rochester) பல்கலைக்கழகத்தின் இலக்கிய மையமான த்ரீ பெர்செண்ட் (Three Percent) உலக அளவில் சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கான விருதை வழங்கிவருகிறது. 2016 -ம் ஆண்டுக்கான இவ்விருதின் முதல் பட்டியலில், ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வைல்டு வேர்ட்ஸ் (Wild Words) என்னும் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பு, சல்மா, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி ஆகியோர் எழுதிய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாகும். முதலில் இந்தக் கவிதைகளின் இருமொழிப் பதிப்பை காலச்சுவடு பதிப்பகமும் சங்கமும் இணைந்து வெளியிட்டிருந்தது. பின்னர் ஹார்பர் காலின்ஸ் இதன் ஆங்கிலப் பகுதியை வைல்டு வேர்ட்ஸ் என்ற தொகுப்பாக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.